Tuesday, May 30, 2006

அம்பிகாபதி அமராவதி - 18 -

அமராவதி:-

ஆம். அதற்கு இதனை ஒப்பாக உரைத்தல் பொரும்பாலும் இசையாததேயாம். ஆயினுஞ், சுவாமி! காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார், திலகவதியார், பரவையார், சங்கிலியார் முதலான தெய்வக் கற்பரசிகளின் வரலாறுகளை ஆசிரியர்

சேக்கிழார் நுவலுமாறு போலவே, கண்ணகி, மாதவி என்னும் கற்பணங்குகளின் வரலாறுகளை ஆசிரியர் இளங்கோவடிகளும் எமது நெஞ்சம் நெக்கு நெக்குருக இயம்பி இருக்கின்றார். அவ்வாற்றால் அவ்விருகாப்பியங்களுந் தம்முள் ஒக்குமன்றோ?

அம்பிகா:

இளவரசியார் அவ்விரண்டுக்கு முள்ள ஒற்றுமையினை எடுத்துக்காட்டிய நுட்பம் பெரிதும் பாராட்டற்பாலது. இனி மெய்ந்நெறி பிறழ்ந்தவரக்களுங் கற்பிற் சிறந்த காதன் மனைவியர்க்குப் பிழைசெய் தொழுகினவர்களும் முன்னர் ஒருக்கப்படினும் பின்னர் அருள் செய்யப்பட்டமையினை அப்பர், கூன்பாண்டியன், சுந்தரமூர்த்திகள் முதலானவர்கள் பால் வைத்துச் சேக்கிழார் கூறுமாப்போல் இளங்கோவடிகள் கூறவில்லையே!

அமராவதி:-
அப்பர், கூன்பாண்டியன், சுந்தரமூர்த்திகளெல்லாம் எந்த நிலையிலும் சிவபிரான் திருவடிக்கட்பதிந்த பேரன்பிற் சிறிதும் பிறழாதவர்கள்; ஆதலால் அவர்கள் தாஞ்செய்த பிழைக்காக முன்னர் ஒருக்கப் படினும், பின்னர் அருள் செய்யப்பட்டார்கள், மற்றும் கோவலனும், பாண்டியன் நெடுஞ்செழியனும் அவர்போல் இறைவன்பாற் பதிந்த மெய்யன்பினராதல் காணப்படாமையின், அவர் ஊழ்வினையின் பாலராய்க் கிடந்து ஒறுக்ப்பட்டு மடிந்தனர்! அவர் அருளின் பாலராய்நில்லாமையால், அவரை "ஊழ்வினை உருத்து வந்து ஊட்"டியதென இளங்கோவடிகளும் இயம்பி இருக்கின்றனர்.


அப்பிகாபதி:-
அது தான் உண்மை! இவ்வேற்றுமையிலும் அவ்விரண்டு காப்பியங்களும் ஓர் ஒற்றுமையுடை யனவாயே திகழ்கின்றன. அது நிற்க. திருத்தொண்டர் புராணத்தில் சிவபிரானுக்கு முதன்மை சொல்லப்பட்டியிருத்தல் போல சிலப்பதிகாத்தில் சொல்லப்பட்டுளதோ.


அமராவதி:-
சொல்லப்பட்டிருக்கின்றது சாமி காவிரி பூம் பட்டினத்திலிருந்த தெய்வங்களின் திருக்கோவில்களைச் சொல்லுங்கால் பிறவா யாக்கை பெரியோன் கோவிலும் என்று சிவபிரான் கோவிலையே ஆசிரியர் இளங்கோவடிகள் இந்திர விழா ஊர்எடுத்த காதையில் முதற்கண் வைத்துரைக்கின்றார். மற்றை தெய்வங்கள் எல்லாம். பிறந்து இறப்பன ஆதலால் அவை உண்மையில் தெங்வங்கள் ஆகா அதனால் அவை பெரியனதும் ஆகா . மற்று சிவபெருமான் ஒருவனே பிறவா ஒளியுருவினாகலான் அவனே உண்மையான தெய்வமாவன் அதனால் அவனே பெரியன்(மகாதேவன்) ஆவன். என்று அச்சொற்றொடரில் அறிவுறத்தியிருக்கின்றனர் இத்தகைய மெய்ம்மைச் சொற் தொடரால் மற்றைய தெய்வங்களை வேறு எங்கும் அவர் ஓதிற்றிலர்.


அம்பிகாபதி: உண்மை! உண்மை !! சிலப்பதிகாரத்தில் இன்னும் பல இடங்களிலும் இளங்கோவடிகள் முதன்மைக்கூறியிருப்பினும், ஈதொன்றே போதும். அது நிறக, திருத்தொண்டர் புராணத்திற்குஞ் சீவக சிந்தாமணிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைஞ் சிறிது நுவலுங்கள்!


அமராவதி: சிந்தாமணி, சீலகன் தன் கலையுணர்வின் திறத்தாலும், போர்திறத்தாலும், நுண்ணறிவாலும் எட்டு மனைவியரை மணந்து ஒருவாழ்க்கை வரலாற்றை சொல்கின்றதேயன்றி, செயற்கறியசெய்த பெரியார் வரலாறுகளை திருத்தொண்டர் வராலாறுபோல் சொல்கின்றிலது. மேலும் மக்களை மேல்நிலைக்கண் உய்க்குந்தெய்வ அருள் விளககுமுஞ் சிந்தாமணியிற் காணப்படுகின்றிலது. அது வல்லாமலுஞ் சீவகன் வரலாறு உண்மை என்பதற்குச் சான்றுமில்லை. பெரிய புராணம் மெய்யடியார் வரலாற்றின் உண்மையினை உள்ளபடியே நுவல்வது; அவ்வரலாறுகளின் உண்மைக்கு சான்றுகள் மிகுதியாம்; உள்ளன. உண்மையே கூறும் தமிழ் வழக்கிற்கு சீவக சிந்தாமணி சிறிதும் ஒவ்வாது.


அம்பி: இரண்டுக்கும் வேற்றமை சொன்னீர்கள் ஒற்றுமை ஏதேனும் உண்டா?


அமரா: வல்லோசையின்றி தமிழ் சுவை துளும்பும் இணிய மெல்லோசை வாய்ந்த நடையில் ஆக்கப்பட்டிருத்தலின் சிந்தாமணியுந் திருத்தொண்டர் புராணமும் ஒற்றுமையுடையன எனவே உறைக்கலாம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் இந்த வகையிலும் கூட பெரிய புராணமே சிந்தாமணியிலும் சிறந்து திகழ்கின்றது.


அம்பி: ஆம், ஆம் நடையழகிற் சிந்தாமணியை விட சிலப்பதிகாரமே பெரியபுராணத்திற்கு ஒப்பாக நிற்கற்பாலது. பெரும் மாட்சியிலோ பெரியபுராணத்திற்கு ஒப்பாகவோ உயர்வாகவோ நிற்க வல்ல காப்பியமேதுமேயில்லை. இளவரசியார் இலக்கியத் துறையில் இத்துணை அழகாக இறங்கி அவ்வந் நூற்றான்மை ஆய்ந்தெடுத்தறிந்திருப்பது மிகவும் வியக்கற்பாலது அது நிற்க, இலக்கணத்திலும் ஒன்று வினவி, அதற்கு மேல் இளவரசியார்க்கு வருத்தங் கொடாமல் நிறுத்துகின்றேன்.


அமராவதி: ஆசிரியர்க்கு விடைகூறுவதிற் சிறிதும் அடியேற்கு வருத்தந்தோன்றவில்லையே


அம்பி: உவந்தேன் ஆசியர் தொல்காப்பியனார் ஆறறிவுடைய மக்களை மட்டுமே உயர்திணைஎனக் கொண்டு, 'உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே, அஃறிணை என்மனார் அவரல பிறவே' என்று கூறினார் இக்காலத்தார்க்கு 'நன்னூல்' செய்த பவணந்தியாரோ , மக்கள், தேவர் ,நரகர் என்னும் முப்பாலரையும் உயர்திணை எனக்கொண்டு 'மக்கள் தேவர் நரகர் உயர்திணை மற்றுயிருள்ளவும் இல்லவும் அஃறிணை' எனக்கூறுகின்றார். இவ்விரண்டில் எது தங்கட்கு பொருத்தமாக காணப்படுகின்றது?


அமாராவதி: இலக்கணமென்பது எல்லா சமயத்தார்க்கும் பொதுவான நிலையில் நின்று, ஒரு மொழியின் சொற்பொருள் அமைதிகளை கண்ணாற் கண்டு அறிவான் ஆராய்ந்து காட்டுவது. கட்புலணாகாதவைகளை சிறுபான்மை சொல்ல நேர்ந்தால் மொழியமைதியினளவுக்கு வேண்டும் துணையே அது கூறுதல் வேண்டும் இந்த முறையிற் பார்த்தால் ஆறறிவுடைய மக்களே உயர்திணை என்பது. எல்லாராலும் கற்புலனாக அறியப்பட்ட உண்மையாகும். மற்று, தேவர், நரகர் என்பார் எல்லாராலும் கட்புலனார் காணப்பட்டவரல்லர்; அதனால் அவரை உயர்திணை என்று கொள்வது எல்லார்க்கும் உடன்படான்று. ஆகவே தொல்காப்பியனார் மக்களை மட்டும் உயர் தினை என்று வரையறுத்துரைத்ததே சாலமும் பொருத்தமுடை தென கருதுகின்றேன்.


அம்பி: இளவரசியாரின் ஆராய்ச்சியறிவின் திறம் மிகவும் பாராட்டற்பாலது. இனி இப்பொது புறநானூற்றின் கடவுள் வணக்கச் செய்யுளை தொடங்கலாம்.

(அங்கனமே அமராவதி அதனைப் படிக்க அப்பிகாபதி அதற்கு பின்னர் சில செய்யுட்களுக்கும் உறைசொல்லி விடைபெற்று நண்பனுடன் இல்லஞ் செல்கின்றான்)
வரும்...19

No comments: