அரசி: ஆம், பெரும! கூத்தர் கல்வியிலும் , சிவநேயத்திலும் , நற்குணங்களிலும் சிறந்தவரேயாயினும் அவர் நந்தமிழ்ப் புலவர்கள் பால் அழுக்காறு மிக உடையர்; மேலுந் தாம் இளமை காலத்தில் தமக் காகாத புலவர்களைக் காளிக்கு வெட்டிப் பலியிட்டாரென்பதை நான் செவியுற்ற கால முதல் அவர்பால் எனக்கு பயமுண்டு,
அத்தகையவர் புலமையிற் சிறந்த கம்பர்பால் மனஎரிச்சலின்றி இருப்பாரா? கம்பர் நமது புலவர் பேரவையில் இராமாயணத்தை அரங்கேற்றக் கூத்தர் விடாரென்பது தீர்மானந்தான்.
அரசன்: அற்றேல் உனக்கும் எனக்கும் இருந்த ஒரு பெருங்கவலை தீர்ந்ததன்றோ? ஆனாலுங் கம்பர் மனம் புழுங்குமே என்பதனை நினைக்க நினைக்க ஒருபால் வருத்தமும் உண்டாகின்றது.
அரசி: அதற்கு நாம் என்செய்வது! கம்பர் நல்ல புலவர்தாம். காளி கோயிற் குருக்களாயிருந்து, அம்மைக்குஞ் சிவபெருமானுக்குத் தொண்டுசெய்து தாம் அரிதிற்பெற்ற மகனுக்கும் அம்பிகாபதி எனப் பெயர் வைத்துச் சைவ வுணர்ச்சி மிகுந்தவராயிருந்தும், அவர் இராமன் கதையைப் பாடியது ஓர் இழுக்கன்றோ?
அரசன்: கம்பர் அது பாடியதன் கருத்து யாதோ! ஒரு கால் இவ்வாறிருக்ககலாம் ; என் பாட்டனார் விக்கிரமசோழர் சிவத்தொணடிற் சிறந்தவரேனும் , வைணவ மதத்திலும் ஈடுபட்டார். அவருக்கு மிக நெருங்கிய தோழரான நம் சடையப்ப பிள்ளையும் , அவரது சேர்க்கையால் தாமும் வைணவத்தில் மிக ஈடுபட்டுச் "சரராமன்" என்று ஒரு பட்டப் பெயருந் தாமே சூடிக்கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு இசைந்தே அவராற் பெரிது பேணப்படுங் கம்பரும் இராமாயணம் படினார் என்று எண்ணுகின்றேன்.
அரசி: அது மெய்யாயிருக்கலாம். . நம் தமிழ்ப் புலவர்களில் பெரும்பாலார் தமக்குப் பொருளுதவி செய்வார் எவராயினும் அவரை வரைகடந்து உயர்த்திப் பாடிப் புகழ்ந்து விடுகின்றனர்; அவர் விரும்பியபடி யெல்லாந் தமது பெருமையும் கருதாது செய்கின்றனர்; மெய்யான நமது சைவசமயக் கொள்கையினையும் மெல்ல நழுவவிடுகின்றனர்! தம்போன்ற புலவர்க்குப் பிறர் பொருளுதவி செய்யக் கண்டாலும் வயிறெரிந்து விடுகின்றனர்! திருவள்ளுவரைப் போல் மானங்காத்தொழுகுவார் அரியராய் இருக்கின்றனரே!
அரசன்: ஆமாம், கம்பரும் இக்குற்றங்களுக்கு ஆளாகாதவர் அல்லர். என் முன்னோர் தந்தை வாணியன்தாதன் என்னும் பெரும்புலவர்க்குப் பரிசுகள் வழங்கிச் சிறப்புச் செய்தபோது, கம்பர்ட அது கண்டு மனம்பொறாது அப்புலவர்மேல் வசைபாட, அப்புலவருங் கம்பர்மேற் சீற்றங் கொண்டு வசை பாடினர். இது புலவர்க்குள் இயற்கையாய் விட்டது! பிறரைத் திருத்தவல்ல கலைவாணரே தாந் திருந்தாராயின் அவரைத் திருத்தவல்லார் யார்! அது நிற்க, நம் அருந்தவப் புதல்வி அமராவதியை யான் இரண்டு மூன்று நாட்களாய்ப் பார்க்கவில்லை. கன்னி மாடத்திற்குச் சென்று அவளைப் பார்ப்போம் வா.
(இருவரும் போகின்றனர்)
Thursday, April 20, 2006
அம்பிகாபதி அமராவதி - 4 -
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வள்ளுவருக்கு இயற்பெயரே 'திருவள்ளுவர்' என்பதா?
இது நான் படித்திராத ஒன்று.
'திரு' இடைச்செருகல் என்றே நான் அறிந்திருக்கிறேன்.
கம்பன், கூத்தன் பற்றிய குறிப்புகளைப் படித்தால் வியப்பாக இருக்கிறது!
இந்தப் புலவர்களோடு பழகிய காரணத்தாலும், தாமும் அவ்வினத்தைச் சேர்ந்ததாலுமே,
"அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்" [4 - 35]
என வள்ளுவர் பாடினாரோ?!
போட்டியும் பொறாமையும் புலவர்களின் பரம்பரைச் சொத்து வள்ளுவரின் பெயர் தாங்கள் கூறியபடி இருக்கலாம். அரசபையில் இருக்கும் புலவர்; வந்த புலவருக்கு மன்னன் பரிசளிக்கும் போது அதை எப்படி தடுக்கலாம் என்ற நோக்கத்தில் தான் இருப்பான் உதாரணம் நக்கீரன்
Post a Comment