பேகர் சீனாவிலிருந்து மூன்று சீடர்களோடு தமிழ் நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். நன்றியுள்ள ஒரு நாயும் அவர்களை விடாமல் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
இமய மலைகளின் கொடிய குளிரும் நெடிய பயணமும் அவர்களை வருத்தின. குளிரைத் தாங்கவும் நடைக் களைப்பால் சோர்ந்து போகாமலிருக்கவும் போகர் பல அரிய மூலிகைகளைக் கொண்டு காய கல்பக் குளிகைகளைச் செய்து கொண்டு வந்திருந்தார்.
அந்தக் குளிகைகளில் ஒன்றை முதலில் அந்த நாய்க்குக் கொடுத்தார். குளிகையை விழுங்கியவுடன் நாய் சுருண்டு மடங்கி விழுந்தது. பிறகு ஒரு சீடனுக்குக் கொடுத்தார். அவனும் விழுந் பிணம் போல் கிடந்தான் பிறகு மற்ற சீடர்கள் இருவருக்கும் கொடுத்தார்.
சீடர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களுக்குச் சாக மனம் வரவில்லை. குளிகையை விழுங்குவது போல் பாசாங்கு செய்து விட்டு மறைத்து வைத்துக் கொண்டனர்.
போகமுனிவர் தாமும் ஒரு குளிகையை விழுங்கினார். அதே இடத்தில் இறந்தவர் போல் விழுந்து விட்டார்.
சீடர்கள் குளிகைகளை வீசி எறிந்தனர். "ஐயோ குருநாதா! போய்விட்டீர்களே" என்று அடித்துக் கொண்டு அலறி அழுதனர். பிறகு இறந்தவர்களை நல்லபடி அடக்கம் செய்யவேண்டும் என்று நினைத்தவர்களாகப் பெட்டிகள் வாங்கிக் கொண்டு வருவதற்காகச் சென்றனர்.
அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது இறந்து கிடந்தவர்களைக் காணவில்லை. போகமுனிவரும் அவருடைய உண்மையுள்ள சீடனும், நாயும் வெகு தொலைவில் போய்க் கொண்டிருந்தனர்.
காய கல்பக் குளிகையின் வேகம் தாங்காமல் மூர்ச்சித்து விழுந்தபின் அந்தக் குளிகை உடலில் வேலை செய்து பல மாற்றங்களை உண்டாக்கிப் புதிய தெம்புடனும் ஆற்றலுடனும் அவர்களை எழச் செய்திருக்கிறது. மூடர்களான சீடர்கள் அதை உணரவில்லை. தமது அறியாமையை நினைத்து வருந்தியபடி சீடர்கள் வந்த வழியே திரும்பினர்.
சீனாவிலிருந்து போகமுனிவரை புலிப்பாணி சுமந்து கொண்டு வந்தார் என்று சொல்வதை விட இந்தக் கதையே பொருத்தமாக இருக்கிறது. போகமுனிவர் பழனியில் வாழ்ந்தார். தண்டபாணி சிலையை நவ பாஷாணக் கட்டால் சமைத்தார். கோவிலில் பிரதிஷ்டை செய்தார். தமக்குப் பின் புலிப்பாணியை பூஜை முதலானவற்றைக் கவனித்துக் கெகாள்ளும்படி நியமித்துவிட்டுச் சமாதியடைந்தார். (பழனியாண்டவர் சந்நிதிக்குப் பின்புறத்திலேயே போகர் சமாதி இருக்கிறது) என்பவை கண்கூடாகத் தெரியும் உண்மைகள். ஆயினும் போகர்டவரலாறு மிகவும் சர்சசைக் கிடமளிப்பதொன்றாகும் . அவரைப் பற்றி வழங்கப்பட்ட கட்டுக் கதைகளும் ஏராளம்.
எஸ்.பி. இராச்சந்திரன்-சித்தர்கள் வரலாறு நூலில் இருந்துதொடரும்.........
No comments:
Post a Comment