Sunday, April 30, 2006

அம்பிகாபதி அமராவதி - 12 -

கோமாளி:- (அரசனைநோக்கி) மாராசா எனக்கு ஒரு ஐயுறவு அதெக் கெஞ்சிக் கேட்கட்டுமா?

அரசன்:- கண்டபடியெல்லாம் உளறாமற் சொல்லக்கூடுமானாற் சொல்.

கோமாளி:- ( சாக்கியப் புலவரைச் சுட்டிக்காட்டி) இந்த சாக்கிய சாமி சொன்னாங்களே கடவுள் இல்லை யென்று; அது எப்படியாவது போகட்டும்; ஆனா உயிர் கூட இல்லே யின் னாங்களே, அது எப்படி ? இதோ நான் இருக்கிறேனே , என்னக் கூட பொய்யினுசொன்னா எனக்கு அழுகை வருகிறது (சிறிது ஆழுகின்றான். எல்லாருஞ் சிரிக்கின்றனர்) மாராசா, நீங்கக் கூட பொய்யா? இந்த உலகமெல்லாம் பொய்யின்னாங்களே; அப்படியான இந்த இரவைக்கி எனக்குச் சாப்பாடு? அது பொய்யாவாமே பாத்துக்குங்கோ.(எல்லோரும் மிகச்சிரிக்கின்றனர்! சாக்கிய புலவர் நாணுகின்றனர்)

அரசன்: (நகைத்துத் கொண்டு) ஏடா! துத்தி. சாக்கிய புலவர் தமது மதக்கொள்கையை எடுத்துச்சொன்னாரே தவிர, உடனே எல்லாம் பொய்யாய் விடுமென்பது அவரது கரத்தன்று. உனக்கு மும்மடங்கு மிகுதியான உணவு இன்றிரவு தரச்செய்வோம், அஞ்சாதே. (அம்பிகாபதியை நோக்கி ) ஏதும் விடையுண்டோ?

அம்பிகாபதி:- சாக்கிய புலவர் கூறிய தமது மதக்கொள்கை உலக வழக்கிற்கும் நூல் வழக்கிற்கும் அன்றோர் மென்யுணர்விற்குஞ் சிறிதும் பொருந்தியதாய் இல்லை. அஃது உலக வழக்கிற்கு முழு மாறாதல் இப்போது துத்தி நகைச்சுவையுண்டாக பேசிய சொர்காளல் வெட்ட வெளியாய் விளங்கி விட்டது. இனி கடவுளும் உயிரும் உண்டோ இல்லையோ என்னும் ஆழ்ந்த ஆராய்சியில் நாம் இப்போது நுழைய வேண்டுவதில்லை நம் பெருமான் மெய்கண்ட தேவர் தாம் அருளிச்செய்திருக்கும் சிவஞான போதத்திற்கு கடவுள் உயிர் உலகம் அல்லது பதி,பசு,பாசம் என்னும் முப்பொருள்களைப் பற்றி ஆராய்ந்துரைக்க வேண்டுவனவெல்லாம் முற்ற அராய்ந்து அவற்றின் உண்மையை முடித்துக்கூறியிருக்கின்றார். மற்று என் தந்தையார் இயற்றிஇருக்கும் இராமாவதார காப்பியச் சொற்பொருட்டன்மைகளை ஆராய்தற் பொருட்டு குழுமிய இப்புலவர் பேரவையயில் அதனை விட்டு பிற வற்றை ஆராய்தல் வெறும் கர்லப் போக்காகும். இனி, ராமன் என்றோர் அரசன் வடநாட்டில் இருந்தமை , பழைய பெளத்த சமய நூலாகிய 'தசரத ஜாதகத்திலேயே ' சொல்லப்பட்டிருத்தலின் , அவனை இல்பொருள் என்றல் பெளத்தர் தம் நூலுக்கே மாறாய் இருக்கின்றது. ஆனால், அவன் தென்னாடு போந்து இராவணனோடு போராடினான் என அது நுவலவில்லையே எனின், அவன் தென்னாடு போந்ததாக அந்நூல் நுவலாமையால் , அவன் தென்னாடு போந்த செய்தி பொய்யாக கருதப்பட்டினும், உள்ளோன் தலைவனாக நிகழாததனை நிகழ்ந்ததாக வைத்து அவன் மேலேற்றி உரைப்பது 'இல்லதினியது நல்லது என்று புலவரால் நாட்டப் பட்டதோர் ஒழுக்கமாம்' என்று தெய்வப் புலமை நக்கீரனார் உரையுரைதாராகலின் , வடமொழியில் வான்மீகி நாட்டிய அப்புணைந்தரையினையே என் தந்தையார் மொழி பெயர்ந்துப் பாடினார். அதனை என் தந்தையார் நூலுக்கு ஒரு குற்றமாகக் கூறுதல் அடாது.

வைணவப் புலவர்: இராமாயணத்தின் பின் நிகழ்ச்சி பொய்யென்னும் பெளத்தரின் கொள்கையை அம்பிகாபதியார் ஏற்று மொழிதலாலும், இராமன் மும்மூர்த்திகளிலும் மிக்கவன் என்பதனைப் புனைந்துரையென அவர் அங்ஙனமே கூறுதலாலும் கம்பர் இயற்றிய இவ்விராமாவதார நூலை வைணவராகிய நாங்கள் ஒப்புக் கொள்ளல் முடியாது.

சைவப் புலவர்: பிறப்பு இறப்பு இல்லா முதல்வனாகிய சிவபிரானைப் பார்க்கிலும், பிறப்பு இறப்பிற்பட்ட ஒரு சிற்றுயிராகிய இராமனை மேலவனாகக் கூறுங் கம்பரது இந்நூல், சைவர்களாகிய எங்களாலும் ஏற்றுக் கொள்ளபடுதல் இயலாது.



சாக்கியப் புலவர்: கடவுள் உண்டென்பதே பெறப்படாமல் இருக்கக் கடவுளே இராமனாகப் பிறந்தான் என்றலின் கம்பரத இந்நூல் பெளத்தராகிய எங்களாலும் ஒப்புக்கொள்ளப்படுதல் இயலாது.

சமணப் புலவர்: இதே காரணம் பற்றிக் கம்பராமயணத்தைச் சமண் மதத்தவராகிய யாங்களும் ஏற்றல் சிறிதும் கூடாது

கூத்தர்: கம்பர் பாடிய இவ்விராமாவதாரக் கடவுள் வணக்கமே வைணவத்தி்ற்கும் முரணாய்ச் சைவத்திற்கும் முரணாய்ச் சமண் சாக்கியத்திற்கும் முரணாய்க் காணப்படுகின்றது. அம்பிகாபதியார் கூறிய விடைகளோ சைவ சமயக் கொள்கைகளோடு இணங்கி அறிய நுட்பம் வாய்ந்தனவாயிருப்பினும், அவை கம்பர் கருத்தோடு ஒட்டியவையல்ல என்பது அதனைச் சிறிது நினைந்து பார்ப்பவரும் நன்குணர்வர். ஆகையால் இந்நூலைப் பல் சமயப் புலவரும் ஒருங்கு குழீஇய இப்பேரவையில் எங்ஙனம் அரங்கேற்றுவிப்பதென்பது எனக்கு விளங்கவில்லை. இதற்கு மன்னர் பிரானும் அமைச்சருமே முடிவு கூறவேண்டும்.

அமைச்சர்: மாபெரும் புலவர்கள் உள்ள இப்பேரவையில் நீங்கள் எல்லாரும் ஒரே சமயத்தீராயில்லாமல், ஒன்றோடொன்று ஒவ்வாப் பல்பெருஞ் சமயத்தீராய் இருகிக்கின்றீர்கள் நும்மில் பலரும் இதுகாறும் நிகழ்த்திய தடைகளால் கம்பர் இயற்றிய இவ்விராமாவதார நூல் நும்மில் அம்பிகாபதியாரைத் தவிர மற்றேவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதாயில்லை. ஆதலால் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படத்தக்கது, தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த திருக்குறளைப் போன்ற தொரு நூலாக இருந்தல் வேண்டும்.

