Friday, April 21, 2006

அம்பிகாபதி அமராவதி - 5 -

முதல் நிகழ்ச்சி : இரண்டாம் காட்சி

களம்: அரண்மனையிற் கன்னி மாடம்

நேரம்: அதுவே

அரசனும் அரசியும்: (வாயில் காப்போளை நோக்கி )ஏடி தத்தே நாங்கள் வருவதை முன்னாடி சென்று அமராதிக்கு த் தெரிவி ( அவள்இருவரையம் வணங்கி விரைகின்றாள்)

(அரசனும் அரசியும் கன்னிமாடத்தினுட் செல்ல அமராவதி எதிரே வந்து)

அமராவதி: அம்மா, அப்பா வாருங்கள் வணக்கம் .

அரசனரசி: அம்பலத்தான் அருளால் எல்லா நலன்களும் பெற்று நீடு இனிது வாழ்க!
(
இருவரும் புதழ்வியுன் அமர்கின்றனர்)


அரசன்: (புன்சிறிப்புடன் ) குழந்தாய், நீ நின் அன்னையிடத்துத்தான் மிக்க அன்புடையை. எங்களை வணங்கியபோது நீ முதலில நின் அன்னையைத்தானே குறிப்பிட்டாய்.

அமராவதி: ஆம் அப்பா. ஆறறிவுடைய மக்களிலும் தாழ்ந்த ஆன் (ஆவின் - பசு)கண்றும் அம்மா என்று தாயைத்தானே அழைக்கின்றன. மக்களின் குழந்தைகளும் முதற்கண் அம்மா என்றுதானே அழைக்கின்றன. பிள்ளைமைப் பருவமுதல் இயற்கையாய் உண்டான அப்பழக்கம் முதற்கண் அம்மா என்று இப்போதும் என்னை அழைக்கச் செய்தது. அதனால் யான் உங்கள் பாற் குறைந்த அன்புடையேனென்று கூறலாகுமோ?

அரசன்: (மகளின் நெற்றிமேல் முத்தமிட்டு) அருமைச் செல்வி, நின்அறிவு மொழியை மெச்சினேன். நாங்கள் வரும்பொது யாழொலி கேட்டது; நீ யாழ்ப் பயிற்சி செய்தது கொண்டிருந்தனை போலும்.

அமரா: ஆம் , அப்பா யான் ஆசிரியர் கம்பர் பாற் சிலப்பதிகாரம் பாடங் கேட்டு வருவதுதான் உங்கட்குத் தெரியுமே அக்காப்பியத்தின் இடையிடையே அமைக்கப் பட்டிருக்கும் இனிய வரிப்பாட்டுகளை யாழிலிட்டுப் பாடி இசைப்பயிற்சி செய்து கொண்டிருந்தேன்.

அரசன்: கண்மணி, நீ இயற்றமிழோடு இசைத் தமிழ் நாடகத் தமிழ்களுங்கருத்தாய்ப் பயின்று வருவதுதான் என்னுள்ளத்திற்குப் பெருங் களிப்பினைத் தருகின்றது.

அரசி: கல்வி விளக்கே , உன் தந்தையார்க்கு மட்டு மன்று , எனக்கும் நின் முத்தமிழ்ப் பயிற்சி எவ்வளவோ பேரு வகையினைப் பயக்கின்றது ! பார் ! நின் தந்தையின் முன்னோரான கரிகாற் சோழ வேந்தரின் மகள் ஆதிமந்தி என்னும் கற்பரசி முத்தமிழ்ப் புலமை முழுதும் வாய்ந்து திகழ்ந்தமை அகநானூற்றில் காணப்படும் அவருடைய பாக்களால் நன்கறிகின்றோம் அல்லவா? அங்ஙனமே நம் சேர சோழ பாண்டியமரபில் வந்த பெண்மணிகளெல்லாரும் முத்தமிழ்ப் புலமையில் மிகச்சிறந்தே வளங்கினர்.

அரசன்: நல்லது , சிலப்பதிகாரத்தில் இப்போது நீ பயிலும் பகுதியிலிருந்து சில வரிப்பாட்டுகளை எடுத்து யாழில் இசைத்துப்பாடு.

அமராவதி:அங்ஙனமே செய்கின்றேன் அப்பா (யாழை கையில் எடுத்து வணங்கி அதனை இயக்கி பாடுகின்றாள் )

“காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும் ஊதுலைதோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சாயின் ஏதிலார் சொன்ன தெவன் வாழி யோதோழீஇ" “நண்பகற் போதே நடுங்கு நோய் கைம்மிகும் அன்பனைக் காணா தலவுமென் நெஞ்சென்றே அன்பனைக் காணா தலவுமென் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீஇ" “தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மயங்குமென் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீஇ" {அமராவதி கண்ணீர் சிந்தியபடியாய்ப் பாட அரசியுங் கண்கலங்கலுற்றாள்}

அரசன்: (இருவரையும் நோக்கி) !கண்ணகி ஆற்றாது பாடிய இவ்விரங்கற் பாக்கள் உங்கள் இருவரையும் கலங்கவைத்து விட்டது.

அரசி: ஆம், பெரும அமராவதி பாடியது கண்ணகியே நேரிருந்து ஆற்றாது பாடியதைப் போலிருந்தது. கணவன் கொலையுண்ட செய்தி தெரியா திருக்கையிலேயே அவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்த தென்று நெஞ்சம் ஐயுற்று இங்ஙனம் அழுதனளாயின் அவன் இறந்த செய்திகேட்டபின் அவள் எவ்வளவு துடி துடித்திருப்பபாளோ! ஐயோ! கண்ணகி கணவன்மேல் வைத்த காதலன்பு அளவிடற் பாலதாயில்லையே.

அரசன்: இவ்வரிப் பாட்டுகளை இயற்றிய இளங்கோவடிகள் இவை தம்மை எத்துணைத் திறமையாகப்பாடியிருக்கின்றார்.

அரசி: ஆம், பெரும கண்ணகியின் காதலுயிர் துடி துடித்த நிலையில் இளங்கோவடிகள் தாமுமிருந்து பாடினமையாலன்றோ அவை அவ்வளவு உருக்கம் வாய்ந் தனவாயிருக்கின்றன! அம்மா , அமராவதி கணவன் இறந்த செய்தி கேட்டபின் கண்ணகி துயருற்ற துயரப் பாடல்களையும் பாடு.

(அமராவதி மறுபடியும் யாழை இயக்க பாடுகின்றாள்)

“இன்புறு தங்கணவர் இடரெரி யகம் மூழ்கத் துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் மன்பதை யலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ"
அரசன்: (நெஞ்சழிந்து ) அம்மா துயர் மிகுந்த இப்பாட்டுப் போதும் , நிறுத்திவிடு.

மீதம் 6

No comments: