Wednesday, May 24, 2006

அம்பிகாபதி அமராவதி - 16 -

மூன்றாம் நிகழ்ச்சி: முதற்காட்சி

களம்: அமராவதி இருக்குங் கன்னிமாடம்

தோழி: அம்மா அமராவதி! நம் ஆசிரியர் கம்பர் நேற்றுத்தான் வெளியூருக்குப் போய் இருக்கிறார் அவர் திரும்பிவர ஓராண்டு செல்லுமாம், அதுவரையில் நமக்குக் கல்வி கற்பிக்கத் தில்லைவணர் என்னும் ஒரு சிறந்த தமிழாசிரியர் ஏற்படுத்தப் பட்டிருக்கிறார். அவர் கட்பார்வையிழந்த குருடராதலால், அவரை நாம் யாரும் பார்க்கலாகாதாம். அவர்க்கும் நமக்கும் இடையே சாயம்பூசிய தடிப்பான ஓர் இரட்டுத் திரை கட்டி, அத்திரையின் வெளிப்புறத்தில் அவர் இருந்து பாடஞ்சொல்ல, நாம அதன் உட்புறத்திலிருந்து பாடங்கேட்டல் வேண்டுமாம். இதனை நின் அன்னையரான அரசியார் உனக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள். நம் அமைச்சரின் மகன் நயினார்பிள்ளை தான் ஆசிரியருடன் வருவார்.

அமாராவதி: ஏடி நீலம் ஈதென்னடி ஒரு பெரு வியப்பாயிருக்கின்றதே! கண்ணில்லாக் குருடர் ஒருவர் எங்ஙனங் கல்வி கற்றார்? அவர்எங்ஙனம் நமக்குப் பாடஞ் சொல்வார்? என வியப்புறுகின்றேன்.

தோழி: அப்படியன்று அம்மா அவர்க்குக் கண் குருடாய்ப் போனது சில ஆண்டுகளுக்கு முன்னே தானாம் அவர் தமக்கு இருபதாமாண்டு நிரம்புமுன்னமே தமிழ் இலக்கண இலக்கிய நூல்களுங் கலைநூல்களும் ஆழ்ந்து ஆராய்ந்து கற்றுத்தேர்ந்த நுண்ணறிவனராய் விட்டனராம். இருபதாமாண்டு கடந்தபிறகு தான் அம்மைநோய் கண்டு அவர்க்குக் கண் குருடாயிற்றாம். இப்போதவர்க்கு இருபத்தைந்தாமாண்டு நடக்கிறதாம். அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நமக்குக் கல்விதானே வேண்டும்..

அமரா:அதுண்மைதான். அவர் இளமையிலேயே கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தால் பின்னர்க் கண் குருடாய்ப் போனாலும் பாடஞ்சொல்வதிற் சிறிதுங்குறை இராதென்றே நம்புகிறேன். அவர் குருடராய் இருந்தலால் நமது மேல் மாளிகைக்கு வருவது அவர்க்கு இடர் பாடாயிருக்கும். ஆதலால், இக் கன்னி மாடத்தின் பின்னுள்ள பூந்தோட்ட மண்டபத்தில் இருந்தே நாம் பாடம் கேட்க வேண்டும் . ஒழுங்குகளை என் அன்னையல்தெரிவித்தபடியே போய்செய். மாலை நேரம் நெருங்குகின்றது. ஆசிரியர் தில்லை வாணர் விரைவில் வந்துவிடுவர். அவர் நம் கண்ணல்படாமல் வரவும், வந்திருந்து பாடஞ் சொல்லவும், சொன்னபின் திரும்பிச் சொல்லவும் நாம் அமைச்சரின் மகன் நயினார் பிள்ளையும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வா ரெனக் கருதுகின்றேன்.
(
தோழி போய்விடுகிறாள்)

மூன்றாம் நிகழ்ச்சி : இரண்டாம் காட்சி

களம் : கம்பரது மாளிகை
அம்பி: வருக வருக என் நண்ப நயினார்பிள்ளை நின்னைச் சில நாட்களாய் யான் காணவில்லையே!

நயினார்: அம்பிகாபதி நின்னைக் காணத நாடகள் பயனில் நாட்களே நம் மன்னர்பிரான் கட்டளைப்படி என் தந்தையாரால் ஏவப்பெற்றுச் சடையவர்மன் குலசேகரபாண்டியனை இங்கு அழைத்துவரும் பொருட்டு மதுரைமாநகர் சென்று நேற்றுத்தான் அவனை அழைத்துக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன்.

அம்பி: எதற்காக நம்மரசர் அப்பாண்டிய இளவரசனை அத்தனை விரைவாக இங்கு அழைப்பித்திருக்கின்றனர்?

நயினார்:நம்மரசரின் மகள் அமராவதிக்குத் திருமணஞ் செய்ய ஏற்பாடாகின்றது. குலசேகரன் அமராவதிக்கு மாமனாதலால் இருவரும் பழகும் பொருட்டு அவன் வருவிக்கப்பட்டிருக்கலாம்.

அம்பி: அவன் அங்ஙனம் விரைந்து வருகைக்கு அதுதான் காரணமா இருத்தல் அதுயிருக்கட்டும். இளவரசி அமராவதி கூர்த்த அறிவும் முத்தமிழ்ப்பயிற்சியும் உடையவளாயினுங் கைகால் முடமாயிருப்பவள் என்றும், அழகற்ற முகத்தினளென்றும் நின் தந்தையார் சொல்லக்கேட்டேன். ஆனால், என் தந்தையாரோ நீண்ட காலமாய் அவட்குப் பாடஞ்சொல்லி வருபராயிருந்தும், அவளுடைய யாக்கையின் குற்றத்தையும் முக அழகு இன்மையினையும் எனக்குச் சொன்னதேயில்லை?

நயினார்: அவள் நம் அரசர்ககு ஒரே செல்வப் புதல்வியாய் இருத்தலால், அவளைப் பற்றிக் குறைவு சொன்னால் அஃதொரு பெருங்குற்றமாகக் கருதப்படுமன்றோ? அதனால்தான் நின் தந்தையார் அவளிடத்துள்ள உடற் பழுதினைக் கூறினாரில்லை யென எண்ணுகிறேன். அரசர் குலசேகரனை வருவித்ததும் அவன் அவளை மணந்து கொள்ளுமாறு இணக்குதல் பொருட்டே போலும்.!

அம்பி: இருக்கலாம். இம்மாலைப் பொழுதிலிருந்து யான் இளவரசி அமராதிக்குக் கல்வி கற்பித்து வரும்படி நம் சோழ மன்னர் கட்டளை யிட்டிருக்கின்றாரென நின் தந்தையார் எனக்குச் சொல்லினர்.

நயினார்: அதனை மீண்டும் உனக்குத் தெரிவித்து இன்னுஞ்ச் சிறிதுநேரத்தில் உன்னை அரண்மைனக்கு அழைத்துச் சென்று, அங்கேகன்னிமாடத்தின் பின்னேயுள்ள இளமரக்காவின் எழில்கெழு மண்டபத்தில் இளவரசிக்குப் பாடஞ் சொல்லுமிடத்தில் நின்னை விட்டு வரும்படி என் தந்தையார்என்னை ஏவியிருக்கின்றனர். அதனோடு இளவரசி நின்னைப் பார்க்கவும் நீ அவளைப் பார்க்கவுங்கூடாதபடி நும்மிருவருக்கும் இடையே திரையிடப்பட்டிருக்குமாம். அங்ஙனம் திரையிட்டது உடற்பழுதுள்ள இளவரசியை வெளியார் எவரும் பாரக்கலாகாது என்பதற்கே. அதுபோக நீ தொட்டதற்கெல்லாம் பாட்டுப் பாடும் இயற்கையினனாதலால், அரண்மைன இளமரக்கா அதன் மண்டபம் முதலியவைகளின் அழகுகளைக் கண்டவுடனே பாட்டுப்பாடி விடாதே. அவட்குப் பாடஞ் சொல்லி வீட்டுக்குத் திரும்பும் வரையில் நீ கண்ணில்லாத ஒரு குருடனைப் போவே நடந்து கொள்ளல் வெண்டுமென்று என் தந்தையார் வற்புறுத்திச் சொன்னார். சிறிது பிசகு கண்டாலும் நம் அரசர் பெருஞச் சீற்றங் கொள்ளுமியல்பினராதலால் மிகவுங் கருத்தாக நீ நடந்து கொள்ள வேண்டும். அறிவிற் சிறந்த உனக்கு யான் வேறு மிகுதியாய்ச் சொல்ல வேண்டிவது என் உளது? நீ மேற்கொண்ட செயலை இறைவன் இனிது நிறைவேற்றுவானாக.
வரும்.....17

4 comments:

குமரன் (Kumaran) said...

மிக அருமையான திட்டமாக இருக்கிறதே!!! :-)

ENNAR said...

'வண்டறியாமல் இருக்க முல்லை மணத்திற்கு முக்காடு இடுகிறார்கள்'
முடியுமா?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

சீனி சக்கரையை மிளகாய் என்றெழுதி எறும்பிடம் காக்கலாம் என்பது போலிருக்கிறது

ENNAR said...

அப்படி செய்தும் தான் அவர்கள் காதலை தடுக்க முடியவில்லையே குமரன்