Sunday, April 23, 2006

அம்பிகாபதி அமராவதி - 6 -

அரசி: ஆற்றாமையிலும் ஓர் இன்பம் இருக்கின்றது பெரும! முதன்மையாய்க் காதலன்பில் பிணிப்புண்டவர் பட்ட துன்பங்களைக் கண்டுங் கேட்டும் நாம் அழும்போதும் ஓர் இன்பத்தை அடைகின்றோம் ; அல்லாக்கால் அந்நிகழ்ச்சிகளைக் காண்பதிலும் கேட்பதிலும் நமக்கு விருப்பம் உண்டாகாதன்றோ? தங்கள் கருத்து யாதோ?

அரசன்: அது மெய்யே, என்றாலுங் கணவனும் மனைவியுமாய் வாழ்பவர் தம்முள் அன்புடையராயினும் இலாராயினும், ஒருவரையொருவர் இழக்க நேருங்கால் துயருற்றுப் புலம்புவது இயற்கைதானே! அதைக் காணும் பிறரும் அந்நேரத்தில் ஆற்றாராய்க் கண்கள்அழுதலும் இயற்கைதானே அங்கயற்கண்ணி! அதைச் சிறப்பித்துப் பேசுவதில் என்ன ஏற்றம் இருக்கிறது?

அரசி: அங்ஙனமன்று பெருமாளே காதலன்புடையார் தம் பிரிவில் உண்டாகும் ஆற்றாமை அவருயிர் உடம்பில் தங்கமாட்டாத ஓர் ஏக்கத்தினை உண்டாக்கி விடுகின்றது, அதனால் அவருள் ஒருவர் மாய்ந்தக்கால் மற்றவரும் ஏங்கி உயிர் துறந்துவிடுகின்றனர். வேறு வலிய காரணத்தால் உயிர் பிழைத்திருப்பினும், நடைப்பிணமாகவோ, இவ்வுலகியலிற் பற்றற்று இறைவன்பால் உருகி ஒடுங்கியபடியாகவோ வாழ்நாளைக் கழிக்கின்றனர். காதலரைப்பற்றி மாணிக்கவாசகப் பெருமாள் திருவாய் மலர்ந்தருளியது இப்போதென் நினைவுக்கு வருகின்றது.

அரசன்: அஃதியாது?

அரசி: காகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்
ஆகத்துள் ஓருயிர் கண்டனம் யாம் இன்றி யாவையுமாம்
மேகத் தொருவன் இரும்பொழில் அம்பலவன் மலையில்
தோகைக்குந் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்பதுன்பங்களே"

இவ்வருமைத் திருப்பாட்டிற்கு இலக்கியங் கண்ணகியும் மாதவியுமாதலால், அவர் தம் நிகழ்ச்சிகளை நேரே கண்டுங் கேட்டும் இளங்கோவடிகள் இயற்றியருளிய சிலப்பதிகாரத்தால் நன்கறிகின்றனம் அரசே!

அரசன்: கண்ணகியும் மாதவியுங் கோவலனைத் தம்முமயிராகக்கருதி அன்பு பாராட்டினராயின். அவன் இறந்தமை கேட்டவுடனே அவ்விருவரும் ஏன் இறந்து படவில்லை?.

அரசி: பின்நிகழ்ச்சிகளைப் பெருமான் மறந்துவிட்டீர்கள் போலும் கோவலனைக் கள்வனெனப் பிழைத்துணர்ந்து பாண்டியன் அவனைக் கொலை செய்வித்தமையின், தன் கணவற்கு அக்குற்றம் அணுகாமைப் பொருட்டும், பாண்டியன் முறை தவறிச் செய்த குற்றத்தை அவற்கு எடுத்துக் காட்டி அவனை பழிக்குப்பழி வாங்குதற் பொருட்டுங் கொலைக்களத்திற் பட்ட தன் கணவனைக் காணுதற் பொருட்டுமே கண்ணகி சிலநாள் உயிர் தாங்கியிருந்தது, தன் நோக்கம் முடிந்தபின் தன்னுயிர் நீத்துத் தன் கணவனை நுண்ணுடம்பிற் கண்டு அவனுடன் கூடி வானுலகு புகுந்தனள். மாதவியோ தான் ,ஈன்ற அருமை மகள் மணிமேகலையின் பொருட்டுச் சிறிது காலம் உயிர் தாங்கிப் பின்னர் துறவியாகி உயிர் நீங்கினள். ஆசிரியர் இளங்கோவடிகள் இந் நிகழ்ச்சிகளைத் தெளிவாக எடுத்துச் சொலல்லியிருக்கின்றனரே!

அரசன்: இவைகளை முற்றுமே மறந்து போனேன் கண்மணி!

அமரா: அப்பா, அரசியல் நிகழ்சிகளில் கருத்து ஈடுபட்டு இருத்தலால் இவைகளை மறந்து விட்டது இயற்கைதானே அம்மா!

அரசி: அது இயற்கைதான் கண்மணி ! நாம் எந்நேரமும் மிகுதியாய்க் கல்வியிலேயே நினைவு வைத்திருப்பதால் இவை நம் நினைவை விட்டகலவில்லை. மேலும் நான் சிலப்பதிகாரம் , மணிமேகலை என்னும் நூல்களைப் பயின்றபின், கண்ணகி, மாதவி, மணிமேகலை என்னும் பெண்மணிகளின் பேரன்புங் கற்பும் என் நினைவிற் கன்மேலெழுத்துப்போற் பதிந்து, தூண்டா மணிவிளக்குப் போற் சுடர்ந்து திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அரசன்: என்ன அங்கயற்கண்ணி! ! அம்மாதர்களின் அன்பை அவ்வளவு மிகுதியாகச் சிறப்பித்துப் பேசுகின்றாய் மணஞ்செய்து கொண்ட பின் தங்கணவரிடத்தில் அன்பில்லா தொழுகும் மாதரார் தாம் யார் உளர்?

அரசி: உறவினரால் பிணைக்கப்பட்ட மண மக்களிடத்துக் காதல் அன்பும் உண்மைக் கற்பொழுக்கமுந்தோன்றி நிலைத்தல் அரிதாகவே யிருக்கின்றது. இத்தகைய சேர்க்கையில் பலர் தம் உறவினரின் கட்டுப்பாட்டுக்காகவே ஒருவர் மீதொருவர் அன்பு பாராட்டுகின்றனர்; மற்றும் பலர் கடமைக்ககாகவே வாழ்கை செலுத்துகின்றனர்; இன்னும் பலர் ,பிறர் கூறும் பழிக்கஞ்சி ஒருமித்து இருக்கின்றனர்; மேலும் பலர் முன்னமே தம்மால் விருப்பப்பட்டார் பால் உள்ளன்பும், தமக்குள் வெளியன்பும் உடையராய்க் கரந்தொழுகுகின்றனர்; இங்ஙன மெல்லாமலன்றி, மணந்து கொண்டபின் ஒருவரையொருவர் உயிராய்க் கருதியொழுகுங் கணவன் மனைவியரும் இல்லாமற் போகவில்லை.

அரசன்: அங்ஙனமாயின், அங்கயற்கண்ணி நீ என் மேல் எவ்வகையான அன்பு பூண்டு நடக்கின்றனையோ, {அரசி நாணத்தால் வாளாதிருக்க}

அமராவதி: (சிரிப்புடன்) அப்பா, அம்மாவும் நீங்களுந்தாங் காதலன்பு மிக்கவர்கள் ஆயிற்றே. உங்கள் உள்ளம் அறிந்ததொன்றை வினவினால் அம்மா எங்ஙனம் விடை சொல்லும்?


அரசி: அம்மா ! உண்மையைச் சொல்லி விடுகின்றேன். (அரசன் திடுக்கிடுகின்றான்) யான் உன் தந்தையாரைப் பாராமலும் இவரது உள்ளன்பை யான் அறியாமலும் இருக்கையில் , என் பெற்றோர்கள் இவர் தம் பெற்றோர்க்கு இணங்கி என்னை இவர்க்கே மணஞ்செய்து கொடுக்க உறுதி செய்த விட்டார்கள். அதனால், அப்போது என் உள்ளத்தில் உன்டான நடுக்கத்தைச் சிவபிரான் ஒருவரே அறிவர். எனது காதலன்புக்கு ஏற்றவர் அல்லாத ஒருவரை யான் மணக்கும் படி நேர்ந்தால் யான் என் செய்வதென்று மிகவும் கலங்கிநின்றேன்.
மணம் முடிந்த பிறகோ யான் செய்த நல்வினைப் பயத்தால் இவர்பால் எனக்குக் காதலன்பே நிகழ்ந்து எனது நடுக்கத்தைத் தீர்த்தது. நின் தந்தையாரும் இதுவரையிற் பேரன்பு டையராகவே என்பால் நடந்து வருகின்றனர். அஃது யான் பெற்ற பெறுதற்கரிய பேறன்றோ?.


அரசன்: செல்வி, அமராவதி ! நின் அன்னை 'உண்மையைச் சொல்லி விடுகின்றேன் ' என்றதைக் கேட்டவுடன் என் நெஞ்சந் திடுக்கிட்டது. எங்கே இவள் காதலன்பில்லா மனையாளாயினளோ என அஞ்சினேன்; ஆனாற் பேரன்பினள் என்பதை நெடுக அறிந்தே வருகின்றேன். நின் அன்னையின் பேரழகையுங் குணநலங் , கலைநலங்களையும் யான் கண்டது முதல், என் உயிர் ஒரு புதிய இன்ப உணர்ச்சி வாய்ந்ததாய், இவளை என் உயிராகவே கருதி வருகின்றது.

அமரா: (கை கொட்டிச் சிரித்து கொண்டு) அம்மா அம்மா, இப்போது அப்பாவுக்குக் காதலன்பு இன்னது தான் என்று தெரிந்துவிட்டது.

அரசன்: அங்ஙனமன்று கண்மணி யான் பழைய தமிழ் இலக்கியங்களைப் பயின்ற காலத்திலேயே காதலன்பைப் பற்றி அறிவேன். ஆனால், அது புலவர்களால் புனைந்து கட்டப்பட்டுச் சொல்லளவாய்க் கருதப்படுவதேயன்றி மெய்யாகவே நிகழ்வதல்ல என்றே எண்ணி வந்தேன். இப்போது நின் அன்னையின் உண்மை மொழிகளையும் கண்ணகி மாதவியின் அன்பின் திறத்தையும் நினைத்துப் பார்க்குங்கால், நம்மை யறியாமலே நமதுள்ளத்தில் நிகழும் அத்தகைய தோர் அன்பு இருக்கத்தான் வேண்டுமென் றுணர்கின்றேன்.

அரசி: பெரும என்ன என் மகளை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றீர்களே?

அரசன்: அங்கயற்கண்ணி நின் அழகையெல்லாம் வடித்தெடுத்துத் திருத்திய பொற்பாவைபோல் அமராவதி திகழ்கின்றாள் இவட்கு ஏற்ற கணவன் வாய்க்க வேண்டுமே! இவட்கு அவன்பால் காதலன்பு நிகழ வேண்டுமே ! என்பதைப் பற்றித்தான் கவலைப்படுகின்றேன்..

அரசி: அதைப்பற்றி கவலைப் படவேண்டாம். அமராவதியின் மனப்பாங்கறிந்தே மணம் முடிப்போம்.

அரசர்: அஃது எங்ஙனம் முடியும்? நாமோ மிக உயர்ந்த அரசவாழ்க்கையில் இருக்கிறோம். நம்மையொத்த சேர பாண்டிய அரச குலத்திற் பிறந்த அரசிளைஞரிலிருந்தன்றோ நாம் நம் புதல்விக்கு மணமகனைத் தேர்நதெடுத்து மணம் புரிதல்வேண்டும்? தேர்ந் தெடுக்கப் படுபவன்பால் இவட்குக் காதலன்பு நிகழாவிட்டாலும், நமது மேல்நிலையை யறிந்து இவள் அவன்பால் பேரன்பு பாராட்க் கடமைப் பட்டிருக்கின்றன ளன்றோ?

அரசி: பெரும! என் புன்சொல்லையும் நன்சொல்லா நீங்கள் செவியேற் றருளல் வேண்டும் . கணவன் மனைவியர்க்குள் உண்டாகும் அன்பு பிறர் குழைத்து ஊட்டுவதன்று அஃதவர்கியற்கையாவுண்டாவது..

தேம்போதி ஆம்பல் திகழ்மதி முன்னோ
வேங்கதிர் முன்னோ விரிந்து வாய் விளங்கும்?
கொழுஞ்சுவை மாவும் மாவுறை குயிலுங்
குழைமுகந் தோற்றிக் கூவிக் களிப்பது
பொதியத் தென்றலின் முன்னோ? அன்றிப்
புதுமை சிதைக்கும் புயற்கால் முன்னோ?
தோகை மாமயில் ஓகையில் ஆல்வது
கருமுகில் முன்னோ? கதிரவன் மெம்மையிற்
பால் நுரை யென்னப் பாக்கும்
வால்நிற மாசியின் முன்னோ? மன்னா!

அரசன்: நன்கு நுவன்றனை நங்காய் ! நீபுகல்
அல்லியும் மாவும் மெல்லிய குயிலும்
நீல மஞ்ஞையும் மாந்தரைப் போலப்
பகுத்தறி வுடைய பிறவியோ வகுத்தி! அதனால்,
தேரும் அறிவின் வழிவைத் தன்பை
ஆரச் செலுத்தல் அணங்களை யார்க்கு
மான வாழ்கையென மதித்தறி நீயே

அரசி: அன்பின் வழியது உயிர் நிலை என்ற
வள்ளுவர் வாய்மொழி பொய்யோ வள்ளால் !
உயிர்கு உயிராய் நடக்கும் அன்பின்
வழியே அறிவும் ஒழுகவ தல்லது
மாறி இயல்வதை (எங்கும்) மகாரிலும் கண்டிலம்
பிள்ளைப் பருவத்துப் பள்ளியிற் கொள்ளுஞ்
சிறார்தங் கேண்மை சிறந்ததோ? வெறாத
நெஞ்சின ராகி எஞ்சா தியாவுந்
தேர்ந்து பார்த்து நேர்ந்த கேண்மை
மைந்தரில் பார்த்து நேர்ந்த கேண்மை
மைந்தரில் மகளிரிற் சிறந்ததோ? பகரீர்

அரசன்: அன்பும் அறனும் அறிவினை முன்நிறீஇப்
பின்பு செல்லா வாயின் மண்ணோர்
அல்லற் கடலிற் பட்டுப் பல்லோர்
பழிக்க மாய்வது திண்ணம்; அதனால்
அருமைப் புதல்வி அமரா வதியுங்
காத லன்பைக் கடைக் கண் நிறுவிநம்
மேதகு நிலையை அறிவாள் அளந்தொரு
மன்னவன் மகளை மணந்து
நன்னய வாழ்கை நடத்தவே கடவள்.

அமரா: பொல்லாத இவ்வுலகிற் பொருந்தாத வாழ்க்கையினில்
ஒல்லா மனத்தோ டொருங்கிருந்து நைவதினுங்
கல்லாத நூலெல்லாங் கற்றறிந்து கண்ணுதலின்
சொல்லார் திருவடிகள் தொழுதிருப்பேன் தோன்றலே!

அரசன்: அம்மா, அமராவதி எவ்வளவுதான் கல்வியிலுங் கடவுள் வழிபாட்டிலுங் கருத்தைச் செலுத்தியிருந்தாலும், நீ திருமணமின்றி யிருத்தல் நம்குலத்திற்கு அடாது. இப்போது நீ பதினாறாண்டுக்கு மேற்பட்ட மடந்தைப் பருவத்தை அடைந்துவிட்டாய், ( தன் மனைவியை நோக்கி ) நம் பாண்டிய மன்னன் மகனும் நின் தம்பியுமான குலசேகர பாண்டியனை வருவித்துச் சிறிது காலம் நம் புதல்வியுடன் அவன் பழகுமாறு செய்வோம்.

அரசி: பொருமாள் திருவுளப்படியே
(
பணியாள் வர)
அரசன்: ஏடா , துத்தி ! உணவெடுத்தற்கு அழைக்க வந்தனையோ?

கோமாளி: ஆமா , மகராசா ! பத்து நாழி ஆனதுகூடதெரியாமல் இருக்கின்றீர்கள் உங்களுக்கு போச்சு ஆப்பிட்டா சோறுகூட வேணாம் (அரசியை நோக்கி ) சின்னம்மா, பெரியம்மா இந்த ராசாகூடா ரொம்பப் பேச்சு வச்சுக்கர்தீங்க உங்களக்கூட சோறு தின்ன விட மாட்டார்)


அரசன்: என்னடா துத்தி எந்நேரமுஞ் சோற்றையே கட்டிக்கொண்டு அழுகின்றனையே!

கோமாளி: ஆமா, மாராசா , நான் சோறுதின்னுகிட்டே ரொம்ப நாள் இருப்பேன். சோறு தின்னாமே ஒரு நாளாவது இருக்க முடியுமா?



அரசன்: உணவருந்தி பலநாள் இருப்பதில் வியப்பொன்றுமில்லை உணவருந்தாமல் சிலநாளாயினும் இருப்பது தான் வியப்பு.

கோமாளி: நம்மாள் அது முடியாது . நமக்கு மூனுவேலுயையும் சட்டதிட்டமாகச் சாப்பிடணும் என்னுடம்மைப் பார்த்தீர்களா? ( தன் தடித்த உடம்பைத் திருப்பித்திருப்பிக் காட்ட மூவரும் சிரிக்கின்றனர்) நீங்க வேளாவேலைக்குச் சாப்பிடாமே எஃகு குச்சிபோல் இளைச்சு இருக்கிறீங்கோ வாங்க போகலாம் பேச்செ வளத்தாதிங்க..

(அரசன் அவனுடன் செல்ல, அரசியரும் அரசனை வணங்கி தம் உணவரைக்கு சென்று விட்டனர்)

தொடரும்......7

No comments: