Wednesday, April 26, 2006

அம்பிகாபதி அமராவதி - 9 -

அம்பிகாபதி: (உடனே எழுந்து) 'புலவர் ' என்னும் சொல்லுக்கு 'கடவுளர்' என்றும் ஒரு பொருள் உண்டு. அதனால் கடவுள் வணக்கஞ் சொல்லவே, புலவர் வணக்கமும் அதில் அடங்கும் (எல்லாறும் அம்பிகாபதியின் நுண்ணறிவினை வியக்கின்றனர்)



கோமாளி: அப்படியானா, சாமிங்களா ! எனக்கொரு வரங்கொடுங்க ! எம்பொண்டாட்டிக்கு ஆம்பிளைப் பிள்ளை மேலே ஆசை , எனக்குப் பொம்பள பிள்ளே மேலேதான் ஆசை எனக்கொரு பொம்பள பிள்ளைக்கி வரம் கொடுங்க .

புலவர்:( குலுங்கி சிரித்து) அப்படியே தந்தோம்



அரசன்: ஏடா, துத்தி! வாயை மூடு சிவ பூசையில் கரடியைவிட்டோட்டுதல் போல் புலவர்கள் பேச்சினிடையே ஏதும் உளராதே!

(அவன் வாயை மூடிக் கொண்டு அச்சமுற்றவன் போல் நிற்க கண்டு எல்லோரும் நகைக்கின்றனர்)

கூத்தர்: முதற் செய்யுளிற் போந்த முழுமுதற் கடவுள் வணக்கத்திற்குப் பின்னிரண்டு செய்யுளிற் போந்த திருமால் வணக்கம் மாறாயிருக்கின்றதன்றோ? என்ற வினாவுக்கு விடை தரல் வேண்டும்.(என்று கம்பரை நோக்கிக் கூற கம்பர் தம் மகனை நோக்கல்)

அம்பிகாபதி: காணவுங் கருதவும் படாத முழுமுதற் கடவுளை வாழ்த்துவது முகமனே யாதலால், சத்துவ குணத்தின் பாற்பட்டுக் காணவுங் கருதவும் எளிதாக நம்மனோர்க்குத் திருமால் வடிவிற்றோன்றிய அம்முதற் கடவுளைப் பின்னிரண்டு செய்யுட்களில் வணங்கியது மாறுகோளாகாது.

சைவசமய்ப் புலவர்: அற்றேல் , முழுமுதற் கடவுளை வாழ்த்திய முதற் செய்யுள் முகமனேயன்றி உண்மையன்றென்பது. அம்பிகாபதியாரால் ஒப்புக் கொள்ளப் பட்டது. அது நிற்க, முக்குணங்களுங் கடந்த முழுமுதல் அம் முக்குணங்களுள் ஒன்றான சத்துவத்தின் பாற்பட்டுத் தன் பெருமை குன்றிச் சிறுமை எய்திய தெனல் அதன் இறைமைக்கு இழுக்காம். அங்ஙனஞ் சிறுமைபட்ட திருமாலை முதல்வராக இசைப்பது யாங்ஙனம் பொருந்தும்?


அம்பி: இந்நிலவுலகத்தைவிட எத்தனையே கோடி மடங்கு பெரிதான பகலவன் மண்டிலம் இங்கிருந்து நோக்கும் நம்மனோர் ஊனக்கண்களுக்கு ஒரு சிறு சிவந்த வட்டம் போல்தோன்றினும், அது தன்னளவில் மிகப் பெரிய தோர் உலகமேயாதல் போல, நம்மனோர் பொருட்டுத் திருமால் வடிவிற் சிறுத்துத் தோன்றும் முதல்வன் தன்னிலையிற் பெருத்த இயல்பினனேயாம்: அதனால் அஃதவன் இறைமைக்கு இழுக்காகாது.

சைவசமயப் புலவர்: அற்றேல் சத்துவ குணத்தில் தோன்றிய முதல்வன், தமோ குணத்தில் தோன்றிய முதல்வனான உருத்திரனிலுஞ் சிறந்தவன் என்பதுபடக் கம்பர் இரண்டாவது செய்யுளில், "மூன்றனுள் முற்குணத்தவரே முதலோர்" எனக் கூறியது பிழையன்றோ?.

அம்பி: தந்தையாயினான் ஒருவன் தன் மக்களுள் தனக்கு நேரே பயன்படும் ஒரு புதல்வனை உயர்த்தி மற்றைப் புதல்வர்களைத் தாழ்த்திப் பேசுதல் போலத் திருமால் வடிவில் நேரே போந்து இந் நிலவுலகினர்க்குதவி புரிந்த இறைவனை உயர்த்தி அங்ஙனம் நேர்நின்றுதவி புரியாது எட்டா நிலைமையனாய் உருத்திரன் என நின்ற இறைவனை மிகுத்தப் பேசாது விட்டனர்; ஆதலால் அஃதொரு குற்றமாகாது.

வைணவப் புலவர்: இஃது எங்கள் வைணவ மதக் கொள்கையன்று எங்கள் கொள்கைப்படி திருமாலே முதற் கடவுள்; மற்றை நான் முகன் உருத்திரன் என்னும் இருவருந் திருமாலினுந் தாழ்ந்த சிறு தேவர்களே ஆவர்.(அரசனுங் கூத்தருஞ் சைவப்புலவருஞ் சினக்குறியுடையராகின்றனர்)
வரும்......10

3 comments:

குமரன் (Kumaran) said...

நன்றாய் செல்கிறது ஐயா. நடுவில் சில பகுதிகள் விடுபட்டனவோ? தொடர் சீராகச் செல்வது போல் தோன்றவில்லை. கொஞ்சம் பாருங்களேன்.

ENNAR said...

இல்லையே சரியாகத் தான் எழுதியுள்ளேன் சரி பார்க்கிறேன்

ENNAR said...

கடலில் நீந்தியவருக்கு இக்குட்டை என்ன ஆழமா? என்ன