வைணவப் புலவர்: இதுவும் எமது வைணவமதக் கொள்கை யன்று. இது சைவமதக் கொள்கை. இராமபிரான் திருமாலினும் மிக்க கடவுள் தன்மை உடையன் என்பதே எமது கோட்பாடு.
கம்பர்: இராமனது தெய்வத் தன்மையைப் பற்றிக் கூறிய செய்யுட்களைப் படித்துக் காட்டினால் அவரது கருத்தின் மெய்மை தெற்றென விளங்கும்.
{கம்பர் தமது நூலின் இடையிடையே இராமனது தெய்வத் தன்மையினை நுவன்ற பாடல்களைப் படித்து முடிவாக}
"முளரிமேல் வைகுவான் முருகற் றந்தஅத்
தளிரியல் பாகத்தான் தடக்கை ஆழியான்
அளவிஒன் றாவரே யன்றி ஐயமில்
கிளவியர் தனித்தனி கிடைப்ப ரோதுணை"
என்னுஞ் செய்யுளைப் படித்தனர்
வைணவப் பலவர்: இது தான் எமது மதம்! மும்மூர்த்திகளுந் தனித் தனியே எம் இராமபிரானுக்கு ஒப்பாக மாட்டா ரென்பதே எமது கொள்ளை, இவ்விடத்தே கம்பர் சொல்லியது முற்றிலும் பொருத்தமே.
(அரசன், அமைச்சர், சைவப்புலவர் முகங்சிவக்கின்றனர்)
கூத்தர்: (சீற்றத்துடன் எழுந்து) ஈதென்ன பேதைமை! "பிறவா யாக்கைப் பெரியோன்" என இளங்கோவடிகளாலும், "தாயுமிலி தந்தையிலி தான்றனியன் காணேடீ"என மாணிக்கவாசகராலும், "தந்தையாரோடு தாயிலர் தம்மையே, சிந்தியா எழுவார் வினை தீர்ப்பாரல், எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ" எனத் திருஞானசம்பந்தராலும் வழுத்தப்பட்ட முழுமுதற்கடவுளான சிவபொருமான் எங்கே, கோசலையின் வயிற்றில் கருவாய்த் தங்கிப் பிறந்து தன்னரசையும் மனைவியையும் இழந்து. அரக்கரொடு பலநாள் வருந்திப் போராடி, அகத்தியர் ஈந்த சிவபிரான் வில்லாலுங் கணையாலும் அவரை மடித்துப், பின் தன் மனையாளையும் அரசையும் பெற்று வைகி, நாட்செல்லச் சரயு நதியில் வீழ்ந்து மாண்ட இராமன் எங்கே! இத்தகைய இராமனை மும்மூர்தியினுஞ் சிறந்தவன் என்றலினும் மிக்கதொரு மடமையுண்டோ? சொல்லுமின் புலவீர்காள்!
வைணவப் புலவர்: கொள்கைகளைப் பற்றிப் பேசுங்கால்'பேதைமை, 'மடமை' முதலான வசைச் சொற்களை வழங்கி எதிர்ப் பக்கத்தாரை இகழ்தல் முறையன்று
கூத்தர்: "அரனதிகன் உலகளந்த அரியதிகன் என்றுரைக்கும் அறிவிலார்க்கு" என்றுரைத்த விடத்து, 'அறிவிலார்' என்னும் வசைச்சொல்லால் இருபக்கத் தாரையுங் கம்பர் இகழ்ந்து பேசியிருக்கின்றனரன்றோ? யாம் வழங்கிய அவ்விரண்டு சொற்களும் மெய்யறிவில்லாமையைத் தெரிவிக்கின்றதாகலின், அவ்வாறு சொல்லியதை ஒரு குற்றமாக எடுத்தலாகாது.
அரசன்: எடுத்த பொருளை விடுத்துச் சொற்குற்றம் பார்த்தல் நன்றன்று, உண்மை காணும் வேட்கையுடன் நிகழ்த்தப்படும் இவ்வழக்கில் தவறி வசைச் சொற்கள் சில வரினும் அவற்றை நீங்கள் பாராட்டலாகாது. ஆயினும, "யாகாவா ராயினும் நாகாக்க" என்னுந் தெய்வத் திருக்குறளை நுங்களெல்லார்க்கும் பணிவுடன் நினைப் பூட்டுகிறேன். அது நிற்க, 'மும்மூர்த்திகளுந் தனித்தனியே இராமனுக்கு ஒப்பாகார்' என்ற கம்பருரை பொருந்துமா? என வினாவியதற்கு இன்னும் விடைவந்திலது.
அம்பிகா: மன்னர்பிரான் கட்டளைப்படியே அதற்கு யான் அறிந்த விடை கூறுவேன்," முளரிமேல் வைகுவான்" எனுஞ் செய்யுளின் கருத்துப் பொருள் என் தந்தையார் கருத்தன்று; அது சுக்கிரீவன் கருத்து. இராவணனாற் கவர்ந்து கொள்ளப்பட்ட சீதை தன் மெய்யினின்றுங் கழற்றி யெறிந்த அணிகலன்களைச் சுக்கிரீவன் கொணர்ந்து இராமனுக்குக் காட்ட, அவன் அவற்றைக் கண்டு சீதையின் பிரிவை யாற்றானாய் மிக நைந்து உணர்வற்றுக் கீழே விழ, அவனை சுக்கிரீவன் தாங்கி, அவன் அப்பெருந் துயர் நீங்கி மனக்கிளர்ச்சி கொள்ளுமாறு, 'மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்தால்உனக்கு ஒப்பாவரேயன்றி அவர் தனித்தனியே நினக்கு ஒப்பாகார்' என உயர்வு நவிற்சியால் கூறிய புனைந்துரையை என் தந்தையார் கருத்தாகத் துணிதல் தக்க தன்று.
(கூத்தரும் அரசனும் மகிழ்சிக் குறி காட்டுகின்றனர்)
சைவப்புலவர்: சுக்கிரீவன் கருத்தாக அவ்வாறு கம்பர் கூறுதலுங் குற்றமேயாம். மூம்மூர்த்திகளுந் தனித்தனியே இராமனுக்கு ஒப்பாகார் என்பதற்கு மேற்கோள் பண்டைச் சான்றோர் அருளிச்செய்த தமிழ் நூல்களிலாதல், வடமொழி நூல்களிலாதல் இருக்கின்றனதா? மேற்கோள் காட்டாக்கால் அக்கூற்றுக் குற்றமேயாகும்.
சமணப்புலவர்: (எழுந்து) காணப்பட்ட இவ்வுலகமும் ,இவ்வுலகத்தியங்கும் உயிர்களுமே நம் பொறி புலன்களாலும் அறிவாலும் அறியப்படுகின்றன. இவற்றின் மேம்பட்ட கடவுள் என்றொரு பொருள் உண்டென்பது எவ்வாற்றாலனுந் துணியப் படவில்லை. அங்ஙமிருக்கக் கடவுளென்றொரு பொருள் உண்டென்றும், அக்கடவுளும் ஒன்றாயிராமல். சிவன், மாயன், நான்முகன் என மூவராய் உளரென்றும், மாயனே இராமனாய்ப் பிறக்க அவ்விராமன் மாயனிலும் ஏனையிருவரிலும் ஏற்றம் மிக்கவனென்றும் புகல்வன வெல்லாஞ் சிற்றறிவினாரை ஏமாற்றி, அவர் தம்முட் கலாம் விளைத்து, அவ்வாற்றால் தம் பிழைப்புக்கு வழிசெய்து கொண்டவர் கட்டி வைத்த குருட்டுக் கதைகளே யன்றி வேறல்ல. அத்தகைய பொய்யை ஒரு காப்பியமாகப் பாடிய கம்பரது செயல், ஒரு முயற்கொம்பின் மேலேறிச் சென்று வான்வெளியில் ஒரு மாளிகை கட்டுவதற்கே ஒப்பாயிருக்கின்றது!
சாக்கியப் புலவர்: கடவுளென்றொரு பொருள் உண்டெனட்பது எவ்வாற்றானும் அறியப்படாமை போலவே, உயிர் என்று ஒரு பொருள் உண்டென்பதும் எவ்வாற்றானும் அறியபடவில்லை. இவ்விரண்டின் வேறாக உலகம் என்பதொரு பொருளும் உண்மையில் இல்லை.இல்லாதவற்றைஉள்ளனவாகக் கனவின்கண் உணரும் மயக்கவுணர்வே கடவுளும், உயிரும், உலகமும் உண்டென நனவின் கண்ணும் மயங்கியுணர்கின்றது. இம்மயக்கந் தீர்ந்தவழி அம்மூன்று பொருளும் இல்லையா என்பதே முடிவு. இல்பொருளான கடவுள் இல்பொருளான இராமன் என்னும் ஓர் உயிராகப் பிறந்த தென்றலும், பிறந்து இல் பொருளான இவ்வுலகின்கண் இல் பொருளான இராவணனைக் கொன்ற தென்றலும், எல்லாம் முழுப்பொய். மெலும் வான்மீகி இராமாயணத்திற்கு முற்பட்ட எமது 'தசரத ஜாதகம்' இராமன் தென்னாடு போந்ததாக ஏதும் நுவலவில்லை. அவன் கங்கையாற்றங்கரையிலேயே தன் தங்கை சீதையுடன் சில காலந் தங்கியிருந்து; தன் தந்தை இறந்தபின் தனது நகர்க்கு மீண்டேகிச் சீதையை மணந்துகொண்டு அரசு செலுத்தினான் என்னுமளவே கூறுகின்றது. ஆகவே இராமாயணங் கூறும் நிகழச்சிகள் அத்தனையும் முழுப்பொய்யும் புரட்டுமேயாகும்; அதனாற் பொய்யான இராமனைப் பொய்யான மும்மூர்திகளுந் தனித்தனியே ஒவ்வாரென்பதும் பொய்; (இதைக் கோட்டு அவையினர் எல்லாரும் நகைக்கின்றனர்)
வரும் ....12
2 comments:
வாத விவாதங்கள் நன்றாகச் செல்கிறது. :-)
நன்றி குமரன்
Post a Comment