Thursday, August 10, 2006

அம்பிகாபதி அமராவதி - 19 -

மூன்றாம் நிகழ்ச்சி: மூன்றாங் காட்சி

களம்: தஞ்சைச் சிவபிரான் திருக்கோயில்

நேரம்: காலை

{சோழன், சோழன் மனைவி, அவர் மகள் அமராவதி, குலசேகர பாண்டியன், அமைச்சர், காவலாளர் முதலியோர் வருகின்றனர்.}


சோழன்:

இவ் விளவேனிற்காலத் துவக்கத்தின் காலை வேளை பனிக்காலக் கழிவில் தோன்றியிருத்தலால், தண்ணெனும் புனலிற் தலைமுழுகி இறைவனைத் தொழச் செல்வார்க்கு ஈது எவ்வளவு இனியதாய்க் காணப்படுகின்றது! சிறிதே மூடிய பனியினைக் கீறிக்கொண்டு புறப்படும் பகலவன் அரக்கரின் மாயவலையினைக் கிழித்துக் கொண்டு புறப்படுந் திருமாலின் திகிரிப் படைபோல் திகழ்தலைப் பார்மின்கள்!


அமைச்சர்:

ஆம் பெரும!இக்கதிரவனது வட்ட வடிவந் தேன்முற்றிய தேனடை போலவும், அதிலிருந்து பாயுங் கதிரொளிகள் அவ்வடையிலிருந்தொழுகுந் தேன் போலவும், இரவெல்லாங் கூடுகளில் அடங்கிக்கிடந்து பசியோடு எழும் பல்வகைப் பறவைகளும் அவ்வொளியினை நோக்கிப் பறந்து செல்வது அத்தேன் ஒழுக்கினைப் பருகச் செல்வது போலவுங் காணப்படுகின்றன.


அரசி:

அமைச்சர் இத்தோற்றத்தினை உவமித்துச் சொல்லிய பான்மையில் இயற்கைக் காட்சியே ஓர்அழகிய ஓவியமாய்த் துலங்கா நிற்கின்றது! மேலும் பாருங்கள்! கதிரவன் ஒளிதோய்ந்த இக்கோயிற் கொடு முடிமேற்காணுந் திருக்குடமானது, " வானவர் பாற்கடலிற் பெற்ற குடத்தின் அமிழ்தமானது என்றுமே சாவா நிலையினைப் பயப்பதன்று: மற்று என்னகத்தே நிரம்பிய அமிழ்தமோ சிவபிரான் திருவருட் பேரமிழ்தாமாகும்; அதனை, நீவிர் பருகி என்றுமழியா அருட்பேரின்பத்தைப் பெறும் பொருட்டே இக்கோபுரமாகிய பூதத்தின் தலைமேற் சுமக்கப்பட்டு வானளாவி நிற்கின்றேன்" எனப் புகன்று திகழ்வதுபோற் காணப்படுகின்றது!


அமைச்சர்:

! ; யாங்கள் கூறிய புனைந்துரையினும் அரசியர் இயம்பிய புனைந்துரையே, இறைவனை வழிபடச் செல்லும் எமக்கு இறைவன்றன் அருள் வழக்கத்தினை நினைப்பித்து, இந்நேரத்திற்குச் சாலச்சிறந்ததாய்த் தோன்றுகின்றது!


கோமாளி:

ஐயையோ! இந்தக் கோவுரம் பூதமா? இதின் வாய்க்குள்ளவா நாம்ப எல்லாம் நுளையப்போறோம். அம்மா! மாராசா! நான் வரமாட்டேன். என்னை விட்டுடுங்கோ! என் பெண்டாட்டிக்கி யாரு துணை? எனக்குச் சாமியும் வேணாம் பூதமும் வேணாம்.


{எல்லோருஞ் சிரிக்கின்றனர்}


சோழன்:

ஏடா துத்தி! இது கோபுரந்தானடா. பூதம் அன்று; பூதம்போற் பெரிய வடிவமாகக் காணப்படுவதால் அரசி அங்ஙனஞ் சொன்னாள். உனக்குக் கண் இல்லையா? நன்றாய்ப் பார்! அஞ்சாதே!


