Tuesday, May 30, 2006

அம்பிகாபதி அமராவதி - 18 -

அமராவதி:-

ஆம். அதற்கு இதனை ஒப்பாக உரைத்தல் பொரும்பாலும் இசையாததேயாம். ஆயினுஞ், சுவாமி! காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார், திலகவதியார், பரவையார், சங்கிலியார் முதலான தெய்வக் கற்பரசிகளின் வரலாறுகளை ஆசிரியர்

சேக்கிழார் நுவலுமாறு போலவே, கண்ணகி, மாதவி என்னும் கற்பணங்குகளின் வரலாறுகளை ஆசிரியர் இளங்கோவடிகளும் எமது நெஞ்சம் நெக்கு நெக்குருக இயம்பி இருக்கின்றார். அவ்வாற்றால் அவ்விருகாப்பியங்களுந் தம்முள் ஒக்குமன்றோ?

அம்பிகா:

இளவரசியார் அவ்விரண்டுக்கு முள்ள ஒற்றுமையினை எடுத்துக்காட்டிய நுட்பம் பெரிதும் பாராட்டற்பாலது. இனி மெய்ந்நெறி பிறழ்ந்தவரக்களுங் கற்பிற் சிறந்த காதன் மனைவியர்க்குப் பிழைசெய் தொழுகினவர்களும் முன்னர் ஒருக்கப்படினும் பின்னர் அருள் செய்யப்பட்டமையினை அப்பர், கூன்பாண்டியன், சுந்தரமூர்த்திகள் முதலானவர்கள் பால் வைத்துச் சேக்கிழார் கூறுமாப்போல் இளங்கோவடிகள் கூறவில்லையே!

அமராவதி:-
அப்பர், கூன்பாண்டியன், சுந்தரமூர்த்திகளெல்லாம் எந்த நிலையிலும் சிவபிரான் திருவடிக்கட்பதிந்த பேரன்பிற் சிறிதும் பிறழாதவர்கள்; ஆதலால் அவர்கள் தாஞ்செய்த பிழைக்காக முன்னர் ஒருக்கப் படினும், பின்னர் அருள் செய்யப்பட்டார்கள், மற்றும் கோவலனும், பாண்டியன் நெடுஞ்செழியனும் அவர்போல் இறைவன்பாற் பதிந்த மெய்யன்பினராதல் காணப்படாமையின், அவர் ஊழ்வினையின் பாலராய்க் கிடந்து ஒறுக்ப்பட்டு மடிந்தனர்! அவர் அருளின் பாலராய்நில்லாமையால், அவரை "ஊழ்வினை உருத்து வந்து ஊட்"டியதென இளங்கோவடிகளும் இயம்பி இருக்கின்றனர்.


அப்பிகாபதி:-
அது தான் உண்மை! இவ்வேற்றுமையிலும் அவ்விரண்டு காப்பியங்களும் ஓர் ஒற்றுமையுடை யனவாயே திகழ்கின்றன. அது நிற்க. திருத்தொண்டர் புராணத்தில் சிவபிரானுக்கு முதன்மை சொல்லப்பட்டியிருத்தல் போல சிலப்பதிகாத்தில் சொல்லப்பட்டுளதோ.


அமராவதி:-
சொல்லப்பட்டிருக்கின்றது சாமி காவிரி பூம் பட்டினத்திலிருந்த தெய்வங்களின் திருக்கோவில்களைச் சொல்லுங்கால் பிறவா யாக்கை பெரியோன் கோவிலும் என்று சிவபிரான் கோவிலையே ஆசிரியர் இளங்கோவடிகள் இந்திர விழா ஊர்எடுத்த காதையில் முதற்கண் வைத்துரைக்கின்றார். மற்றை தெய்வங்கள் எல்லாம். பிறந்து இறப்பன ஆதலால் அவை உண்மையில் தெங்வங்கள் ஆகா அதனால் அவை பெரியனதும் ஆகா . மற்று சிவபெருமான் ஒருவனே பிறவா ஒளியுருவினாகலான் அவனே உண்மையான தெய்வமாவன் அதனால் அவனே பெரியன்(மகாதேவன்) ஆவன். என்று அச்சொற்றொடரில் அறிவுறத்தியிருக்கின்றனர் இத்தகைய மெய்ம்மைச் சொற் தொடரால் மற்றைய தெய்வங்களை வேறு எங்கும் அவர் ஓதிற்றிலர்.


அம்பிகாபதி: உண்மை! உண்மை !! சிலப்பதிகாரத்தில் இன்னும் பல இடங்களிலும் இளங்கோவடிகள் முதன்மைக்கூறியிருப்பினும், ஈதொன்றே போதும். அது நிறக, திருத்தொண்டர் புராணத்திற்குஞ் சீவக சிந்தாமணிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைஞ் சிறிது நுவலுங்கள்!


அமராவதி: சிந்தாமணி, சீலகன் தன் கலையுணர்வின் திறத்தாலும், போர்திறத்தாலும், நுண்ணறிவாலும் எட்டு மனைவியரை மணந்து ஒருவாழ்க்கை வரலாற்றை சொல்கின்றதேயன்றி, செயற்கறியசெய்த பெரியார் வரலாறுகளை திருத்தொண்டர் வராலாறுபோல் சொல்கின்றிலது. மேலும் மக்களை மேல்நிலைக்கண் உய்க்குந்தெய்வ அருள் விளககுமுஞ் சிந்தாமணியிற் காணப்படுகின்றிலது. அது வல்லாமலுஞ் சீவகன் வரலாறு உண்மை என்பதற்குச் சான்றுமில்லை. பெரிய புராணம் மெய்யடியார் வரலாற்றின் உண்மையினை உள்ளபடியே நுவல்வது; அவ்வரலாறுகளின் உண்மைக்கு சான்றுகள் மிகுதியாம்; உள்ளன. உண்மையே கூறும் தமிழ் வழக்கிற்கு சீவக சிந்தாமணி சிறிதும் ஒவ்வாது.


அம்பி: இரண்டுக்கும் வேற்றமை சொன்னீர்கள் ஒற்றுமை ஏதேனும் உண்டா?


அமரா: வல்லோசையின்றி தமிழ் சுவை துளும்பும் இணிய மெல்லோசை வாய்ந்த நடையில் ஆக்கப்பட்டிருத்தலின் சிந்தாமணியுந் திருத்தொண்டர் புராணமும் ஒற்றுமையுடையன எனவே உறைக்கலாம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் இந்த வகையிலும் கூட பெரிய புராணமே சிந்தாமணியிலும் சிறந்து திகழ்கின்றது.


அம்பி: ஆம், ஆம் நடையழகிற் சிந்தாமணியை விட சிலப்பதிகாரமே பெரியபுராணத்திற்கு ஒப்பாக நிற்கற்பாலது. பெரும் மாட்சியிலோ பெரியபுராணத்திற்கு ஒப்பாகவோ உயர்வாகவோ நிற்க வல்ல காப்பியமேதுமேயில்லை. இளவரசியார் இலக்கியத் துறையில் இத்துணை அழகாக இறங்கி அவ்வந் நூற்றான்மை ஆய்ந்தெடுத்தறிந்திருப்பது மிகவும் வியக்கற்பாலது அது நிற்க, இலக்கணத்திலும் ஒன்று வினவி, அதற்கு மேல் இளவரசியார்க்கு வருத்தங் கொடாமல் நிறுத்துகின்றேன்.


அமராவதி: ஆசிரியர்க்கு விடைகூறுவதிற் சிறிதும் அடியேற்கு வருத்தந்தோன்றவில்லையே


அம்பி: உவந்தேன் ஆசியர் தொல்காப்பியனார் ஆறறிவுடைய மக்களை மட்டுமே உயர்திணைஎனக் கொண்டு, 'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே' என்று கூறினார் இக்காலத்தார்க்கு 'நன்னூல்' செய்த பவணந்தியாரோ , மக்கள், தேவர் ,நரகர் என்னும் முப்பாலரையும் உயர்திணை எனக்கொண்டு 'மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றுயிருள்ளவும் இல்லவும் அஃறிணை' எனக்கூறுகின்றார். இவ்விரண்டில் எது தங்கட்கு பொருத்தமாக காணப்படுகின்றது?


அமாராவதி: இலக்கணமென்பது எல்லா சமயத்தார்க்கும் பொதுவான நிலையில் நின்று, ஒரு மொழியின் சொற்பொருள் அமைதிகளை கண்ணாற் கண்டு அறிவான் ஆராய்ந்து காட்டுவது. கட்புலணாகாதவைகளை சிறுபான்மை சொல்ல நேர்ந்தால் மொழியமைதியினளவுக்கு வேண்டும் துணையே அது கூறுதல் வேண்டும் இந்த முறையிற் பார்த்தால் ஆறறிவுடைய மக்களே உயர்திணை என்பது. எல்லாராலும் கற்புலனாக அறியப்பட்ட உண்மையாகும். மற்று, தேவர், நரகர் என்பார் எல்லாராலும் கட்புலனார் காணப்பட்டவரல்லர்; அதனால் அவரை உயர்திணை என்று கொள்வது எல்லார்க்கும் உடன்படான்று. ஆகவே தொல்காப்பியனார் மக்களை மட்டும் உயர் தினை என்று வரையறுத்துரைத்ததே சாலமும் பொருத்தமுடை தென கருதுகின்றேன்.


அம்பி: இளவரசியாரின் ஆராய்ச்சியறிவின் திறம் மிகவும் பாராட்டற்பாலது. இனி இப்பொது புறநானூற்றின் கடவுள் வணக்கச் செய்யுளை தொடங்கலாம்.

(அங்கனமே அமராவதி அதனைப் படிக்க அப்பிகாபதி அதற்கு பின்னர் சில செய்யுட்களுக்கும் உறைசொல்லி விடைபெற்று நண்பனுடன் இல்லஞ் செல்கின்றான்)
வரும்...19

Friday, May 26, 2006

அம்பிகாபதி அமராவதி - 17 -

அம்பிகாபதி:

என் ஆருயிர்த் துணைவ! நீ இத்துணையன்புடன் எனக்கு நல்லுரை பகரந்ததற்கு மிகமகிழ்கின்றேன். நீ கற்பித்தபடியே நான் அரண்மனையில் முறை வழுவாது நடந்து அமராவதிக்குத் தமிழ் நூல்கற்பித்து வருவேன். பார்! பகலவன் மேல்பால் விரைந்திறங்குகின்றான். நாம் அரண்மனைக்குச் செல்வோம் வா.(இருவரும் வருகின்றனர்)

(சென்று அரன்மனை வாயிற் காவலனை நோக்கி)

நயினார் பிளளை:

கடம்பா! இளவரசியார்க்குப் பாடஞ் சொல்ல இதோ ஆசிரியர் தில்லைவாணரை அழைத்து வந்திருக்கின்றேன். இவர் நாடோறும் மாலைப் பொழுதில் இந்நேரத்திற் பாடஞ் சொல்ல வருவர். இவரை இளவரசியின் கன்னி மாடப் பூங்கா மண்டபத்திற்குத் தடை செய்யாமற் போகவிடு.


வாயிலான்:

நல்லது ஸ்வாமி நம் மன்னர் பெருமானும் முன்னமே எனக்கு இதே கட்டளை தந்திருக்கிறார். அம் மண்டபத்திற்கு இவ்வழியே வாருங்கள் சுவாமிகாள் (இரு வரும் அவனைப் பின்தொடர்ந்து சென்று கன்னி மாடஞ் சேர்கின்றனர்) யார் அம்மா அங்கே? தத்தையா?


வாயிலாள்:

ஆம் ஐயா கடம்பரே. நம் இளவரசியார்க்குப் பாடஞ்சொல்ல ஆசிரியர் தில்லைவாணர் வந்திருக்கின்றனரோ? அம்மையுந் தோழியும் அவரை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். யான் இவர்களைப் பூங்கா மண்டபத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறேன் , நீர் போகலாம். என வாயிலான் போனபின் . ஸ்சுவாமிகள் இவ்வழியே வாருங்கள் (அழைத்து போய் அந்த மண்பத்தில் விட்டு )இவ்விருக்கையில் அமருங்கள் (நயினார் பிள்ளையைப் பார்த்து ) இதோ இடப்பட்டிருக்கும் இத்திரையின் இப்பக்கத்தேயிருந்து தான் ஆசிரியர் பாடங்கற்பித்தல் வேண்டும். இளவரசியாருந் தோழியும் இதன் அப்பக்கத்தே யிருந்துதான் பாடங் கேட்பர். நாளை முதல் ஆசிரியர் என் உதவியை வேண்டாமலே இங்கு இந்நேரத்தில் வந்து பாடஞ் சொல்லிப் போகலாம். (திரைக்கு அப்பால் உள்ள தோழியை விளித்து) அம்மா நீலம்! இதோஆசிரியர் தில்லைவாணரை நம் அமைச்சரின் மகன் நயினார் பிள்ளை அழைத்து வந்திருக்கிறார். எனக்கு யாது கட்டளை?


தோழி:

ஏடி தத்ததே! இதோ! இளவரசியாரை அழைத்து வருகிறேன். நீ போகலாம்.


வாயிலாள்:

அப்படியே அம்மா. இளவரசியார் நீடு வாழ்க! ( திரும்பிப் போகையில் தனக்குள்) ! இவ்வளவு பேரழகுவாய்ந்த இவ்விளைய ஆசிரியர் தில்லைவாணர் எந்த ஊரிலிருந்து வந்தவரோ! மிக்க வனப்புடையா மெழுகு பாவையை யொத்த நம் இளவரசியும் இவரும் ஒருவரை யொருவர் காண நேர்ந்தால் ஒருவர்மேலொருவர் காதல் கொள்ளா திருப்பரோ? ஆகையால்தான் இவருவருக்கும் இடையே திரையிட்டு வைத்திருக்கின்றனர் போலும்! இது நல்லதோர் ஏற்பாடே!


அம்பிகாபதி:

(தன் நண்பனைப் பார்த்து மெல்லிய குரலில் ) அருமை நண்ப! எனக்குரிய பெயரால் என்னைக் குறிப்பிடாமல், தில்லைவாணர் என்னும் பெயரால் நீயும் இங்குள்ளவர்களும் என்னைக் குறிப்பிடுதல் ஏன்?


நயினார் பிள்ளை:

அதைப்பற்றி என் தந்தையாரை முன்னமே கேட்டேன். அவர் அதன் காரணத்தைச் சொல்ல மறுத்தனர். ஈதெல்லாம் ஏதோ ஒரு சூழ்ச்சியாக இருக்கின்றது. "அகலா தணுகாது தீக்காய்வார் போல்க, இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்" என்று தெய்வத் திருவள்ளுவர் கற்பித்தபடி நாம் இங்கே முறை தவறாது நடந்து கொள்ளுதலைக் கருதியே உனக்கு இப்புனைவு பெயர் வைக்கப் பட்டிருக்கின்றதென எண்ணுகின்றேன். என் தந்தையார் உனது நன்மையின் பொருட்டாகவே இங்ஙனஞ் செய்திருக்கின்றார் என்பது என் நம்பிக்கை. ஆகையால் அவர் கட்டளை தந்துள்ளபடி நீ நடக்குமாறு உன்னை மிகவும் வேண்டிக் கொள்கிறேன்.


அம்பி:

ஓ நண்பா! நீ அங்ஙனம் வேண்டல் எதற்கு? கரும்பு தின்னக் கூலியா? நின் தந்தையார் கூர்த்த அறிவும் எல்லார்க்கும் நன்மையே செய்யும் ஈர நெஞ்சமும் உடையவர். அவர் செய்திருக்கும் ஏற்பாட்டில் எனது நன்மையும் உள்ளடங்கி நிற்கும்; அதிற் சிறிதும் ஐயமில்லை.


(அமராவதியும் தோழியுந் திரைக்கு உட்புறத்தே வந்து)

அமராவதி:-

(உள்ளிருந்தபடியே ) ஆசிரியர் தில்லை வணர்க்கு எனது புல்லிய வணக்கம்.


அம்பி:-

(திரைக்கு வெளியேயிருந்து) இளவரசியார் கல்வியிற் சிறந்து பல்லூழி இனிது வாழ்க!


அமரா:-

நயினார் பிள்ளை நும் தந்தையார் அன்னையார் முதலியோருடன் நலமாயிருக்கின்றீரா?


நயினார் பிள்ளை:-

அம்மணி! தங்களருளால் நாங்கள் அனைவரும் நலம்.


அம்பி:

இளவரசியார் இதுகாறும் பயின்றுள்ள நூல்கள் இன்னவை யென்றறிய விரும்புகின்றேன்.


அமரா:

இலக்கியத்தில் "பதினெண் கீழ்க்கணக்கும் "சிலப்பதிகாரம்" "மணிமேகலை" "சீவகசிந்தாமணி" "திருத்தொண்டர் புராண"மும்; இலக்கணத்தில் "தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும்" "இறையனாரகப்பொருள்" "யாப்பருங்கலக் காரிகை"யும் பயின்றிருக்கிறேன். இனித் "தொல்காப்பியப் பொருளிலக்கணமும்" "புறநானூறுந்" தொடங்கல் வேண்டும்.


அம்பி:-

இளவரசியார் பயின்றுள்ள நூல்களில் தாம் அடைந்திருக்கும் புலமையின் அளவை யான் தெரிந்து கொண்டால் தான் அதற்கேற்ப மற்றைப் பெருநூல்களை யான் கற்பித்தல் கூடும்.


அமரா:-

அங்ஙனமே தாங்கள் தெரிந்து கொள்ளலாம் அந்நூல் பொருள்களைப்பற்றித் தாங்கள் வினாவுகின்றவைகளுக்கு யான் தெரிந்தமட்டில் விடை கூறுகின்றேன்.


அம்பிகா:

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருத்தொண்டர் புராணம் என்னும் நான்கு காப்பியங்களின் ஒற்றுமை வேற்றுமைகளையும் ஏற்றத்தாழ்வுகளையுஞ் சிறிது எடுத்துக் காட்டுங்கள்!


அமராவதி:

இது மிகப்பெரிய வினா; என் அறிவின் அளவுக்கு மேற்பட்டது. ஆயினும், ஆசிரியர் வினாவியதனால் விடை சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் நம் தமிழ் நாட்டு மேன்மக்கள் சிலரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நிகழ்ந்தபடியே மெய்யாக வைத்துச் சுவைபடுத்திக் கூறுகின்றன; இவ்வகையில் மணிமேகலையைவிடச் சிலப்பதிகாரமே சிறந்ததெனக் கருதுகின்றேன். மேலும், மணிமேகலை ஒரே தன்மையவான அகவற்பாக்களினால் ஆக்கப்பட்டிருக்கின்றது. சிலப்பதி காரமோ ஆங்காங்கு நிகழும் நிகழ்ச்சிகளில் ஈர்ப்புண்டு மக்கள் உள்ளம் எவ்வெவ்வாறு அசைவுறுகின்றதே அவ்வவ்வாற்றிற் கிசைந்தபடி யெல்லாம் அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா முதலான பலதிறப்பாக்களும் இசை தழுவி யாக்கப்பட்டுத் தான் கூறுங் கதை நிகழ்ச்சிகளை நம்கண்முன்னே காட்டிப் பல்வகையுணர்வெழுச்சிகளால் நம்மை யின்புறுத்துந் தகையதாய் விளங்குகின்றது. உண்மையை உள்ளபடி எடுத்துச் சொற்சுவை பொருட் சுவை துளும்பத் தொடுத்து இசைத்தேன் துளிக்க மிழற்றும் முறையிற் சிலப்பதிகாரமும் திருத்தொண்டர் புராணமும் ஒருங்குவைத் தெண்ணற் பாலனவென்டபது சிறியேன் கருத்து.

அம்பிகாபதி:-

இளவரசியாரின் கருதது மிகவும் பொருத்தமாயிருக்கின்றது. ஆயினுஞ் செயற்கரிய செய்கைகளால் தாம் சிவபிரான் திருவடிக்கண் வைத்தபேரன்பிற் சிறிதும் பிறழாமையினைத் தெருட்டிய மெய்யடியார் வரலாறுகள் எல்லா நலனுந் தோய்ந்தொளிரக் கொண்டு, ஆசிரியர் சேக்கிழார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராணந் துலங்கா நிற்கின்றது; மற்றுச் சிலப்பதிகாரமோ எம்போன்ற மக்களின் வாழ்க்கைவரலாற்றினை நுவலா நிற்கின்றது; இது தமிழ் நலம் ததும்ப இயற்றப்பட்ட தொன்றாயிருப்பினும் இதனை அதற்கு ஒப்பாக உரைத்தல் கூடுமோ?
வரும் ......18ல்

Wednesday, May 24, 2006

அம்பிகாபதி அமராவதி - 16 -

மூன்றாம் நிகழ்ச்சி: முதற்காட்சி

களம்: அமராவதி இருக்குங் கன்னிமாடம்

தோழி: அம்மா அமராவதி! நம் ஆசிரியர் கம்பர் நேற்றுத்தான் வெளியூருக்குப் போய் இருக்கிறார் அவர் திரும்பிவர ஓராண்டு செல்லுமாம், அதுவரையில் நமக்குக் கல்வி கற்பிக்கத் தில்லைவணர் என்னும் ஒரு சிறந்த தமிழாசிரியர் ஏற்படுத்தப் பட்டிருக்கிறார். அவர் கட்பார்வையிழந்த குருடராதலால், அவரை நாம் யாரும் பார்க்கலாகாதாம். அவர்க்கும் நமக்கும் இடையே சாயம்பூசிய தடிப்பான ஓர் இரட்டுத் திரை கட்டி, அத்திரையின் வெளிப்புறத்தில் அவர் இருந்து பாடஞ்சொல்ல, நாம அதன் உட்புறத்திலிருந்து பாடங்கேட்டல் வேண்டுமாம். இதனை நின் அன்னையரான அரசியார் உனக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள். நம் அமைச்சரின் மகன் நயினார்பிள்ளை தான் ஆசிரியருடன் வருவார்.

அமாராவதி: ஏடி நீலம் ஈதென்னடி ஒரு பெரு வியப்பாயிருக்கின்றதே! கண்ணில்லாக் குருடர் ஒருவர் எங்ஙனங் கல்வி கற்றார்? அவர்எங்ஙனம் நமக்குப் பாடஞ் சொல்வார்? என வியப்புறுகின்றேன்.

தோழி: அப்படியன்று அம்மா அவர்க்குக் கண் குருடாய்ப் போனது சில ஆண்டுகளுக்கு முன்னே தானாம் அவர் தமக்கு இருபதாமாண்டு நிரம்புமுன்னமே தமிழ் இலக்கண இலக்கிய நூல்களுங் கலைநூல்களும் ஆழ்ந்து ஆராய்ந்து கற்றுத்தேர்ந்த நுண்ணறிவனராய் விட்டனராம். இருபதாமாண்டு கடந்தபிறகு தான் அம்மைநோய் கண்டு அவர்க்குக் கண் குருடாயிற்றாம். இப்போதவர்க்கு இருபத்தைந்தாமாண்டு நடக்கிறதாம். அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நமக்குக் கல்விதானே வேண்டும்..

அமரா:அதுண்மைதான். அவர் இளமையிலேயே கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தால் பின்னர்க் கண் குருடாய்ப் போனாலும் பாடஞ்சொல்வதிற் சிறிதுங்குறை இராதென்றே நம்புகிறேன். அவர் குருடராய் இருந்தலால் நமது மேல் மாளிகைக்கு வருவது அவர்க்கு இடர் பாடாயிருக்கும். ஆதலால், இக் கன்னி மாடத்தின் பின்னுள்ள பூந்தோட்ட மண்டபத்தில் இருந்தே நாம் பாடம் கேட்க வேண்டும் . ஒழுங்குகளை என் அன்னையல்தெரிவித்தபடியே போய்செய். மாலை நேரம் நெருங்குகின்றது. ஆசிரியர் தில்லை வாணர் விரைவில் வந்துவிடுவர். அவர் நம் கண்ணல்படாமல் வரவும், வந்திருந்து பாடஞ் சொல்லவும், சொன்னபின் திரும்பிச் சொல்லவும் நாம் அமைச்சரின் மகன் நயினார் பிள்ளையும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வா ரெனக் கருதுகின்றேன்.
(
தோழி போய்விடுகிறாள்)

மூன்றாம் நிகழ்ச்சி : இரண்டாம் காட்சி

களம் : கம்பரது மாளிகை
அம்பி: வருக வருக என் நண்ப நயினார்பிள்ளை நின்னைச் சில நாட்களாய் யான் காணவில்லையே!

நயினார்: அம்பிகாபதி நின்னைக் காணத நாடகள் பயனில் நாட்களே நம் மன்னர்பிரான் கட்டளைப்படி என் தந்தையாரால் ஏவப்பெற்றுச் சடையவர்மன் குலசேகரபாண்டியனை இங்கு அழைத்துவரும் பொருட்டு மதுரைமாநகர் சென்று நேற்றுத்தான் அவனை அழைத்துக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன்.

அம்பி: எதற்காக நம்மரசர் அப்பாண்டிய இளவரசனை அத்தனை விரைவாக இங்கு அழைப்பித்திருக்கின்றனர்?

நயினார்:நம்மரசரின் மகள் அமராவதிக்குத் திருமணஞ் செய்ய ஏற்பாடாகின்றது. குலசேகரன் அமராவதிக்கு மாமனாதலால் இருவரும் பழகும் பொருட்டு அவன் வருவிக்கப்பட்டிருக்கலாம்.

அம்பி: அவன் அங்ஙனம் விரைந்து வருகைக்கு அதுதான் காரணமா இருத்தல் அதுயிருக்கட்டும். இளவரசி அமராவதி கூர்த்த அறிவும் முத்தமிழ்ப்பயிற்சியும் உடையவளாயினுங் கைகால் முடமாயிருப்பவள் என்றும், அழகற்ற முகத்தினளென்றும் நின் தந்தையார் சொல்லக்கேட்டேன். ஆனால், என் தந்தையாரோ நீண்ட காலமாய் அவட்குப் பாடஞ்சொல்லி வருபராயிருந்தும், அவளுடைய யாக்கையின் குற்றத்தையும் முக அழகு இன்மையினையும் எனக்குச் சொன்னதேயில்லை?

நயினார்: அவள் நம் அரசர்ககு ஒரே செல்வப் புதல்வியாய் இருத்தலால், அவளைப் பற்றிக் குறைவு சொன்னால் அஃதொரு பெருங்குற்றமாகக் கருதப்படுமன்றோ? அதனால்தான் நின் தந்தையார் அவளிடத்துள்ள உடற் பழுதினைக் கூறினாரில்லை யென எண்ணுகிறேன். அரசர் குலசேகரனை வருவித்ததும் அவன் அவளை மணந்து கொள்ளுமாறு இணக்குதல் பொருட்டே போலும்.!

அம்பி: இருக்கலாம். இம்மாலைப் பொழுதிலிருந்து யான் இளவரசி அமராதிக்குக் கல்வி கற்பித்து வரும்படி நம் சோழ மன்னர் கட்டளை யிட்டிருக்கின்றாரென நின் தந்தையார் எனக்குச் சொல்லினர்.

நயினார்: அதனை மீண்டும் உனக்குத் தெரிவித்து இன்னுஞ்ச் சிறிதுநேரத்தில் உன்னை அரண்மைனக்கு அழைத்துச் சென்று, அங்கேகன்னிமாடத்தின் பின்னேயுள்ள இளமரக்காவின் எழில்கெழு மண்டபத்தில் இளவரசிக்குப் பாடஞ் சொல்லுமிடத்தில் நின்னை விட்டு வரும்படி என் தந்தையார்என்னை ஏவியிருக்கின்றனர். அதனோடு இளவரசி நின்னைப் பார்க்கவும் நீ அவளைப் பார்க்கவுங்கூடாதபடி நும்மிருவருக்கும் இடையே திரையிடப்பட்டிருக்குமாம். அங்ஙனம் திரையிட்டது உடற்பழுதுள்ள இளவரசியை வெளியார் எவரும் பாரக்கலாகாது என்பதற்கே. அதுபோக நீ தொட்டதற்கெல்லாம் பாட்டுப் பாடும் இயற்கையினனாதலால், அரண்மைன இளமரக்கா அதன் மண்டபம் முதலியவைகளின் அழகுகளைக் கண்டவுடனே பாட்டுப்பாடி விடாதே. அவட்குப் பாடஞ் சொல்லி வீட்டுக்குத் திரும்பும் வரையில் நீ கண்ணில்லாத ஒரு குருடனைப் போவே நடந்து கொள்ளல் வெண்டுமென்று என் தந்தையார் வற்புறுத்திச் சொன்னார். சிறிது பிசகு கண்டாலும் நம் அரசர் பெருஞச் சீற்றங் கொள்ளுமியல்பினராதலால் மிகவுங் கருத்தாக நீ நடந்து கொள்ள வேண்டும். அறிவிற் சிறந்த உனக்கு யான் வேறு மிகுதியாய்ச் சொல்ல வேண்டிவது என் உளது? நீ மேற்கொண்ட செயலை இறைவன் இனிது நிறைவேற்றுவானாக.
வரும்.....17

Sunday, May 21, 2006

அம்பிகாபதி அமராவதி - 15 -

அமைச்சர்: ஆம், அன்னையே! கம்பர் தம் நூலின் கடவுள் வணக்கச் செய்யுட்களைப் படித்தவுடனேயே நம் புலவர்கள் ஒருவர் பின்னாரொருவராய் அவற்றின்கட் பிழை கண்டு வினவவும் அவற்றிற்கு அம்பிகாபதியார் விடை சொல்லவும் ஆக ஒரு பெருஞ் சொற்போர் நிகழ்ந்தது! கடைசியாகச் சாக்கியப் புலவர் கூறிய எல்லாம் பொய் யென்னுங் கொள்கையினால் ஒரு பெருங் குழப்பமும் உண்டாயிற்று.

அரசன்: பார்த்தீரா நம்பிப் பிள்ளே! கடவுளும் பொய், உயிரும் பொய், உலகமும் பொய், எல்லாம் பொய் என்று நம் சாக்கியப் புலவர் கூறியது எத்துணைப் படுபொய்யா யிருக்கின்றது! இதுவும் ஒரு கொள்கையா! இதுவும் ஒரு மதமா! இதற்கு அம்பிகாபதி சொல்லிய விடையைப் பார்க்கிலு:ம், நமது துத்தி அதற்குக் கொடுத்த சாட்டையடியே திறமான விடை! (துத்தி அது கேட்டு விலாப்புடையை அடத்துக்கொண்டு குதிக்கிறான்)

அரசி: (நகைத்துக் கொண்டே) துத்தி அதற்கு யாது சொன்னான் அரசே!

அரசர்:சாக்கியப் புலவர் எல்லாம் பொய் என்று சொன்னவுடனேயே இவன் என்னை விளித்து, அப்படியானால் 'நான் இதோ இருக்கிறேனே! என்னைக்கூடப் பொய்யென்று சொன்னால் எனக்கு அழுகை வருது' என்று சொல்லி அழத் தொடங்கிவிட்டான் . அவையின் ரெல்லாரும் வயிறு குலுங்கக் குலுங்க நகைத்தனர். அதன் பின் என்னைச் சுட்டிக்காட்டி, 'அரசே! நீங்கள் கூடப் பொய்யா?' என்று அவன் வினவ, அவையினர் அனைவருஞ் சாக்கிய புலவரை நோக்கியபடியாய் அடங்கிவிட்டனர். மேலும் அவன் 'இந்த உலகமெல்லாம் பொய்யென்றாரே ; அப்படியென்றால் இந்த இரவில் எனக்கு உணவு ; அதுவும் பொய்யாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ' என்ற கோணற்கும்பிட்டுடன் கொச்சையாய்ப் பேசவே, பின்னும் எல்லாரும் பெரிதும் சிரித்தனர்!. சாக்கிய புலவர் முகங்கருகிப்போயிற்று . அது கண்டு யான் ' அவர் தமது மதக்கொள்கையைச் சொன்னாரே தவிர , எல்லாம் உடனே பொய்யாய் விடுமென்பது அவர் கருத்தன்று ' எனக்கூறி எல்லாரையும் அமைதிப்படித்தினேன்.

அரசி: துத்தி சொல்லிய சொற்களால் சாக்கியபுலவர் தமது கொள்கையின் படி தாமும் பொய்யாகல் வேண்டும். அவர் உட்கொள்ளும் உணவும் பிற நுகர்பொருள்களும் பொய்யாகவே ஒழியவேண்டும் என்பது எளிது போதரலால், அவர் முகங்கருகாமல் வேறென் செய்வார்! ஏடா துத்தி! உனக்கு இன்றிரவு இரட்டைச்சாப்பாடு .

கோமாளி: அம்மா, அம்மா! மாராசா எனக்கு மூனுசாப்பாடல்லோ ரொம்ப ரொம்ப தாரேனெண்ணு சொன்னாங்க. நீங்க ஒரு சாப்பாட்டெ குறைச்சுட்டீங்களே!

அரசி:(நகைத்து) அப்படியானால் , நான் உனக்கு நான்கு சாப்பாடு தருகிறேன்

அரசர்: கம்பர் திரும்பி வரும் வரையில் அம்பிகாபதி தான், நம் புதல்விக்குப் பாடம் சொல்லித் தரவேண்டும். நமது நிலையுந் தனது நிலையும் நன்குணர்ந்த தக்கோனாதலால் ஏதுந் தவறிழைப்பான் அல்லன் என் மகளும் தனது மேதகு நிலையுணர்ந்து மிக்கோலாதலால், சிறிதும் பிழைபடாள் .

அமைச்சர்: மன்னர் பெரும! இருவரும் தக்கோரென்பதில் தட்டில்லை? என்றாலுகூட, அரசியார் சொல்லுவதுங் கருதற்பாலது. ஆதலால், யான் ஒரு சூழ்ச்சி சொல்லுகின்றேன். அது பிராட்டிக்குந் தமக்கும் எனக்குமல்லது பிறரெவர்க்குந் தெரிதலாகாது. (அந்த ரகசியம் சொல்லப்படுகிறது)

அரசன்: நம்பிப்பிள்ளே! இன்னும் ஒரு சொல். நம் புதல்வியின் திருமணத்திற்கு வேண்டும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம்..நம் மருகன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குத் திருமுகம் நாளையே விடுத்து, அவனை மதுரையினின்றும் இங்கு வருவியுங்கள்.

அமைச்சர்: அங்ஙனமே செய்கின்றேன் பெருமானே.

வரும்.......

Tuesday, May 16, 2006

அம்பிகாபதி அமராவதி - 14 -

அரசன்: கம்பர் எதுமே சொல்லிற்றிலர். ஆனால், அவர் மகன் அம்பிகாபதி எழுந்து, 'புலவர்' என்னுஞ் சொல்லுக்கு கடவுளர் என்னும் பொருளுமுண்டு; அதனாற் கடவுள் வணக்கஞ் சொல்லவே புலவர் வணக்கமும் அதன்கண் அடங்கும் என்றான். அவ்விடையின் நுட்பத்திற்காக அம்பிகாபதியை எல்லாரும் வியந்தனர்.

அரசி: ! கம்பர் மகன் அவ்வளவு நுண்ணிய கல்வியறிவு வாய்ந்தவனா! அவனுக்குத் துத்தி யாது சொன்னான்?

அரசன்: துத்தி அவனை நோக்கி ஏதும் கூறிற்றிலன் ஆயினும், புலவரெல்லாரையும் பார்த்து, 'என் மனைவிக்கு ஆண்பிள்ளை மேல் விருப்பம்; எனக்குப் பெண் பிள்ளைமேல் விருப்பம்; ஆகையாற் சுவாமிகளே, எனக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்க வரங்கொடுங்கள்' என்று கேட்டு எல்லாரையுஞ் சிரிக்க வைத்தனன்.

அரசி: நகையாடக் கூறிய துத்தியின் சொற்களும் நுட்பம் உடையனவாகவே காணப்படுகின்றன! பிள்ளைப் பேறு வழங்கல் கடவுள் ஒருவரால் மட்டுமே இயலுமன்றி மக்களால் இயலாது. ஆகவே, மக்களாகிய புலவரைக் கடவளார் என்றல் பொருந்தாமை, அவன் கூறிய சொற்களிற் குறிப்பாய்க் காட்டப்படுகின்றது. (கோமாளியை நோக்கி) நின் சொல்லின் நுட்பத்தை வியந்தேன். (கோமாளி மகிழ்ச்சி மிக்குக் கோணற்கும்பிடு போடுகிறான்) அதன்பின் யாது நிகழ்ந்ததோ?

அரசன்: அதன் மேற் கோமாளியைப் பேசவிடாமல் அடக்தகினேன். புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை தருமாறு நங் கூத்தமுதலியார் வேண்டக், கம்பர் வாளாவிருந்தனர். ஆனால், அம்பிகாபதியோ ஒவ்வொரு கேள்வி கட்கும் அனைவரும் வியக்கத்தக்க விடைகளை நுண்ணறிவோடும் நூற்சான்றுகளோடும் நன்கு பகர்ந்தே வந்தான். என்ன நம்பிப்பிள்ளே! நுங்கள் கருத்தையுஞ் சொல்லுங்கள்.

அமைச்சர்: அம்பிகாபதியார் கூறிய விடைகள் நுண் பொருள் பொதிந்த பழைய வைணவத்திற்குஞ் சைவசமயவுண்மைக்கும் முற்றும் ஒத்திருந்தன. அவர் கூறிய விடை விளக்கத்தில் வைத்து நோக்கினால், கம்பர் கூறிய கடவுள் வாழ்த்திற்குக் குற்றம் வராதென்று கருதினேன். ஆனாற் சைவத்திற்கப் பகையாய்ப் பிற்காலத்து வைணவர்கள் கட்டிய புராணக் கதைகளையே விடாப்படியாய்ப் பிடித்திருக்கும் நம் வைணவப் புலவர், அம்பிகாபதியாரின் விடைகளைச் சிறிதுமே ஏற்றுக் கொள்ளவில்லை. திருமாலின் பிறப்பான இராமன், திருமாலினும் நான்முகன் சிவபிரானிலுஞ் சிறந்தவன் என்றே முழங்கினார். அதுகண்டு நங் கவிச்சக்கரவர்த்தி கூத்தர் எவ்வளவு சீற்றங்கொண்டு அதனை மறுத்தனர்! சமண் சாக்கியப் புலவர்கள் கடவுள் உண்மையினை ஒப்புக் கொள்ளாவிடினம், இராமாயணக் கதை பொய்யென்றே கழறினர்; சாக்கியப் புலவர் தமது மிகப் பழைய 'தசரத ஜாதகச்' ' சான்று கொண்டு இராமாயணப் பின் நிகழ்ச்சி முழுப் பொய்யென்று காட்டியதை அம்பிகாபதியாரும் ஒருவகையில் உடன் பட்டே மொழிந்தனர். இருந்த வாற்றாற் பண்டைக்காலத்தில் முருகவேள் சூரன்மேற் சென்று அவனை வென்ற நிகழச்சியே, வைணவர்கள் இராமன் இராவணனை வென்ற நிகழ்ச்சியாகப் பிற்காலத்தே மாற்றி இராமாயணம் எழுதி வைத்தார்களென்று கருதுகிறேன்.

அரசன்: அதுதான் உண்மை. இனி, நம் அம்பிகாபதியின் நுண்ணுணர்வையும் பரந்தாழ்ந்த கல்வியறிவையும் அழகையும் இனிய குணங்களையும் நினைக்கநினைக்க அவனைப் பிள்ளையாகப் பெற்ற கம்பர் என்ன தவஞ் செய்தனரோ வென்றெண்ணி வியக்கின்றேன்! இத்தகையன் ஒருவன் நம் அரச குடும்பத்திற் பிறந்திலனே என்றெண்ணியும் வருந்துகின்றேன்!

அரசி: அத்துணைச் சிறந்த அம்தபிகாபதியை நம் அரச குடும்பத்தில் ஒருவனாகவே வைத்துப் பாராட்டுதல் நமக்குப் பெருமையேயன்றிச் சிறுமையாகாதே?

அரசன்: அஃதெங்ஙனம் அங்கயற்கண்ணி? அவனோ உவச்ச குலத்திற் பிறந்தவன்: நாமோ உயர்ந்த வேளாள குலத்தினேம்( வேளாண்மை செய்யும் குலம்) நம்மினும் எத்தனையோ மடங்கு தாழ்ந்த குலத்தவனான அவனை நம் குலத்தவருள் ஒருவனாக வைத்து நலம் பாராட்டுதல் ஒரு சிறிதும் ஆகாது. ஆயினும், அவனை அவன் தந்தையாரைப் போலவே நம் புலவர் பேரவையில் ஒரு பெரும் புலவனாக வைத்துப் பல சிறப்புகளுஞ் செய்யக் கருதியிருக்கின்றேன். அதனோடு இன்னம் இரண்டு மூன்று நாட்களில் நம் அருமைப புதல்வி அமராவதிக்கு அம்பிகாபதியை ஆசிரியனாகவும் அமர்த்த முடிவு செய்திருக்கின்றேன். அவளது கூர்த்த அறிவுக்கு இசையத் தமிழ் கற்பிக்கவல்லவன் அவனே.

அரசி: ஈதென்ன பெருமானே! அம்பிகாபதி கல்வியும் நுண்ணிறிவும் வாய்ந்தவனாதலோடு, பேரழகும் இளமையும் இனிய குணங்களும் உடையனென்றும் நீங்களே சொல்லுகிறீர்கள், இத்தகைய ஒருவனை, மடந்தைப் பருவத்தினளும் பேரழகியும் முத்தமிழ்ப் பயிற்சியில் மிக்க விழைவினளுந் திருமணமாகாதவளுமான என் மகளுக்கு ஆசிரியனாக அமர்த்துதல் நன்றாகுமா? என நினையாமற் பேசுகிறீர்களே? நுங்கள் சொல்லைக்கேட்டு என் நெஞ்சம் நடுங்குகின்றது! மேலும் ஆசிரியர் கம்பர்தாம் நம்மருமைப் புதல்விக்குத் தமிழ் கற்பித்து வருகையில் அவர் மகனை எதுக்காக அவளுக்கு ஆசிரியனாக அமர்த்தக் கருதுகிறீர்கள்?

அரசன்: அதன் காரணத்தை யான் உனக்குத் தெரிவிக்கும் முன் வேறுபேச்சு வந்து குறுக்கிட்டது. கம்பர் தமது இராமாயணத்தை நமது புலவர் பேரவையில் அரங்கேற்றுவதற்கு நம் புலவர் எவரும் இடங்கொடுக்கவேயில்லை. அதுகண்டு நம் அமைச்சர் அதனை அவர் தில்லைவாழந்தணரிடையிலாவது திருவரங்கத் திருமாலடி யாரிடையிலாவது கொண்டுபோய் அரங்கேற்றுக வென்று சொல்லி விட்டார். (அமைச்சரைப் பார்க்க)
வரும்...........15

Wednesday, May 03, 2006

அம்பிகாபதி அமராவதி - 13 -

இரண்டாம் நிகழ்சி : இரண்டாம் காட்சி

களம்: அரண்மனை, உவளகம்

நேரம்: மாலை

அரசன்: (அமைச்சருடன் உவளகத்திற்குச் செல்கையிற் கேமாளியைப் பார்த்து) ஏடா, துத்தி! அமைச்சரும் யானும் வருகின்றோம் என்று அரசிக்கு முன் ஓடித் தெரிவி (அமைச்சரைப் பார்த்து) நெடுநேரம் ஆகியும், இன்னுஞ் சிறிது நேரம் இம்மாலையில் நீங்கள் எம்முடன் இருக்கவேண்டுவது பற்றி வருந்துகின்றேன்.

அமைச்சர்: எவ்வளவு நேரம் ஆனாலும் மன்னர் பெருமான் பணியிற் காத்திருக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அரசன்: அமைச்சரே , கம்பர் தில்லை ,திருவரங்கம் சென்று வர ஓராண்டாவது ஆகும் அது வரையில் எம் அருமைப் பதல்வி அமராவதிக்கு தமிழ் பாடம் கற்பிக்க எவரை ஏற்படுத்தலாம் என கருதுகிறீர்கள்.

(இருவரும் உவளகத்தினுட் சென்று அரசன் அமர, அமைச்சர் பக்கத்தே நிற்க அரசி வந்து அரசனைப் பணிந்து)

அரசி: பெருமான் புலவர் பேரவையின்றம் வர நெடு நேரமாயிற்று போலுமு் (அமைச்சரைப் பார்த்து) நம்பிப்பிள்ளை நிற்கின்றனரே.

அரசன்: பிள்ளே! இருக்கையில் அமருங்கள்! அங்கயற்கண்ணி! நீயும் அத்தளிமத்தில் அமர்.இன்றைக்கு நம் புலவர் பேரவையில் மிகவுங் கிளர்ச்சியான ஒரு சொற்போர் நடைபெற்றது; அஃதிப்போது தான் ஒரு முடிவுக்கு வந்தது.

அரசி: ஆசிரியர் கம்பர் இயற்றிய ராமாணத்தைப் பற்றியதாகத்தான் அச் சொற்போர் நிகழ்ந்திருக்க வேண்டுமென நினைக்கின்றேன்.

அரசன்: நங்கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் செய்த சூழ்ச்சி எளிதிலே நிறைவேறுவதற்கு கம்பரது நூலேமிகவும் இடந்தந்து விட்டது. கம்பர் முன்னோடு பின் முரணாக அத்துணை பிழைபட கடவுள் வணக்கம் பாடுவார் என்று ஞான் நினைக்கவேயில்லை.சிவபிரான் மேலாதல் திருமால் மேலாதல் அவர் கடவுள் வாழ்த்து சொல்லாமல் முத்தொழில் புறியும் முழுமுதற்கடவுளை நேரே கண்டவர்போற்தலைவர் என்னுஞ் சொல்லால் அவ்வார்த்தை முதலிற் கூறினார்.

அரசி: முத்தொழில் புரியுங் கடவுளை வணங்கத் தொடங்கினவர் அவர்கோர் உருவும் பெயரும் ஏற்பித்தன்றி அதனை வாழ்த்தி வணங்கள் இயலாதே.

அரசன்: நீ செல்லும் இத்தடையினையே நம் சைவப் புலவர் நன்கெடுத்துக்காட்டி மறுத்தார். அதற்கு கம்பர் பொருத்தமான விடை சொல்லல் இயலாமல் , ' இப் புலவர் பேரவை பல்சமயப் புலவரும் குழுமிய தொன்றாயி ருத்தலின், அவ்வெல்லார்க்கும் பொதுப்பட வைத்து முழுமுதற்கடவள் வணக்கம் சொன்னேன்' என்றார். உடனே நம் வைணவப் புலவர் எழுந்து முதற் பாட்டிற்கு பொதுக்கடவுள் வணக்கம் சொல்லி பின்னிரண்டு பாட்டுகளில் திருமாளே முதற் கடவுள் என்றது முன்னோடு பின் முரணாமன்றோ என மறுத்தனர்.

அரசி: ஆம், அஃது உண்மைதானே அரசே! முத்தொழிலைப் புரியும் கடவுளினும் மேலாக காத்தற்றொழில் ஒன்றே புரியுந் திருமாலை முதல்வராக வைத்தல் யாங்ஙனம் பொருந்தும்? இதுதானம் உணராமற் கம்பர் முன்னோடுபின் கடவுள் வாழ்த்துப் படியது எனக்கு பெரியதொரு வியப்பைத்தருகின்றது.

அரசன்: சிறு தெய்வ வணக்கத்தில் ஈடு பட்டவருக்கு அறிவுக்கண் குருடாய்விடும் என்பதற்கு கம்பரே ஒரு சான்று. இராமாநுசர் பரப்பிய குருதெய்வகொள்கையில் மயங்கிச், சைவவேளாள செல்வராகிய திருவெண்ணெய் நல்லூர் சடையப்பவள்ளலே ' சடையன்' என தாம் பூண்ட சிவபிரான் பெயரையும் மாற்றி 'சரராமன்' என்னும் வைணவபெயரை தமக்கு புனைந்து கொண்டார். அவரது உதவியையே மிக நாடிநிற்கும் கம்பரும் அவரையொப்ப வைணவ மதவெறிபிடித்து , அவரது ஏவுதலால், அவரது ஊரிலிருந்தே இவ்விராமாயணத்தை இங்ஙனம் முன்பின் முரணாக பாடிமுடித்திருக்கின்றார்.

அரசி: பெரும! பின்னர் கடவுள் வாழ்த்தை பற்றிய முடிவுஎன்னவாயிற்று?

அரசன்: அன்னேரத்தில் நங் கோமாளி துத்திகேட்ட ஒரு கேள்வி, கம்பர் கூறிய விடை பொருந்தாமையினை நன்கு விளக்கியதோடு அவரையும் வெள்க செய்தது. புலவர் எல்லாருக்கும் அஞ்சிய கம்பர் பொதுக் கடவுள் வணக்கம் கூறினர் ஆயின் , அதை புலவர் வணக்கம் என்னாமல் கடவுள் வணக்கம் என்று ஏன் சொல்ல வேண்டும் என்று துத்து வினவினான்.

அரசி: !! குறியான கேள்விதான் அதற்கு யாது விடை
வரும்.........14