Saturday, March 04, 2006

திமுக திருச்சியின் திருப்பம்




சென்னை, மார்ச்.4-

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பகிர்வில் ஏற்பட்ட பெரிய சல சலப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது.

மிகக்குறைந்த தொகுதிகளை ஏற்க மறுத்த ம.தி.மு,க, இன்று துணிச்சலான முடிவை எடுத்து அணி மாறி இருக்கிறது. இதன் மூலம் தமிழக அரசியலில் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ம.தி.மு.க.வுடன் உடன்பாடு காணப்படுவதில் தி.மு.க.வுக்கு தொடக்கத்தில் இருந்தே உரசல்களும், நெருடல்களும் தோன்றின. கூடுதல் தொகுதி பெறுவதுதான் தங்களுக்கு கவுரவமாகவும் உயிரோட்டம் தருவதாகவும் இருக்கும் என்ற எண்ணம் ம.தி.மு.க. தலைவர்களிடம் நிரம்பி இருந்தது. இதை தி.மு.க. தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

என்றாலும் கருணாநிதி கேட்டுக்கொண்டபடி சற்று தியாகம் செய்த ம.தி.மு.க. 25 தொகுதிகளை ஏற்க சம்மதித்தது. ஆனால் முதலில் தி.மு.க. 20 தொகுதிகளை கொடுத்தது. பிறகு 21 என்றது. ம.தி.மு.க. ஏற்காததால் 22 தொகுதி தருகிறோம் என்றனர்.

இதற்கிடையே ம.தி.மு.க. பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானதால் "ம.தி.மு.க.வுக்கு 22 தொகுதிகள்தான் கொடுக்கப்படும். அதற்கு மேல் கொடுக்க இயலாது எனவே கூட்டணியில் இருப்பது பற்றி வைகோ முடிவு எடுக்கட்டும்'' என்று திருச்சியில் நேற்று நிருபர்களிடம் கருணாநிதி தெரிவித்தார்.

கருணாநிதி விதித்த `கெடு' ம.தி.மு.க. தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்கள் ஒருவருக்கொருவர் போனில் தொடர்பு கொண்டு தீவிர ஆலோசனை நடத்தினார்கள். இதையடுத்து அணிமாற ம.தி.மு.க. முடிவு எடுத்தது.

நேற்றே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை வைகோ சந்திக்கப் போவதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதை எதிர்பார்த்து நிருபர்களும், போட்டோ கிராபர்களும் போயஸ் கார்டனில் குவிந்தனர். ஆனால் வைகோ வரவில்லை.

இந்த நிலையில் இன்று காலை வைகோ தன் மவுனத்தை கலைத்தார். அ.தி.மு.க. கூட்டணியில் சேர இறுதி முடிவு எடுத்த அவர் இது தொடர்பாக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து பேச தீர்மானித்தார்.

வைகோவின் முடிவுக்கு ம.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மகிழ்ச்சிப்பொங்க வரவேற்பு தெரிவித்தனர். இதனால் இன்று காலை 10 மணிக்கு வைகோ அண்ணா நகரில் உள்ள வீட்டில் இருந்து உற்சாகத்துடன் புறப்பட்டார்.

எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமைக் கழகமான தாயகத்துக்கு வைகோ வந்தார். அவரை ம.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு வரவேற்றனர். அதை ஏற்றபடி உள்ளே சென்ற வைகோ, ம.தி.மு.க. மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக சுமார் ஒரு மணி நேரம் பேசினார்கள்.

பிறகு 11.30 மணிக்கு வைகோ டி.என். 01 ஆர். 7675 என்ற டயோட்டா காரில் ஏறி முதல்- அமைச்சர் ஜெயலலிதா வீடு இருக்கும் போயஸ் கார்டனுக்கு புறப்பட்டார். அவரது காரை பின் தொடர்ந்தபடி 20 கார்களில் ம.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் அணி வகுத்து சென்றனர். ம.தி. மு.க. துணை பொதுச் செயலாளர்கள் செஞ்சி ராமச்சந்திரன், சத்யா, பொருளாளர் கண்ணப்பன் ஆகியோரும் உடன் சென் றனர்.

இதற்கிடையேவைகோ வரும் தகவல்அறிந்து அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைப்பு செயலாளர் செங்கோட் டையன், கொள்கை பரப்பு செயலாளர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் 11.10 மணிக்கு வந்து தயாராக இருந்தனர். 11.12 மணிக்கு ம.தி.மு.க. அவைத்தலைவர் கணேசன் வந்தார். 11.20-க்கு அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் வந்தார்.

இந்த நிலையில் எழும்பூரில் இருந்து புறப்பட்ட வைகோ கடற்கரைசாலை, ராதாகிருஷ்ணன் சாலை வழியாக 11.45 மணிக்கு போயஸ் கார்டன் வந்து சேர்ந்தார். முதல்- அமைச்சர் ஜெயலலிதா வின் வீட்டுக்குள் வைகோ கார் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.

வைகோவை ஓ.பன்னீர் செல்வம் பச்சை நிற சால்வை அணிவித்து வரவேற்றார். பிறகு வைகோவை அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வரவேற்று வீட்டுக்குள் அழைத்து சென்றனர். அங்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா, வைகோவை வரவேற்றார். பரஸ்பரம் இரு வரும் வணக்கம் தெரிவித்தனர்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வைகோ பூச்செண்டு வழங்கினார். பின்னர் ம.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் ஜெயலலிதாவுக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

இதையடுத்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வும் வைகோவும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார்கள். அப்போது ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டை யன், ஓ.எஸ்.மணியன், ஜெயகுமார், எல்.கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெயலலிதாவும் வைகோவும் கையெழுத்திட்டு ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் கூறி இருப்பதாவது:-

நடைபெறவுள்ள 2006 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இன்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுக்கும், ம.தி. மு.க.வுக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப் படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 22 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது என்று கறாராக கூறினார்கள். ஆனால் அ.தி.மு.க.விடம் இருந்து அதைவிட கூடுதலாக 13 தொகுதிகள் ம.தி.மு.க.வுக்கு கிடைத்து உள்ளது. இது ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண் டர்கள் அனைவரையும் மன நிறைவுக் குள்ளாக்கி இருப்பதாக ம.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

ம.தி.மு.க. தமிழகம் முழுவதும் பரவலாக போட்டியிட விரும்புகிறது. இதற்கு அ.தி.மு.க. தரும் 35 தொகுதிகள் பெரும் உதவியாக இருக்கும் என்று ம.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறினார். அதோடு தென் மாவட்டங்களில் ம.தி.மு.க. விரும்புகிற தொகுதிகளை கொடுக்க அ.தி.மு.க. முன்வந்து இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே அ.தி. மு.க. தலைமையிலான அணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரும் என்று தெரிகிறது. இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி பலம் மேலும் வலுவாகி உள்ளது. தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசி யலிலும் திருப்பங்களை ஏற்படுத்த அ.தி.மு.க.- ம.தி.மு.க. கூட்டணி "பிள்ளையார் சுழி'' போட்டு இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
திருச்சியில் மாநாடு நடத்தினார் தனக்கொரு திருப்பம் ஏற்படும் என கலைஞர் பல கோடி செலவு செய்து மாநாடு நடத்தினார் அவருக்கு பாதகமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. என்னைப் பொருத்த வரை இது மட்டும் போதாது அ.தி.மு.க. விற்கு இன்னமும் கொஞ்சம் பலம் தேவை. காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட், அல்லது ப.ம.க வந்தால் கண்டிபாக அம்மாவின் ஆட்சிதான்.
ஏதோ செல்வி யிடம் வசவு பெற்றவர்கள் முன்னுக்கு வருவார்கள் போல உள்ளது வைகோ, சிதம்பரம், மணிசங்கர அய்யர், இத்தியாதி
எது எப்படியோ தஞ்சை மாவட்டம் ஒன்று சேர்த்து விட்டது இருந்தாலும் அது தான் சாணக்கியம் என்பார்கள்.


1 comment:

ENNAR said...

அந்த அம்மாவை குரல் கொடுக்க வைக்காமல் இருந்தால் சரி அது போதும் நமக்கு.
"ராஜிவ் காந்தியை கொலை செய்த விடுதலைப்புலிகளின் கையாளுடன் கூட்டனி சேர்ந்த ஜெயலலிதாவிற்கா உங்கள் ஓட்டு" என கலைஞர் கேட்டாலும் கேட்பார்.