கோமாளி:

(தன் கண்களைத் தடவிப் பார்த்து) ஆமா, மாராசா! எனக்குக் கண் இருக்கு, இருக்கு, ஆமா இது கோவுரந்தான். அது மேலே உள்ள குடத்திலே அமுதம் இருக்கு என்று அம்மா சொன்னாங்களே; அதிலே எனக்கு (குடங்கையைக் காட்டிக் கெஞ்சுகின்றான்.)


சோழன்:

நாம் கோயிலினுள்ளே சென்று சிவபிரானையும் பிராட்டியையும் வணங்கியதும், முக்கனியுங் கற்கண்டுந் தேனும் பாலும் கலந்த தேவாமிர்தம் உனக்கு ஏராளமாய்க் கிடைக்கும்.

(கோமாளி முடக்கிய கையை விலாப்புடையில் அடித்துக் கெண்டும் நாவைச் சுவைத்துக்கொண்டும் வர, எல்லாரும் நகைத்தபடியாய்க் கோயிலினுள்ளே சென்று இறைவனையும் இறைவியையுந் தொழுது நிற்கக், குருக்கள் வழிபாடு நடத்த, முடிவில்)


சோழன்:

(அமராவதியை நோக்கி) அம்மா அமராவதி! நீ இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் நன்கு பயின்று வரும் பயிற்சியினை இங்கே கடவுள் முன்னிலையிலும் நம் அரண்மனையிலும் பலகாற் பாடியும் ஆடியுங் காட்டியதனை நாங்கள் கண்டு களித்திருக்கின்றோம். ஆனால், இங்கே வந்திருக்கும் நின் அருமை மாமன் குலசேகர பாண்டியன் அவற்றைக் கேட்டதும் பார்த்ததும் இல்லை. ஆதலால் அம்மையப்பர் மேல் நீயே ஒரு கலிப்பாட்டு இயற்றி அதனை யாழில் இட்டுப் பாடி அதனை நடித்துங்காட்டி எங்களை மகிழ்வி.


{குலசேகரன் அமராவதியின் பாட்டையும் ஆட்டத்தையுங் காணவுங் கேட்கவுந் தனக்கெழும் பேராவவினை முகத்தாலுங் கையாலுங் குறிப் பிடுகின்றான்; எல்லாரும்அங்ஙனமே; ஆனால், அமராவதி நாணத்துடன் நிற்க.}


அரசி:

அம்மா! குழந்தே! இதற்கேன் இவ்வளவு வெட்கம்! குலசேகரன் என்னுடன் பிறந்த என் தம்பி தானே. அவன் நீள உன்னுடன் பழகாவிட்டாலும் அவன் உனது கல்வித் திறமையைக் காணுதற்கு எல்லா வகையிலும் உரிமையுடையவனே. ஆகையால் உன் தந்தையார் செல்லுகிறபடியே செய்! (அமராவதியின் முகத்தை யுயர்த்தி நெற்றியைத் துடைக்க)


அமராவதி:

(தாய் தந்தையரை வணங்கி ) அப்பா விரும்பியபடியே செய்கிறேன் அம்மா! (எல்லாருங் கடவுளெதிரே அமர, அமராவதியும் அமர்ந்து யாழைக் கையிலெடுத்துத் தான் இறைவன்மேல் இய்ற்றிய இசைப்பாவினை அதிலிசைத்துப் பாடுகின்றாள்.)


தேவிற் சிறந்த சிவனே செழுங்குவளைப்

பூவிற் பொலிந்த புகழுமையைப் புல்கினையே

பூவிற் பொழிந்த புகழுமையைப் புல்கிலையேல்

நாவிற் புகலுதற்கு நல்லுயிரொன் றுண்டாமோ?


மங்கையொரு குறுடையாய் மாதவனாய் நீயமர்ந்து

பொங்கு சடையும் புலித்தோலும் பூண்டனையே

பொங்கு சடையும் புலித்தோலும் பூண்டிலையேல்

இங்குளார் எல்லாம் இணைவிழைச்சில் இழிகுவரே!


முப்புரங்கள் செற்றனையோ மும்மலங்கள் செற்றனையோ

எப்புரமும் எரிக்கவல எந்தாய்க் கெது சிறப்பு?

எப்புரமும் எரிக்கவல எந்தாய்க் கிரண்டொன்றாம்

அப்புரங்கள் அழித்ததனை அருஞ்செயலாய் அறைகுவரோ?


குலசேகரன்:

! ! எளிதாக இனிதாகத் தமிழ்ப் பாட்டுக் காட்டியது மல்லாமல் அமராவதி அதனை யாழில் இசைத்துப் பாடியதும் என்னறிவையே பிறிதாக்கி விட்டது!


சோழன்:

(மகிழ்ந்து) மைத்துன! இப்பாட்டின் பொருளைப் புதல்வி நடித்துக் காட்டுவதும் நன்றாயிருக்கின்றதா வென்று பாருங்கள்! (அமராவதியை நோக்கி) அம்மா அமராவதி! நீ பாடிய இவ்வினிய பாட்டின் பொருளைச் சிறிது நடித்துக் காட்டி எல்லாரையும் உவப்பி!

{அமராவதி அங்ஙனமே நடிக்க எல்லாரும் மிக மகிழ்கின்றனர்)


குலசேகரன்:

அமராவதியின் நடக்காட்சி பேரின்பக் காட்சியாகவே விளங்குகின்றது! இதற்கு மேல் எனக்கு ஏதுஞ் சொல்லத் தெரியவில்லை.


சோழன்:

மைத்துன! நீங்கள் மீண்டும் மதுரை செல்லும் வரையில் இடை இடையே கன்னிமாடத்திற்சென்று அமராவதியின் முத்தமிழ்ப் பயிற்சியையுங் கண்டுங் கேட்டுங் களிக்கலாம்.


குலசேகரன்:

அதற்காக உங்களை மிகவும் வணங்குகின்றேன். அமராவதியின் ஆடல் பாடல்களைக் கண்டு கேட்டுக்களிப்பதினும் வேறெனக்கியாது வேண்டும்?

(எல்லாரும் அம்மையப்பரைத் தொழுதபின குருக்கள் அரசன் முதலயோர்ககெல்லாம் திருநீறளித்து அமராவதிக்கு அஃதளிக்கையில்)


குருக்கள்: முத்தமிழ்ச் செல்வமே! முத்தமிழையுமே முக்கண்ணாய்க்கொண்ட சிவபிரான் பிராட்டி திருவரளால் நீ நினக்கினிய காதலனை விரைவிற்பெற்று இனிது வாழக் கடவாய்!

{கடவுட்குப் படைத்த பூ பழும் முதலியன பெற்றுக்கொண்டு எல்லாரும் அரண்மனைக்கு ஏகி விட்டனர்)
வரும் 19 ல்

4 comments:

குமரன் (Kumaran) said...

அருமையாக இருக்கிறதையா. அடுத்தப் பகுதி எப்போது வரும்?

கடந்த இரு பகுதிகளையும் படிக்கும் போது ஒரு ஆவல் மனதில் எழுகிறது. தாங்கள் மறைமலையடிகளார் எழுதிய இந்த நாடகக் காவியத்தை வலையேற்றுகிறீர்கள். செந்தமிழ் கொஞ்சி விளையாடுகிறது இந்த நாடகத்தில். ஆனால் இந்தக் காலத்தவர் உவந்து படித்துப் புரிந்து கொள்ளுமளவிற்கு எளிதாக இருக்கிறதா என்றால் இல்லை எனவே சொல்லலாம். நீங்கள் பதம் பிரித்துக் கொடுக்கிறீர்கள். இதனை இன்னும் எளிதாக இக்காலத்தவரும் புரிந்து கொள்ளும் படி எழுத வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. ஐயன் அருள் இருந்தால் வருங்காலத்தில் நடைபெறும்.

ENNAR said...

குமரன்,
இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என நானும் நிணைத்தேன் அவ்வாறு செய்தால் அதனுடைய தன்மை மாறிவிடும் எனத்தான் யோசிக்கிறேன்.
பார்ப்போம்

bala said...

Ennar அவர்களே,

அற்புதம்.

படித்த மகிழ்ச்சியில்,நெகிழ்ச்சியானேன்.

அடுத்த பதிவுக்கு காத்துக்கொண்டிருக்கும்,

பாலா

ENNAR said...

பாலா
நன்றி