Tuesday, January 24, 2006

மகாத்மாவின் கடைசி நிமிடங்கள் - 2 -

வரிசையாகத் தூண்கள் நிற்கும் நீளமான செம்பாறாங்கல் மண்டபப் பாதையில் இரண்டு நிமிஷ நேரம் நடந்து, பிரார்த்தனை மைதானத்துகுச் செல்ல வேண்டும. தினந்தோறும் இந்த இரண்டு நிமிஷ நேரத்திலும் காந்தி தம் தொல்லைகளை யெல்லாம் மறந்து தாமாஷகப் பேசுவார். அன்று ஆபா கொண்டுவந்து கொடுத்தகாரட் கீரைச் சாறு பற்றிக் கிண்டல் செய்தார்.
" ஆகவே நீ எனக்கு மாட்டுத் தீனியைக் கொடுத்து விட்டாய்" என்று சொல்லி அவர் சிரித்தார்.
" இல்லை, இது குதிரைத் தீனி என்றல்லவா பா சொல்லுவார்கள்" என்று ஆபா பதிலளித்தாள். பா என்று அவள் குறிப்பிட்டது காந்தியின் காலஞ்சென்ற மனைவியை.
"வேறு யாருக்கும் பிடிக்காததை நான் சுவைத்துச் சாப்பிடு வதால், நான் எவ்வளவு பெரியவன்?" என்று கேலியாகச் சொன்னார் காந்தி.
"பாபு(அப்பா), உங்கள் கைக் கடிகாரம் அநாதையாகி விட்டது போல் அழுதுகொண்டிருக்கும் அதை இன்று நீங்கள் பார்க்வேயில்லை" என்றாள் ஆபா.
"அதை ஏன் நான் பார்க்க வேண்டும்? நேரத்தைக் கவனித்துக் கொள்ளும் கணக்குப் பிள்ளைகள் தான் எனக்கு இருக்கிறார்களே!" என்று பட்டென்று பதிலளித்தார் காந்தி.
" அந்தக் கணக்குப் பிள்ளைகளையுந்தான் நீங்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை" என்று மனு குறிப்பிட்டாள். காந்தி மறுபடியும் சிரித்தார்.
இந்த நேரத்தில் மைதானத்துக்கு அருகே உள்ள புல்தரையில் அவர் நடந்துகொண்டிருந்தார். தினந்தோறும்மாலையில் நடக்கும் பிரார்த்தனைக்காகச் சுமார் ஐந்நூறு பேர்கள் கூடியிருந்தார்கள் . " இன்று பத்து நிமிஷம் தாமதித்துவிட்டேன். இப்படித் தாமதிப்பது என்றாலே எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. ஐந்து மணி அடிக்கும் போது இங்கே நான் கணக்காய் வந்திருக்க வேண்டும்" என்று தமக்குத் தாமே பேசுவது போல் காந்தி உரக்கச் சொன்னார்.
பிரார்ததனை மேட்டுக்கு ஐந்து சிறுபடிகள் இருந்தன. அவற்றை அவர் வேகமாகக் கடந்தார். மர மேடைக்கு இன்னும்சில கஜ தூரம் தான் இருக்கும். பிரார்த்தனை நடக்கும் போது அந்த மர மேடையிலேயே அவர் உட்கார்ந்திருப்பார். கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பபாலோரும் எழுந்துநின்றார்கள். பலர் முன்னே நகர்ந்து வந்தார்கள். சிலர் அவருக்காகச் சந்தில் வழி விலக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அவருக்கு மிக அருகே இருந்தவர்கள் அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆபா, மனு இருவருடைய தோள்களிலுமிருந்து கைகளை எடுத்துக் குவித்து, ஹிந்து முறையில் காந்தி எல்லாருக்கும் வணக்கம் செலுத்தினார்.
அப்போது ஒரு மனிதன், முழங்கையால் இடித்துத் தள்ளிக் கொண்டு கூட்டத்திலிருந்து சந்துக்குள் வந்து சேர்ந்தான். வழக்கப்படி காந்தியின் பாதத்தில் விழுந்து வணங்க விரும்பிய ஒரு பக்தன் மாதிரி அவன் தோன்றினான். ஆனால் தாங்கள் நேரம் கடந்து விட்டதால், அவனை மனு தடுத்து நிறுத்த முயன்றால்: அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டாள். ஆனால், அவனோ அவளை உதறி ஒரு புறம் தள்ளினான். அவள் உருட்டியடித்துக்கொண்டு போய் விழுந்தாள். காந்திக்கு எதிரே இரண்டடி தூரம்........

நாளை மீதம்

No comments: