சேழன்: நல்லாய் ! சொன்னாய் பொருத்தந்தான். உங்கள் பாண்டியன் அரசவையில் நடைபெறும் முறையினையே நீ நுவல்கின்றனை போலும்!
சோழன் மனைவி: ஆம், பெருமானே! சமயநூல் கொள்கைகள் ஒன்றுக்கொன்று நிரம்பவும் மாறுபடுகின்றன ;அக்கொள்கைகள் உள்ள நூல்களை என் தந்தையார் தமது புலவர் பேரவையில் ஒரோவொருகால் அரங்கேற்றுவிக்க இடம்கொடுத்ததிற் புலவர்க்குள் உள்ளக் கொதிப்புஞ் சீற்றமும் மிகுந்தன, அது கண்ட பிறகு சமய நூல்களைப் பொதுப் பேரவையில் அரங்கேற்ற விடுவதில்லை, அவைகளை அவ்வச் சமயிகள் குழுவிலேயே அரங்கேற்ற ஒழுங்கு செய்தனர்.
சோழன்: நல்லது நாமும் அங்ஙனமே செய்யலாமா? என்று கேட்டுத் தெளியக் கூத்தரது வருகை உதவி செய்யுமனறோ?.
(கடம்பன் கூத்தருடன் வருகிறான்)
அரசனும் அரசியும்: ( இருக்கையை விட்டெழுந்து) புலவர் பெருமானுக்கு வணக்கம் .
அரசன்: ஓய்வு நேரத்தில் தங்களை இவண் வருவித்த பிழைபொருத்தருளல் வேண்டும், அமருங்கள்
கூத்தர்: நீங்கள் இருவரும், பொன்னியும், புனலும்,போல, யாழும்,இசையும் போல நீடு இனிது வாழ்க ! குழந்தாய் குலோத்துங்க, எந்நேரமாயிருந்தாலும் உன்னையும் பேர்தியையுங் காண்பதில் யான் மிக மகிழ்கின்றேன் , இருவரும் இருக்கையில் அமருங்கள்.
அரசன்: என் மூதாதைக்குத் தாங்கள் ஆசிரியருந் தெய்வமுமாய் இருந்தீர்கள். எனக்கோ தாங்கள் முதுமையினால் ஆசிரியராய் இல்லாவிடினும், யான் வழிபடுந் தெய்வமாகவே யிருக்கின்றீர்கள். ஆகையால் புலவர் குழுவில் நிகழும் ஏதொரு நிகழ்ச்சிக்கும், அரசியலில் தோன்றும் சிக்கலான எந்த நிகழ்சிக்கும் தங்களையும் தங்கள் சூழ்ச்சியையுமே துணை கொண்டு நடந்து வருகின்றே.
கூத்தர்: குழந்தாய், அஃதுண்மையே, இப்போதென்னை வருவித்தது எதற்காக? தெரிவி.
அரசன்: நமது புலவர் பேரவையிற் பாவலர் மணியாய் விளங்குங் கம்பர் வான்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துப் பெருங்காப்பியமாய்ப் பாடி இருப்பது தாங்கள் அறிந்தது தானே?
கூத்தர்: ஆம். அவர் அதனை நமது புலவர் பேரவையில் அரங்கேற்ற விரும்புகின்றார். நம் தமையனாரான சடையப்பவள்ளலும் அதனை அங்ஙனமே செய்விக்கக விரும்புகின்றார்.
அரசன்: அவ்வாறு செய்யலாமா? என்பதைப்பற்றித் தங்களிடம் கலந்து பேசத்தான் தங்களை இங்கு இவ்வளவு விரைந்து வருவித்தேன்.
கூத்தர்: நல்லது. அதைக் குறித்து நம்மருமைக் குழந்தை அங்கயற்கண்ணியின் கருத்தென்னை?
அரசன்: நாமோ சைவ சமயத்திற் குரியவர்கள். கடவுளுக்குப் பிறப்பு, இறப்புச் சொல்வதை மாணிக்கவாசகர் முதலான நம் சமயாசிரியரோ சிறிதும் ஒப்பாதவர்கள். அங்ஙனமிருக்க , இராமன் என்னும் ஓர் அரசனைத் தெய்வமாக்கிப் பாடிய இராமாயணத்தை நமது பேரவையில் ஏற்றிச் சிறப்பிப்பது தகாதென்று அங்கயற்கண்ணி கூறுகின்றாள், மேலும், வைணவ மதத்திற்குரிய ஒரு நூலைப் பன்மதப் புலவருங் குழுமிய நமது பேரவையில் ஏற்றிக் கேட்பதும் அவர்க்கெல்லாம் வருத்தத்தினைத் தருமெனவும் சொல்கிறாள். (செல்லித் தன் மனைவியைப் பார்கின்றான்)
அரசி: ஆம் பாட்டா! கம்பர் தாம் பாடிய இமராமாயணக்கதையை அதற்குரிய வைனவப் புலவர் குழுவில் அரங்கேற்றுதலே முறையாகும். தங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.
கூத்தர்: ஆமாம், கண்ணன் கதை நம் தமிழ் நாட்டிற் புகுந்து நம் தமிழ் மக்களின் முழுமுதற் கடவுள் நம்பிக்கையினை மாற்றிக் கெடுத்துவிட்டது: இப்பொது கம்பர் கொணர்ந்திருக்கும் இவ்விராமன் கதையோ அந்நம்பிக் கையினை இன்னும் பாழாக்கிவிடுமென்பதிற் சிறிதும் ஐயமில்லை, ஆகையால், அதனை நமது புவர் பேரவையில் ஏற்றிப் பாராட்டுவது நமது நாட்டுக்குப் பெருந் தீங்கினையே விளைவிப்பதாக மன்றி மற்றென்னை?
அரசன்: அங்ஙனமாயின் அதனை நமது பேரவையில் ஏறவிடாமல் செய்வதற்கு வழி தெரிவித்தல் வேண்டும். கம்பர் முன்னம் எனக்கா சான் இன்றெமது மகளுக்காசான்.
3 comments:
ஐயா, சில சந்தேகங்கள். சைவ சமய நூலான திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) அரங்கேற்றப்பட்டது அரசவையிலா இல்லை சைவ சமய அவையிலா? தெளிவுறுத்துங்கள்.
கூத்தர் பெருமான் சடையப்ப வள்ளலுக்கு தமையனாரா?
சடையப்ப வள்ளல் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சடையப்பப் பிள்ளை என்று படிப்பது இது தான் முதன்முறை. பிள்ளை என்பது தேவர் என்று சோழவரசர்கள் வைத்துக் கொண்டதைப் போல் பெருமை நோக்கிய அடைமொழியா இல்லை இனப்பெயரா?
சடையப்பரும் கூத்தர் பெருமானும் எப்படி சோழமாதேவிக்கு பாட்டனார்கள் ஆனார்கள். சோழமாதேவி பாண்டியன் மகளா? அப்படியென்றால் சடையப்பரும் கூத்தர் பெருமானும் பாண்டிய அரசக்குலத்தவரா?
கூத்தர் பெருமான் சொல்லுவது சமய வெறியுடன் கூடியது போல் இருக்கிறதே! எப்படி கண்ணன் கதை தமிழ்நாட்டில் புகுந்து தமிழ்மக்களின் முழுமுதற்கடவுள் நம்பிக்கையைக் கெடுத்துவிட்டது? இராமன் கதை அந்த நம்பிக்கையை இன்னும் பாழாக்கிவிடும் என்றும் சொல்கிறாரே? இது முறையா? கண்ணன் கதையும் இராமன் கதையும் திரிவிக்கிரமன் கதையும் மற்ற அவதாரங்களின் கதையும் சங்கப் பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் புகழப்பட்டுள்ளனவே? அப்படி இருக்க கம்பரின் காலத்தில் தான் அவை தமிழகத்தில் புகுவதைப் போலவும் அது தமிழ் மக்களின் இறை நம்பிக்கையைக் கெடுத்துவிட்டது போலவும் அன்றோ இருக்கின்றன இந்த வரிகள். இதனை ஒட்டக்கூத்தர் சொல்லியிருப்பாரா? அப்படி சொல்லியிருந்தாலும் அது மத வெறியாகத் தான் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒரு வேளை இவற்றிற்கு இனி வரும் பாகங்களில் பதில் வருமோ? நான் தான் கொஞ்சம் அவசரப் படுகிறேனோ?
//கூத்தர் பெருமான் சடையப்ப வள்ளலுக்கு தமையனாரா? //
இல்லை கூத்தர் முதலியார் வகுப்பினர் சடையப்பர் வெள்ளாளர்
//சடையப்ப வள்ளல் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். சடையப்பப் பிள்ளை என்று படிப்பது இது தான் முதன்முறை. பிள்ளை என்பது தேவர் என்று சோழவரசர்கள் வைத்துக் கொண்டதைப் போல் பெருமை நோக்கிய அடைமொழியா இல்லை இனப்பெயரா?//
இனப்பெயர்
ஒரு வீட்டில் ஒரு கணக்கப்பிள்ளை இருப்பார் அவரை அந்த வீட்டு எஜமான் வா போ என சொல்லுவார் எஜமானரது மகன் அண்ணன் என அழைப்பார் எஜமானது பெயரன் பெரியப்பா என அழைப்பார் அதுபோலதான் இதுவும். கூத்தர் அரசகுலத்தவர் இல்லை
இறைவன் என்பவன் யார்? ஆதியும் அந்தமும் இல்லாதவன் இறப்பும் பிறப்பும் இல்லாதவன்
அதனால்தான் பிற வாயா க்கை ப் பெரி யோன் என்பர் சிவனை.
ஆனால் திருமால் அப்படியில்லையே தங்களது சந்தேகங்களுக்கு விடை வரவிருக்கிறது காரசாரமான விவாதங்களும் உண்டு லாவணி கச்சேரிபோல
//கூத்தர் பெருமான் சொல்லுவது சமய வெறியுடன் கூடியது போல் இருக்கிறதே! //
இந்தக் காலத்தில், இதே இணையத்திலேயே, இவ்வளவு மத வேறுபாடுகளைக் கண்டபின்னுமா, இந்தக் கேள்வி!?
//ஆகையால் புலவர் குழுவில் நிகழும் ஏதொரு நிகழ்ச்சிக்கும், அரசியலில் தோன்றும் சிக்கலான எந்த நிகழ்சிக்கும் ......
தங்களையும் தங்கள் சூழ்ச்சியையுமே
.........துணை கொண்டு நடந்து வருகின்றேn.//
கதைக்கான களனைத்தான் இந்த வரிகள் மூலம் ஆசிரியர் தெரிவித்து விட்டாரே!
3-ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Post a Comment