Friday, July 01, 2005

சேது சமுத்திரதிட்டம்


சேது சமுத்திரத்திட்டம் நல்ல திட்டம் தானே இதை ஏன் சிலர் எதிர்க்க வேண்டும்

ஊர் சுற்றி போகமல் குறுக்கு வழியில் செல்வதால் பயண தூரம் மிச்சம் தானே


எ.கா:

முதல் முடிய சுற்று குறுக்கு மீதம

கண்ணியாகும சென்னை 755 487 248

" வைசாக் 1014 724 290

" கொல்கத் 1357 1103 254

தூத்துக்குடி சென்னை 769 345 424

" வைசாக் 1028 662 366

" கொல்கத் 1371 1041 330


அதுசரி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பவர்கள் பெருங்கடலை ஏன்? சமுத்திரம்

என வைத்துள்ளர் ஐயா ராமதாஸ் என்ன சொல்லப்போகிரார்
சேதுகடல்

12 comments:

Voice on Wings said...

நீங்கள் கூறுவதும் சரிதான். 'சமுத்திரம்' என்பதற்கு சரியான தமிழ்ச் சொல் கண்டுபிடிப்பது குறித்தே நாம் கவலையடைய வேண்டும்.

நீங்கள் கொடுத்த சுட்டி Microsoft தளத்திற்குச் செல்கிறது. :) சரியான சுட்டி இதுவே. கூடவே அந்தத் தளத்திலுள்ள இந்தப் பக்கத்தையும் படியுங்கள்.

இராம.கி said...

ஏன் இந்த அளவிற்கு எல்லாவற்றிலும் மருத்துவர் இராமதாசை உள்ளே கொண்டுவந்து ஒட்டவைத்துப் பார்க்கவேண்டும் என்று புரியவில்லை. அப்படி என்ன ஓர் இனம் புரியாத வெறுப்பு? ஏன் திருப்பித் திருப்பிப் பித்துப் பிடித்தாற் போல் மருத்துவர் மேல் நிலைகுத்திக் கிடக்க வேண்டும் (நிலைகுத்தல் = obsession)? உலகத்தில் நடக்கின்ற எல்லாவற்றிற்கும் மருத்துவர் இராமதாசில் வந்து தான் காரணம் தேடுவீர்கள் போலிருக்கிறது.

சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டம் சரியில்லை என்று உங்களுக்குத் தோன்றுகிறதா? அதைப் பற்றி எழுதுங்கள். எங்களால் புரிந்து கொள்ளமுடியும். அதைச் சரியான முறையில் செய்யவில்லை என்று தோன்றுகிறதா? அதைப் பற்றி எழுதுங்கள். நாங்கள் படித்துப் பார்க்கிறோம். திட்டத்தில் பழுது என்று நினைக்கிறீர்களா? அதைப் பற்றி எழுதுங்கள். நாங்கள் தெரிந்து கொள்ளுகிறோம். அதைவிடுத்து இதனை இராமதாசோடு இணைத்து, இன்னும் போய் தமிழில் பெயர்வைப்பது பற்றி இணைத்து, இதெல்லாம் என்ன தாவல்? ஓர் அளவு, தரம் என்பதெல்லாம் கிடையாதா? வாய்க்கு வந்தபடியெல்லாம் எழுதப் புகுவது எப்படி?

இப்போதைய உங்கள் கேள்வி - இந்தக் கால்வாய்க்குத் தமிழில் பெயர் வைக்கவில்லையா?

தெரிந்துதான் பேசுகிறீர்களா என்று தெரியவில்லை. நான் விடை சொல்லுகிறேன், கேட்டுக் கொள்ளுகிறீர்களா? தமிழ்நாடு தனிநாடாய் ஆகியிருந்தால் தமிழில் பெயர்வைத்திருப்பார்கள். (விடாதே, பிடி, இவன் தனிநாடு பற்றிப் பேசுகிறான், என்று திரிக்க முனைபவர்களுக்குச் சொல்லிக் கொள்வது: நான் இந்தியக் குடிமகன்.) இது இந்திய நடுவண் அரசு ஏற்படுத்தியுள்ள நிறுவனம். இதற்கு நூற்றுக்கு நூறு இந்தியிலோ, அன்றி ஆங்கிலத்திலோ தான் பெயர் வைப்பார்கள். அதற்குத் தமிழில் பெயர்வைக்க வேண்டும் என்றால் இந்திய ஆட்சிச் சட்டங்களை மாற்றப் போராடுங்கள். இந்திய நாட்டில் தமிழும் ஒரு ஆட்சிமொழியாக வேண்டும் என்று கூக்குரல் இடுங்கள். அதை விடுத்து மருத்துவர் இராமதாசை இதில் பகடைக்காய் ஆக்காதீர்கள். இந்த நிறுவனத்திற்குப் பெயரிடுவதற்கும் இராமதாசிற்கும் கொஞ்சம் கூடத் தொடர்பு கிடையாது.

இனி சமுத்ரம் என்ற சொல் பற்றிக் கேட்டது.

சமுத்திரம் என்ற இருபிறப்பிச் சொல்லுக்குப் பெருங்கடல் என்ற பொருள் தானாக வரவில்லை. இன்றைக்கு வெறுமே எண்ணெய் என்றால் அது மொட்டையாகக் கேட்டதாகப் பொருள் கொள்ளுவர். கடலை எண்ணெயா, தேங்காய் என்ணெயா, அல்லது நல்ல எண்ணெயா என்று சொல்ல வேண்டும். பெயரடை (adjective) இல்லாமல் பொருள் விளங்குவது இல்லை. அதுபோல ஜல சமுத்ரம் என்ற வகையில் ஒரு பெயரடை முன்னொட்டு ஆக இருந்தால் தான் பெருங்கடல் என்ற பொருள் வரும்.

சமுத்ரம் என்ற சொல்லின் பிறப்பை அறியத் தமிழில் வராமல் முடியாது. கும்>கும்முதல்>குமிதல் என்ற தமிழ்வினையடி சேருதல் என்ற பொருளைத் தரும். குமிதல் என்பது தன் வினை. குமித்தல் என்பது பிறவினை. குமித்தம்/குமுத்தம் என்பது சேர்த்து வைத்ததைக் குறிக்கும் பெயர்ச்சொல். தென்மொழி/வடமொழிப் பரிமாற்றங்களில் (இவை இருவழிப் பரிமாற்றங்கள்; ஒருவழி மட்டுமே அல்ல.) குகர/சகரப் போலி பலநேரம் ஊடு வந்து நிற்கும். நம்முடைய குமுகம் அவர்களுடைய சமுகம் ஆக உருமாறும். அப்படித்தான் குமுத்தம் சமுத்தம் ஆகி வழக்கம் போல ரகரம் ஊடுருவி சமுத்ரம் ஆகும்.

இனிச் ஜலம் என்னும் சொல். சலசல என்று ஓசை எழுப்பும் நீர் சலம்>ஜலம் என்ற பெயரைக் கொள்ளும். (இது போன்ற ஓசைவழிச் சொற்கள் பல மொழிக்குடும்பங்களிலும் காணக் கிடைக்கும். ஒரு குடும்பம் மட்டும் சொந்தம் கொண்டாட முடியாது.) ஜலம் என்னும் சொல்லும் சமுத்ரம் என்னும் சொல்லும் சேர்ந்து வடமொழியில் ஜலசமுத்ரம் என்ற கூட்டுச் சொல்லை உருவாக்கும். நாளாவட்டத்தில் புழக்கத்தின் காரணமாய் ஜல என்பது தொகுக்கப்பட்டு சமுத்ரம் என்பதே கடலைக் குறித்தது. ஜல சமுத்ரம் போல ஜன சமுத்ரம் என்ற கூட்டுச் சொல்லையும் ஊன்றிக் கவனியுங்கள். சமுத்ரத்தில் உள்ள தீவு சமுத்ரத் தீவு>சுமத்ரத் தீவு>சுமத்ராத் தீவு.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதற்கெடுத்தாலும் எள்ளல் பேசக் கூடாது நண்பரே! அப்படி ஒரு பழக்கம் நோய் போல வலைப்பதிவு உலகத்தில் பரவிக் கொண்டு இருக்கிறது. அது உறவுகளை வளர்க்காது. வெறும் விவாதங்களை மட்டுமே கூட்டும்.

நமக்குள் கொஞ்சம் பொறுமை, மாற்றுக் கருத்துள்ளோரை மதிக்கும் தன்மை, மற்றவனுக்கும் அறிவிருக்கும், கொஞ்சம் கேட்போம் என்று நினைக்கும் தன்மை ஆகியவை வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.

Voice on Wings said...

இராம.கி., நீங்கள் யாரைக் குறித்துக் கோபப்படுகிறீர்கள் என்றுப் புரியவில்லை.

மருத்துவரை இகழ்ந்து நானும் எதுவும் சொல்லவில்லை, இந்தப் பதிவிட்டவரும் தவறாக எதுவும் கூறியதாக எனக்குப் படவில்லை. சேதுசமுத்திரத் திட்டத்திலுள்ளக் குறைகளை என்னால் முடிந்த வரை பட்டியலிட்டு விளக்கிக் கொண்டிருக்கிறேன். அது உங்கள் கவனத்தைப் பெறுமென்றால் மகிழ்ச்சியே.

பலரின் வயிற்றிலடிக்கும் ஒரு திட்டம் நமக்குத் தேவையா என்ற கேள்விகளுக்கிடையே, அதற்கு தமிழில் பெயர் வைக்கவில்லையா என்று விவாதத்தைத் திசை திருப்பும் வகையில் இந்தப் பதிவு அமைந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.்திட்டம் மருத்துவரை சிறுமைப் படுத்துவதல்ல என் நோக்கம். மற்றபடி, 'சமுத்திரம்' என்ற சொல்லின் பின்னணியை விளக்கியதற்கு நன்றி.

மூர்த்தி மற்றும் என்னார், எந்த அடிப்படையில் இந்தத் திட்டம் சாதகமானதே என்றுக் கூறுகிறீர்கள் என்று தெரிவிக்க முடியுமா? கன்னியாகுமரியிலிருந்தும், தூத்துக்குடியிலிருந்தும் சென்னைக்குக் கப்பல் ் விடப்போவதில்லை. அமெரிக்காவிலிருந்தோ, ஐரோப்பாவிலிருந்தோ பல நாட்கள் அல்லது வாரங்களாகப் பிரயாணம் செய்து சென்னை (அல்லது கல்கத்தா / வைஸாக்) வந்து சேரும் கப்பலுகளுக்கு, பயணத்தில் ஒரு சில மணி நேரங்கள் குறைவதால் பெரிதாக என்ன ஆதாயம் வந்து விட முடியும்? அதற்கு நம் ஏழை மீனவர்களை பலிகடாக்களாக்குவது எவ்வகையில் நியாயம்?

SnackDragon said...

//மருத்துவரை இகழ்ந்து நானும் எதுவும் சொல்லவில்லை, இந்தப் பதிவிட்டவரும் தவறாக எதுவும் கூறியதாக எனக்குப் படவில்லை//
வாய்ஸ், யாரும் ராமதாசு அவர்களை தவறாக பேசவில்லை. ஆனால் , சேது சமுத்திரப் பிரச்சினைக்கு
வலிந்து மருத்துவரவர்களை என்ன அடிப்படியில் இழுக்கிறீர்கள் என்பதுதான் இராம.கி கேட்டது,

சமுத்திரம் தமிழ்ச்சொல் என்று தெரியாமலே , வெறுமே தமிழில் பெயர்வைக்கவில்லையா என்பதும், அதற்கு ராமதாசவர்களை எள்ளுவதும் அசமந்தமானது. :-(

"சலம்" குறித்து, "தணிகாசலத்"திலும், வெங்கடா"சலத்திலும் தமிழ் சலத்தைப் பார்க்கலாம். :-)

Voice on Wings said...

கார்த்திக், இராமதாசை எள்ளியதாக வைக்கப்படும் குற்றச்சாட்டின் அடிப்படைதான் என்ன? நானோ அவர் பெயரையும் குறிப்பிடவில்லை. அவ்வாறு செய்த என்னாரும் எள்ளும் நோக்கத்தோடு அதைச் செய்ததாகத் தெரியவில்லை. எனது (முதல்) பின்னூட்டத்தில் எள்ளல் தொனி இருந்ததென்றால், அது என்னாரை நோக்கியேயன்றி மருத்துவரை நோக்கியல்ல. இது தெளிவு படுத்தியிருக்குமென்று நம்புகிறேன்.

SnackDragon said...

/அதுசரி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பவர்கள் பெருங்கடலை ஏன்? சமுத்திரம்
என வைத்துள்ளர் ஐயா ராமதாஸ் என்ன சொல்லப்போகிரார்
சேதுகடல்/
வாய்ஸ் இதுதான் காரணம். இதற்கும் உங்களுக்கும் நேரடித்தொடர்பில்லையென்றே நினைக்கிறேன், நான் வாசித்தவரையில். நன்றி.

குழலி / Kuzhali said...

இராம.கி. அய்யா சமுத்திரத்தின் சரித்திரத்தை புரிய வைத்ததற்கு நன்றி,
//ஏன் திருப்பித் திருப்பிப் பித்துப் பிடித்தாற் போல் மருத்துவர் மேல் நிலைகுத்திக் கிடக்க வேண்டும் (நிலைகுத்தல் = obsession)? உலகத்தில் நடக்கின்ற எல்லாவற்றிற்கும் மருத்துவர் இராமதாசில் வந்து தான் காரணம் தேடுவீர்கள் போலிருக்கிறது.
//
நீங்கள் கூறியது சரிதான்

இராம.கி. அய்யா தங்களிடம் சில விளக்கங்கள் அறிந்துகொள்ள ஆசை தங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

ENNAR said...

மருத்துவர் ராமதாஸ் திரைபடங்களுக்கு ஆங்கலத்தில் பெயர் வைத்தற்கு போராட்டம் நடத்தியவர் தமிழ் அல்லாத எழுத்துக்கள் பெயர் பலகைகள் தாங்கியிருந்தால் அதற்கு தாரடித்தவர் சமுத்திரம் என்ற வடசொல்லுக்கு என்ன சொல்லப் போகிறார் என்று தானே சொல்லியிருந்தேன் .
சலம் என்றால் மலை
சுவாமி வேதாச்சலம் என்ற தமிழ் அறிஞர் தன் பெயர் வடமொழியில் இருப்பதால் தமிழ்மொழிக்கு வந்து மறைமலை அடிகள் என மாற்றிக்கொண்டார்

சலம் என்றால் தண்ணீர் என்று எந்த அகராதியில் கண்டார் நண்பர.

இராம.கி said...

நண்பர் இரத்தினவேலுவுக்கு,

நீங்கள் வலைப்பதிவிற்குப் புதியவர் என எண்ணுகிறேன்.

கீழே வருவது உங்களின் கேள்விக்கு விடை சொல்லும் வகையில், ஓர் எற்பாட்டு நேரப் பொழுதைச் (2PM - 6 PM) செலவழித்து, புலவர் இரா. இளங்குமரனின் "தமிழ் வளம் - சொல்" என்ற பொத்தகத்தில் (திருவள்ளுவர் தவச்சாலை, திருவளர் குடி (அல்லூர்) திருச்சி மாவட்டம் 620 101), 34ம் அதிகாரம் சலம் என்பதைத் தட்டச்சி அனுப்பியது.

நான் தட்டுபுட்டென்று எதையும் எழுதக் கூடியவன் அல்லன். விவரம் தெரிந்ததால் எழுதினேன். சலம் தமிழ் தான். சமுத்திரம் இருபிறப்பி.

எல்லாவற்றிற்கும் தமிழ்ப்பாதுகாப்பை உள்ளே இழுக்காதீர்கள். சேதுக் கால்வாய் திட்டத்திற்கும் மருத்துவர் இராமதாசிற்கு எத்துணை தொடர்பில்லையோ, அதேபோல தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கும் அந்தத் திட்டத்திற்கும் தொடர்பில்லை.

தமிழை முடிந்தால் காப்பாறுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். போகும் போது வரும்போதெல்லாம் அறவடி கொடுக்க, ஊருக்கு இளைத்த ஆண்டியாய் தமிழ் மொழி இல்லை.

(நண்பர் கார்த்திகேயன் இராமசாமிக்கு: வெங்கடாசலம் என்பது வேங்கட+அசலம்; அருணாசலம் என்பது அருண + அசலம். அசலம் என்பதும் ஓர் இருபிறப்பி. அசையாதது எனவே மலை என்ற பொருள் கொள்ளும். அதை வேறொரு முறை விளக்கிச் சொல்ல முயலுவேன்.
குழலிக்கு: என் மின்னஞ்சலை தமிழுலகம், ராகாகி, அகத்தியர், சந்தவசந்தம், மின்சுவடி போன்ற மடற்குழுக்களில் கண்டுபிடித்துவிடலாம். உங்களுக்குக் கேள்விகள் இருந்தால் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள்.)

அன்புடன்,
இராம.கி.

இனி இளங்குமரன்:

வாய்க்காலில் நீர் ஓடுகின்றது. அதில் ஒருவன் தன் கையை வைத்து 'நில் நில்' எனத் தடுக்கின்றான். நீர் நில்லாமல் 'சலசல' என்ற ஒலியுடன் ஓடுகின்றது. கையை வைத்து நீரைத் தடுத்தவனுக்கு, தான் தடுத்து நிறுத்தியதற்கு நீர் அழுவது போல் தோன்றுகிறது! அதனால், "இரைந்ததென் அழுவையோ! செல்!செல்!" என விடுத்தான். இது மனோன்மணியத்தில் வரும் காட்சி.

நீர் இரைச்சலிட்டுச் செல்வது எவரும் அறிந்தது. நீரின் இரைச்சல் ஒலி வெவ்வேறு வகையாகக் கேட்கும். அதனால் அருவி, முழவம் போல் ஒலிக்கிறது என்றும், கல்லெனக் கரைந்து வீழ்கிறது என்றும், ஒல்லெனத் தவழ்கிறது என்றும், சலசல என்று ஓடுகிறது என்றும், ஒலிக்குறிப்போடு சொல்வது வழக்காயிற்று. இவ்வொலிக் குறிப்புகளில் ஒன்றே சல், சல், சல, சல, சலம் என அமைந்ததாம்.

நீர் 'சலசல' என்னும் ஒலியுடன் ஓடுவதால் 'சலம்' என்னும் பெயர்பெற்றது. 'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்' என்றார் அப்பரடிகள். 'சல சல மும்முதம் சொரிய' என்பதும் ஒரு தமிழ்ப்பாடல் அடியே! (சீவக.82)

'சலம்' ஆகிய நீர் சமையலுக்குக் கட்டாயம் வேண்டும். அச்சமையல் அறையிலே தான் கலங்களைத் தேய்த்தல், கழுவிக் கொட்டல், வடித்தல் ஆகியன நிகழும். ஆதலால், அவ்வறைக்குள் வடிக்கப்பட்ட நீர் புறம் போதற்கு வாய்ப்பாகக் குழியும், குழையும் அமைப்பர். அவ்வமைப்பின் பெயர் 'சலக் கால் புரை' என்பதாம். அதுவே 'சலக்காப்புரை', 'சலக்கப்புரை' என வழங்கப் படுகிறதாம். சலம் - நீர்; கால் - வழி; புரை - துளை.

சலக்கால்புரைக்கு இன்னொரு பெயர் 'அங்கணம்' என்பது. அங்கணக்குழி என்பதும் அதுவே. அகம் + கண் + அம் = அங்கணம் எனப்பட்டதென்க.

"அங்கணத்துள் உக்க அமிழ்தை" கூறும் திருக்குறள்.
"ஊரங்கண நீரை" உரைக்கும் நாலடியார்.

அங்கணம் 'சலதாரை' எனவும் வழங்கும். நீர் ஒழுகுமிடமே 'சலதாரை' என்க. நீர் பள்ளம் நோக்கி நீண்டு செல்வது. ஆதலால் அது 'தார்' என்றும், 'தாரை' என்றும் வழங்கப்படும். 'தாரை வார்த்தல்' என்பது நீர் வார்த்தல் தானே!

ஓடை ஆறு முதலியவற்றில் ஓடும் நீர், இறுதியில் கடலில் கூடுதல் இயற்கை. 'சலம்' கூடும் இடத்திற்கு - கடலுக்கு - 'சலதி' என்பது ஒரு பெயர். "தமிழென்னும் அளப்பருஞ் சலதி" என்பார் கம்பர். (தாடகை. 38)

பல கிண்ணங்களில் பல்வேறு அளவுகளில் நீர்விட்டு ஒலிக்கும் இசைக்கருவி 'சலதரங்கம்' எனப்படுவதும், கலிப்பாவின் உறுப்புகளில் ஒன்று 'அம்போதரங்கம்' எனப்படுவதும் எண்ணத் தக்கன.

கடல்நீர் அலைதல் இடையீடு இல்லாதது. "அலை ஓய்வது எப்போது? தலை முழுகுவது எப்போது?" என்னும் பழமொழியே அலையின் இடையீடற்ற அலைவைத் தெரிவிக்கும். அவ்வலைபோல் அலைபாயும் உள்ளமும் 'சலம்' எனப்படும். அவ்வுள்ளமுடையான் 'சலவன்' என்றும் அவ்வுள்ளமுடையாள் 'சலதி' என்றும் கூறப்படுவர். "சலம்புணர் கொள்கைச் சலதி" என்றார் இளங்கோவடிகள். 'சலம்' என்பது வஞ்சகம் என்னும் பொருளையும், 'சலதி' என்பது வஞ்சகி என்னும் பொருளையும் தருவனவாம்.

'சலவர்' என்பது கடலோடிகளையும், முத்துக் குளிப்பவர்களையும் குறிக்கும். 'சலங்குக்காரர்' என்பவர் முத்துக் குளிப்பவரே. 'சலாபம்' என்பது முத்துக் குளித்தலைக் குறிக்கும். நீராடுவாரைச் 'சலங்குடைவர்' என்னும் பரிபாடல் (10.90). 'சலகை' என்பது தோணியையும், 'சலஞ்சலம்' என்பது வலம்புரிச்சங்கையும் (சீவக. 184), 'சலம்புகன்று' என்பது மாறுபட்டுரைத்தலையும் (மதுரைக்காஞ்சி 112) குறித்தல் அறியத் தக்கன.

நீரில் தோய்த்து வெளுக்கும் தொழில் 'சலவை' எனப்படுவதும், வெளுக்கப்பட்ட துணி 'சலவைத் துணி' எனப்படுவதும், புத்தம்புது பணத்தாள் சலவைத்தாள் எனப்படுவதும், சலவைத்தூள், சலவைக்கட்டி என சவர்க்காரக் வகைகள் வழங்கப்படுதலும், நீர் ததும்பி வழிதலும் ஓயாது பேசுதலும் 'சலம்புதல்' எனப்படுவதும் வழக்கில் உள்ளமை அறிந்தால், 'சலம்' என்னும் பொருட்பெருக்கம் நன்கு விளங்கும்.

ஒரு சொல்லில், வேற்றெழுத்து ஒன்றை அமைத்து எழுதிவிட்டதால் மட்டும் வேற்றுச்சொல் ஆகிவிடாது என்பதும், ஒரு வேரடியில் வந்த பலசொற்கள் கிடைக்குமாயின், அச்சொல்லின் மூலம் அம்மொழிக்குரியதே என்பதும், குறிப்பாக ஒலிக்குறிப்பு வழிவந்த சொல் ஒன்றிற்கு மேற்பட்ட இரு மொழிகளிலும் கூட இடம்பெறக் கூடுமென்றும் அறிதல் வேண்டும்.

நீர், புனல் முதலிய சொற்கள் பெருவழக்கில் இருந்தமையால் 'சலம்' என்பது அருகிக் காணப்படுவது கொண்டும், 'ஜலம்' என்னும் சொல்லில் இருந்து வந்தது என்பார் கருத்தைக் கொண்டும், அடிப்படைக் கரணியம் தெளிவாக அமைந்துள்ள சொல்லை வேற்றுச் சொல்லென விலக்க வேண்டுவதில்லை எனத் தெளிக.

பெட்டியும், பெட்டியில் உள்ள பொருளும் நம்முடையவையாய் இருக்க, எவரோ ஒருவர் பெட்டிமேல் வைத்த பொட்டு ஒன்றால் மட்டும் அவர் பெட்டியும் அவர் பொருளும் ஆகிவிடும் எனலாமா?

இராம.கி said...

வேதாசலம் என்பதும் வேத + அசலம் என்றே அமையும். மறைமலை அடிகள் அன்றையப் புரிதலில் வேதம் என்பதை மறை என்றும், அசலம் என்பதை மலை என்றுமாய் மாற்றிக் கொண்டார். இன்றையப் புரிதலில் வேதம், அசலம் என இரண்டுமே இருபிறப்பி என்று அறிகிறோம்.

அன்புடன்,
இராம.கி.

ENNAR said...

நல்லது திரு. கிருஷ்ணா அவர்களே தங்களிடம் நிரம்ப தெரிந்து கொண்டேன்
நான் வலைதளத்துக்குப் புதியவன் தான்
எனக்காக இவ்வளவு சிறமம் எடுத்துக்கொண்டதற்கு நன்றி.
சுமார் நான்கு மணிநேரம் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
என்னார

SnackDragon said...

அன்புள்ள இராம.கி,
மிக்க நன்றி. அசலம் என்பது அசையாதது என்ற பொருளில் வரும் என்று எனக்குத்தெரியாது. "அசரம்" என்பது அசையாதது என்று தெரிந்திருந்தேன். சரா'சரத்தில் வருவது போல். ஒருவேளை, அசலத்துக்கும் அசரத்துக்கும் அசையாத தொடர்பேது இருக்கலாமோ? தெரியவில்லை. மேலும் சலேந்திரன் என்ற யோகியர் ஒருவரின் பெயரையும் கேள்விப்பட்டதுண்டு.

"தமிழ்வேதம்" என்று பாவிப்பதை திருமூலரில் பார்க்கமுடியும்.

**உங்கள் மேற்சொன்ன இரண்டு பதிகளையும் ஒரு பதிவில் போட்டுவைத்தால் அழியாமல் இருக்கும்.**

நன்றி மீண்டும் நேரஞ்செலவழித்தமைக்கு.