புலவர் எல்லாரும்: ஆம்! ஆம்! திருக்குறளைப் யொத்த தொரு பொதுநூலே இப்பேரவையில் அரங்கேற்றத் தக்கதாககும்; மற்றை ஆகா.

அமைச்சர்: அங்ஙனமாயின், ஆசிரியர் கம்பர் தமது இராமாவதார நூலைச் சைவ சமயக் கொள்கைக்கேற்பச் செய்தனராயின், அதனை அவர் தில்லைக்குக் கொண்டு சென்று தில்லை வாழந்தணர் தம் அவையில் அரங்கேற்றுதலே செயற்பாலது. அன்றி, அதனை அவர் வைணவ சமயக் கொள்கைக் கேற்பச் செய்து முடித்தனராயின், அதனை அவர் திருவரங்கத்திற்கு எடுத்துச் சென்று திருமாலடியார் இடையில் அரங்கேற்றுதலே செயற்பாலது. மன்னர்பிரான் கட்டளயாதோ?


அரசன்: அறிவான் மிக்க சான்றோர்காள்! அமைச்சர் நம்பிப்பிள்ளை கூறுவது எமக்கும் பொருத்தமாகவே காணப்படுகின்றது. ஆசியர் கம்பர் இயற்றிய ராமவதார காப்பியத்தின் கடவுள் வணக்கச் செய்யுட்களே உங்களுல் எவராலும் ஏற்றுக்கொள்ளப் படாமையினை நான் வருத்தத்துடன் நேரே கண்டேன் ; ஆகையால் இந்நூலின் மற்றை பெரும்பகுதி முழுவதும் உங்களால் ஏற்றுக்கொள்ளப்படுமோ என ஐயுறுகின்றோம் . சமண் சாக்கிய புலவர்கள் எவருமே இதனை ஏற்கமாட்டார்கள் என்பது வெளிப்படை. . எஞ்சிய சைவராதல் வைணவராதல் இதனைஏற்பார்களானால் இதனை அவ்விருவருள் ஒரு குழுவினரிடையே அரங்கேற்றுவித்தலே நன்று. ஆசிரியரது கருத்து யாதோ.?

கம்பர் : மன்னர் பிரான் திருவுள்ளங்கருதுமாறே யான் இந்நூலை முதலில் தில்லை மாநகருக்கு எடுத்துச் சென்று அங்கே தில்லைவாழந்தணரிடையில் இதனை அரங்கேற்ற முயல்வேன் அவரதற்கு இடம் தாராராயின் பின்னர் திருவரங்கத்திற்குச் சென்று திருமாலடியார் நாப்பண் இதனை திண்ணமாய் அரங்கேற்றி வருவேன். யான் இன்னமொரு கிழமையில் இங்கிருந்து புறப்படுவதற்று அரசர் பெரும! விடையளித்தருளல் வேண்டும்.

அரசன்: அவ்வாரே செய்தருள்க புலவர் பிரானே! நம்பிப்பிள்ளே ! ஆசிரியர் தில்லையும் திருவரங்கத்திற்கும் சென்று தமது நூலை அரங்கேற்றி வரும் வரையும் அவருக்காகுஞ்செலவுகளுக்கு சிறிதும் குறைவின்றி நிரம்பப் பொன்னும் ஏவலாட்களும் ஊர்திமுதலியவைகளும் கொடுத்து வழி அனுப்பிவையுங்கள்.(எழுந்து புலவரணைவரையும் வணங்கி ) மாலை 9 நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது. நுங்களை நெடுந்நேரம் இன்று இவ்வகையில் நிறுத்தி வைத்துவிட்டோம். பிழைபொருத்தருள்க.

(எல்லொருஞ் செல்ல விடைதர)

புலவர் அனைவரும் :- மன்னர் பெருமா! பன்னெடுங்காலம் ஆழிசூலகில் வாழியர் பெரிதே

( அமைச்சரைத்தவிர மற்யையோர் அனைவரும் போய்விடுகின்றனர்)
வரும் .........13

No comments: