Friday, May 26, 2006

அம்பிகாபதி அமராவதி - 17 -

அம்பிகாபதி:

என் ஆருயிர்த் துணைவ! நீ இத்துணையன்புடன் எனக்கு நல்லுரை பகரந்ததற்கு மிகமகிழ்கின்றேன். நீ கற்பித்தபடியே நான் அரண்மனையில் முறை வழுவாது நடந்து அமராவதிக்குத் தமிழ் நூல்கற்பித்து வருவேன். பார்! பகலவன் மேல்பால் விரைந்திறங்குகின்றான். நாம் அரண்மனைக்குச் செல்வோம் வா.(இருவரும் வருகின்றனர்)

(சென்று அரன்மனை வாயிற் காவலனை நோக்கி)

நயினார் பிளளை:

கடம்பா! இளவரசியார்க்குப் பாடஞ் சொல்ல இதோ ஆசிரியர் தில்லைவாணரை அழைத்து வந்திருக்கின்றேன். இவர் நாடோறும் மாலைப் பொழுதில் இந்நேரத்திற் பாடஞ் சொல்ல வருவர். இவரை இளவரசியின் கன்னி மாடப் பூங்கா மண்டபத்திற்குத் தடை செய்யாமற் போகவிடு.


வாயிலான்:

நல்லது ஸ்வாமி நம் மன்னர் பெருமானும் முன்னமே எனக்கு இதே கட்டளை தந்திருக்கிறார். அம் மண்டபத்திற்கு இவ்வழியே வாருங்கள் சுவாமிகாள் (இரு வரும் அவனைப் பின்தொடர்ந்து சென்று கன்னி மாடஞ் சேர்கின்றனர்) யார் அம்மா அங்கே? தத்தையா?


வாயிலாள்:

ஆம் ஐயா கடம்பரே. நம் இளவரசியார்க்குப் பாடஞ்சொல்ல ஆசிரியர் தில்லைவாணர் வந்திருக்கின்றனரோ? அம்மையுந் தோழியும் அவரை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். யான் இவர்களைப் பூங்கா மண்டபத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறேன் , நீர் போகலாம். என வாயிலான் போனபின் . ஸ்சுவாமிகள் இவ்வழியே வாருங்கள் (அழைத்து போய் அந்த மண்பத்தில் விட்டு )இவ்விருக்கையில் அமருங்கள் (நயினார் பிள்ளையைப் பார்த்து ) இதோ இடப்பட்டிருக்கும் இத்திரையின் இப்பக்கத்தேயிருந்து தான் ஆசிரியர் பாடங்கற்பித்தல் வேண்டும். இளவரசியாருந் தோழியும் இதன் அப்பக்கத்தே யிருந்துதான் பாடங் கேட்பர். நாளை முதல் ஆசிரியர் என் உதவியை வேண்டாமலே இங்கு இந்நேரத்தில் வந்து பாடஞ் சொல்லிப் போகலாம். (திரைக்கு அப்பால் உள்ள தோழியை விளித்து) அம்மா நீலம்! இதோஆசிரியர் தில்லைவாணரை நம் அமைச்சரின் மகன் நயினார் பிள்ளை அழைத்து வந்திருக்கிறார். எனக்கு யாது கட்டளை?


தோழி:

ஏடி தத்ததே! இதோ! இளவரசியாரை அழைத்து வருகிறேன். நீ போகலாம்.


வாயிலாள்:

அப்படியே அம்மா. இளவரசியார் நீடு வாழ்க! ( திரும்பிப் போகையில் தனக்குள்) ! இவ்வளவு பேரழகுவாய்ந்த இவ்விளைய ஆசிரியர் தில்லைவாணர் எந்த ஊரிலிருந்து வந்தவரோ! மிக்க வனப்புடையா மெழுகு பாவையை யொத்த நம் இளவரசியும் இவரும் ஒருவரை யொருவர் காண நேர்ந்தால் ஒருவர்மேலொருவர் காதல் கொள்ளா திருப்பரோ? ஆகையால்தான் இவருவருக்கும் இடையே திரையிட்டு வைத்திருக்கின்றனர் போலும்! இது நல்லதோர் ஏற்பாடே!


அம்பிகாபதி:

(தன் நண்பனைப் பார்த்து மெல்லிய குரலில் ) அருமை நண்ப! எனக்குரிய பெயரால் என்னைக் குறிப்பிடாமல், தில்லைவாணர் என்னும் பெயரால் நீயும் இங்குள்ளவர்களும் என்னைக் குறிப்பிடுதல் ஏன்?


நயினார் பிள்ளை:

அதைப்பற்றி என் தந்தையாரை முன்னமே கேட்டேன். அவர் அதன் காரணத்தைச் சொல்ல மறுத்தனர். ஈதெல்லாம் ஏதோ ஒரு சூழ்ச்சியாக இருக்கின்றது. "அகலா தணுகாது தீக்காய்வார் போல்க, இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்" என்று தெய்வத் திருவள்ளுவர் கற்பித்தபடி நாம் இங்கே முறை தவறாது நடந்து கொள்ளுதலைக் கருதியே உனக்கு இப்புனைவு பெயர் வைக்கப் பட்டிருக்கின்றதென எண்ணுகின்றேன். என் தந்தையார் உனது நன்மையின் பொருட்டாகவே இங்ஙனஞ் செய்திருக்கின்றார் என்பது என் நம்பிக்கை. ஆகையால் அவர் கட்டளை தந்துள்ளபடி நீ நடக்குமாறு உன்னை மிகவும் வேண்டிக் கொள்கிறேன்.


அம்பி:

ஓ நண்பா! நீ அங்ஙனம் வேண்டல் எதற்கு? கரும்பு தின்னக் கூலியா? நின் தந்தையார் கூர்த்த அறிவும் எல்லார்க்கும் நன்மையே செய்யும் ஈர நெஞ்சமும் உடையவர். அவர் செய்திருக்கும் ஏற்பாட்டில் எனது நன்மையும் உள்ளடங்கி நிற்கும்; அதிற் சிறிதும் ஐயமில்லை.


(அமராவதியும் தோழியுந் திரைக்கு உட்புறத்தே வந்து)

அமராவதி:-

(உள்ளிருந்தபடியே ) ஆசிரியர் தில்லை வணர்க்கு எனது புல்லிய வணக்கம்.


அம்பி:-

(திரைக்கு வெளியேயிருந்து) இளவரசியார் கல்வியிற் சிறந்து பல்லூழி இனிது வாழ்க!


அமரா:-

நயினார் பிள்ளை நும் தந்தையார் அன்னையார் முதலியோருடன் நலமாயிருக்கின்றீரா?


நயினார் பிள்ளை:-

அம்மணி! தங்களருளால் நாங்கள் அனைவரும் நலம்.


அம்பி:

இளவரசியார் இதுகாறும் பயின்றுள்ள நூல்கள் இன்னவை யென்றறிய விரும்புகின்றேன்.


அமரா:

இலக்கியத்தில் "பதினெண் கீழ்க்கணக்கும் "சிலப்பதிகாரம்" "மணிமேகலை" "சீவகசிந்தாமணி" "திருத்தொண்டர் புராண"மும்; இலக்கணத்தில் "தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும்" "இறையனாரகப்பொருள்" "யாப்பருங்கலக் காரிகை"யும் பயின்றிருக்கிறேன். இனித் "தொல்காப்பியப் பொருளிலக்கணமும்" "புறநானூறுந்" தொடங்கல் வேண்டும்.


அம்பி:-

இளவரசியார் பயின்றுள்ள நூல்களில் தாம் அடைந்திருக்கும் புலமையின் அளவை யான் தெரிந்து கொண்டால் தான் அதற்கேற்ப மற்றைப் பெருநூல்களை யான் கற்பித்தல் கூடும்.


அமரா:-

அங்ஙனமே தாங்கள் தெரிந்து கொள்ளலாம் அந்நூல் பொருள்களைப்பற்றித் தாங்கள் வினாவுகின்றவைகளுக்கு யான் தெரிந்தமட்டில் விடை கூறுகின்றேன்.


அம்பிகா:

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருத்தொண்டர் புராணம் என்னும் நான்கு காப்பியங்களின் ஒற்றுமை வேற்றுமைகளையும் ஏற்றத்தாழ்வுகளையுஞ் சிறிது எடுத்துக் காட்டுங்கள்!


அமராவதி:

இது மிகப்பெரிய வினா; என் அறிவின் அளவுக்கு மேற்பட்டது. ஆயினும், ஆசிரியர் வினாவியதனால் விடை சொல்லக் கடமைப் பட்டிருக்கின்றேன். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் நம் தமிழ் நாட்டு மேன்மக்கள் சிலரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நிகழ்ந்தபடியே மெய்யாக வைத்துச் சுவைபடுத்திக் கூறுகின்றன; இவ்வகையில் மணிமேகலையைவிடச் சிலப்பதிகாரமே சிறந்ததெனக் கருதுகின்றேன். மேலும், மணிமேகலை ஒரே தன்மையவான அகவற்பாக்களினால் ஆக்கப்பட்டிருக்கின்றது. சிலப்பதி காரமோ ஆங்காங்கு நிகழும் நிகழ்ச்சிகளில் ஈர்ப்புண்டு மக்கள் உள்ளம் எவ்வெவ்வாறு அசைவுறுகின்றதே அவ்வவ்வாற்றிற் கிசைந்தபடி யெல்லாம் அகவற்பா கலிப்பா வஞ்சிப்பா முதலான பலதிறப்பாக்களும் இசை தழுவி யாக்கப்பட்டுத் தான் கூறுங் கதை நிகழ்ச்சிகளை நம்கண்முன்னே காட்டிப் பல்வகையுணர்வெழுச்சிகளால் நம்மை யின்புறுத்துந் தகையதாய் விளங்குகின்றது. உண்மையை உள்ளபடி எடுத்துச் சொற்சுவை பொருட் சுவை துளும்பத் தொடுத்து இசைத்தேன் துளிக்க மிழற்றும் முறையிற் சிலப்பதிகாரமும் திருத்தொண்டர் புராணமும் ஒருங்குவைத் தெண்ணற் பாலனவென்டபது சிறியேன் கருத்து.

அம்பிகாபதி:-

இளவரசியாரின் கருதது மிகவும் பொருத்தமாயிருக்கின்றது. ஆயினுஞ் செயற்கரிய செய்கைகளால் தாம் சிவபிரான் திருவடிக்கண் வைத்தபேரன்பிற் சிறிதும் பிறழாமையினைத் தெருட்டிய மெய்யடியார் வரலாறுகள் எல்லா நலனுந் தோய்ந்தொளிரக் கொண்டு, ஆசிரியர் சேக்கிழார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராணந் துலங்கா நிற்கின்றது; மற்றுச் சிலப்பதிகாரமோ எம்போன்ற மக்களின் வாழ்க்கைவரலாற்றினை நுவலா நிற்கின்றது; இது தமிழ் நலம் ததும்ப இயற்றப்பட்ட தொன்றாயிருப்பினும் இதனை அதற்கு ஒப்பாக உரைத்தல் கூடுமோ?
வரும் ......18ல்

1 comment:

ஓகை said...

நல்ல பதிவு