Wednesday, April 26, 2006

அம்பிகாபதி அமராவதி - 10 -

அம்பி: அற்றேல் வைணவமத ஆழ்வார்களில் ஏனையோரைவிட மெய்யுணர்வில் மிக்கவருங் காலத்தால் முற்பட்டவருமான பொய்கையாழ்வாரும் பேயாழ்வாரும், "பொன்திகழும் மேனிப் புரிசடையம் புண்ணியனும் நின்றுலகந் தாய நெடுமாலும்--என்றும் இருவரங்கத் தால்திரிவரேனும் ஒருவன் ஒரவரங்கத் தென்றும் உளன்" என்றும், "தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவுஞ் சக்கரமும் சூழ் அரவும் பொன்ஞாணுந் தோன்றுமால்--சூழுந் திரண்டருவி பாயுந் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து"
என்றும் முறையே பாடிச் சிவபெருமானையுந் திருமாலையும் உயர்வு தாழ்வு கருதாது ஒத்த நிலையில் ஓருருவில் வைத்துக் கூறியிருக்கின்றனராதலால், அது வைணவமதக் கொள்கை என்பது பொருந்தாது. (அரசனம் அமைச்சனம் அம்பிகாபதியின் விடையை வியந்து மகிழ்கின்றனர்)

சைவசமயப் புலவர்: தீவடிவினனான சிவபிரானுக்கு நீர் வடிவினனான திருமால் ஒரு தேவியேயெனச் சைவ சமயாசிரியர் நால்வரும் அருளிச் செய்திருத்தலால், அதனையே முதலாழ்வார் இருவருந் தழீஇக் கூறினர். அதனால், அது வைணவத்திற்கே உரிய கொள்கையாதல் எங்கனம்,? இம் முதற் பெருங் கொள்கையில் வேறாகாத போது, வைணவத்தைப் பிறிதொரு மதமாக வைத்துரைத்தல் இசையுமா?

வைணவப் புலவர்: முதலாழ்வார் இருவர்க்கும் பின் வந்த நம்மாழ்வார் முதலானவர்கள் கைக்கொண்ட கொள்கையே எம்மனோர்க்குரிய உண்மை வைணவமாகும். அதனை விடுத்துச், சைவ சமயச் சார்பில் நின்று முதலாழ்வார் பாடியருளிய திருப்பாட்டுகளை எடுத்டதுக் காட்டி அம்பிகாபதியார் கூறிய விடை எம்மனோர்க்கு உன்பாடாகாது.

அம்பி: பண்டைக்காலத்தே, அதாவது இற்றைக்கு ஆயிரத்தி இருநூறாண்டு கட்கு முற்பட்ட காலத்தே சைவம் என்றும் வைணவம் என்றும் இரு வேறு மதங்கள் இருந்தமைக்குத் தினையளவு சான்றுதானும் இல்லை. எல்லாரும் "நீலமேனி வாலிழை பாகத் தொருவனையே" வணங்கியும் வாழ்த்தியும் வழிபட்டும் வந்தனர். சைவசமய ஆசிரியரும், முதலாழ்வார் இருவரும் அம்மெய்ந் நெறியிற் கடைப் பிடியாய் நின்றே நம்மனோர்க்கு முழுமுதற் கடவுளுண்மையினை அறிவுறுத்தினர். அவர்க்குப் பிற்காலத்தில் வந்தவர்களே மதவெறி பிடித்துத் திருமாலையுயர்த்திச் சிவபெருமானைத் தாழ்த்தி, தம் புன்செயலுக்கேற்ற புராண கதைகளைப் பொய்யாகப் புனைந்து கட்டி மதவேற்றுமையுண்டாக்கிப் பிறவிப்பயனைத் தாமும் இழந்து பிறரும் இழக்கும்படி செய்துவிட்டனர்! இவ்வுண்மையினையே என் தந்தையாரும் இவ்விராமாவதார காவியத்தின் கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலத்தில்,
"
அரனதிகன் உலகறந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவிலார்க்குப், பரகதிசென்றடை வரிய பரிசே போல்" என்று விளக்கடமாக நன்கெடுத்துப் பாடியிருக்கின்றார். மேலும, "நம்மாழ்வார் சிவபிரானை இழிவாக விடுத்துத் திருமாலையே உயர்வாகப் பிடித்துப் பாடிய கொள்கையினர்" உன்மையன்று; அவர்,
"
பூத்தண் துழாய்முடியாய் புனைகொன்றையஞ் செஞ்சடையாய்"
என்றும்,
"
என மலைமகள் கூறன்றன்னை. . . எயில் முன்றெரித்த
வென்று புலன் துரந்த விசும்பாளியைக் காணேனோ"
என்றும்,
"
முனியே நான்முகனே முக்கண் அப்பா"

என்றுஞ் சிவபொருமானைப் படலவிடங்களில் அன்புதுளும்ப வழுத்திக் கடைப்படியாக நின்ற பாட்டில்,

"
அவாவறச் சூழ் அரியை அயனை அரனைஅலற்றி
அவாவற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன்"

என்று முடித்துக் கூறியும் இருக்கின்றார்.

சைவசமயப் புலவர்: அவ்வாறு எனில் கம்பர் தாம் இயற்றிய இந்நூலுக்கு 'இராமாவதாரம்' எனப் பெயர் வைத்த தென்னை?.

அம்பி: இந்நிலவுலகில் தீயவர் தொகையுந் தீமையும் மிகுந்து. நல்லவர் குழுவும் நன்மையும் அலைவுற்றுக் குன்றுகின்ற காலத்தே, எல்லாம் வல்ல இறைவன் தன்னருட் செயலுக்குத் தக்கார்பால் நின்று தீயாரைத் துடைத்து நல்லரைப் புரப்பான். ஆதலால், அரக்கரின் கொடுமை பெருகி அறவோரின் பெருமை அருகிய பண்டை நாளில் இறைவன் இராமபிரானைப் பிறப்பித்து அவன் பால் முனைந்து நின்று அரக்கரை அழித்து அறவோரை ஓம்பினான். கட்புலனாகத இறைவன் செயல் கட்புலனாய்ப் பிறந்த இராமபிரான் என்னுந் தக்கோன்பால் நின்று அவனை இயக்கித் தன் நோக்கத்தினை முடித்தது. ஆகவே, தக்கோனான இராமன் பிறப்பினையும் அதனால் உலகத்திற்கு விளைந்த நன்மையினையுங் கூறுதலின் இக்காப்பியத்திற்கு 'இராமாவதாரம்' எனப் பெயர் தந்தனர் என் தந்தையார்.
வரும்.....11

No comments: