Monday, April 24, 2006

அம்பிகாபதி அமராவதி - 8 -

இரண்டாம் நிகழ்ச்சி: முதற் காட்சி



களம்: சோழன் அரண்மனையிற் புலவர் மண்டபம்

நேரம்: பிற்பகல்



அரசன்: (அமைச்சர் நம்பிப் பிள்ளையை நோக்கி) ஐய! இப்பங்குனி திங்களிலேயே வெயிலின் கடுமை மிகுதியாக இருக்கின்றது! பகல் 25 நாளிகை ஆனமையால் இப்போது தான் வெயிலின் கடுமை தனிந்து வருகின்றது புழுக்கத்தை மாற்றி தென்றல் காற்று மெல்லென வீசுகின்றது . சண்பகம் சந்தனம் முல்லை மெளவல் முதலான மலர்களின் நறுமணத்தில் அளைந்து வருதுலால் இம் மலையக்கால் நம் உடம்புக்கும் உயிருகு:ம் எவ்வளவு ஆறுதலையும் கிளர்ச்சியையும் தறுகின்றது! பாருங்கள்

அமைச்சர்: ஆம் பெருமானே! கொழுந் தமிழ் நறவினை பருகும் புலவர் பெருமக்கள் குலாம் ஒருங்கு கூடியிருந்து அகப்பொருள் புறப்பொருள்களை நுணுகி ஆராய்ந்தின்புறுவதற்கு ஏற்றதோரிடமாக இம் மண்டபம் அமைக்கப்பட்டிருப்பது தான் பெரிதும் பாராட்டற்பாலது! இதனை சூழ்ந்துள்ள இளமரக்காவில் மணங்கமழ் மரஞ்செடி கொடிகள் அழகுற அமைந்து பசுந்தலை நெருங்கி பல நிறப்பூக்கல் உடையவாய் பகலவன் வெப்பந்தோன்றாவாறு தண்ணிழல் பயந்து நிற்கின்றன; இம் மரத்தொகுதிகளின் இடை யிடையே பளிங்கை உருக்கி நிறைத்து விட்டார் போல் குளிர்ந்த நீர் நிரம்பிய வாவிகள் அமைந்து விளங்குகின்றன; அவ்வாவிகளில் அகன்ற இலைகளின் ஊடே ஊடே அல்லியும் தாமரையும் முறுக்கவிழ்ந்த மலரினவாய்த் திகழ அம்மலர்களிலும் இலைகளிலும் பெரியவுஞ் சிறியவுமான புள்ளினங்கள் பறந்து பறந்தமர்கின்றன. மரக்கோடுகளிலும் பூங்கொடிகளிலும் இருந்து குயில்கள் கூவுகின்றன. நாகணவாய் பாடுகின்றன; இவையெல்லாம் நம் உணர்வினை இயற்கையழகின் வயப்படுத்தி நமதுள்ளத்தினை எத்துணைப் பெருங்களிப்பின்கண் தோய்த்து விடுகின்றன.

அரசர்: ஆம் நம்பிப்பிள்ளை. என் முன்னோரான சோழவேந்தர்கள் தமிழமிழ்தை ஆரப்பருகித் தெவிட்டா அவ்வின்பத்தில் வாழ்நாள் முழுதும் திளைத்தவர்கள் . ஆதலால், அகத்தே தாம் துய்த்த அப்பேரின்ப பெருக்கை புறத்தே இவ்வமைப்பிலும் பெருக விட்டு களிகூற்தற்கே இப்புலவர் மண்டபத்தையும் இதனைச் சூழ்ந்த இளமரக்காவையம் வழிவழியே இவ்வளவு அழகுடையவாகச் சீர்செய்த வந்தார்கள். ! இன்னேரத்திற்கு தாங்கள் நமது புலவர்பேரவையினை கூட்ட ஒழுங்கு செய்தது எவ்வளவு நல்லதாய் யிருக்கின்றது!

அமைச்சர்: இப்போது நடைபெறப் போகுங் கம்பராமாயண அரங்கேற்றத்தால் நம்புலவர் குழுவிற் பெரும் போராட்டம் நேரும். ஆதலால் அது தணிதற்கு இரவில் நெடுநேரஞ் செல்லுமெனக் கண்டே, எப்போதும் போல் மாலைப் பொழுதில் இவ்வவையினைக் கூட்டாமல் முன்னதாக இப் பிற்பகலிலேயே இதனைக் கூட்ட ஒழுங்கு செய்தேன் மன்னா!

அரசன்: அது நன்றே ஆனாலும் கம்பர் இராமாயாணத்தை இங்கு அரங்கேற்றாமல் செய்ய கூத்த முதலியாரிடம் கூறிவிட்டேன்.

அமைச்சர்: நானும் முதலியாரிடம் நெடு நேரம் பேசினோம். கம்பர் கல்வியிற் பெரிய புலவர் பெருமானாய் இருத்தலுடன், முன்னே தங்கட்கும் பின்னே இளவரசிக்கும் ஆசானாகவும் இருக்கிறார். பேர் உழைப்பிற் பாடிய அப்பெருங்காப்பியத்தை அவர் தமது புலவர் கழகத்திற் கொணர்ந்து அரங்கேற்ற இடம் கொடுக்க வில்லையேல் அவர்கு நம்மாட்டு மிக்க மனவருத்தம் உண்டாகும். அதுவேயுமன்றிக் கூத்தர்க்கும் அவர்க்கும் புறந்தோன்றாப் பகைமை நீண்ட காலமாய் வேரூன்றியிருக்கின்றது; அதனால் அவரது சொற்கேட்டே நடுவின்றித் தாங்கள் இராமாயாணத்தை அரங்கேற்ற மறுத்தீர்களென்னும் பழிச் சொல்லும் உண்டாம்.

அரசன்: (பதைத்து)அற்றேல், அவர் நூலை அரங்கேற்றுவதற்கு ஒழுங்கு செய்து விட்டீர்கள் போலும்.

அமைச்சர்: இல்லை அரசே, இன்றுடன் அரங்கேற்றம் முடிந்து போகும். நம் புலவர்கள் இடுஞ் சொற்போரால் உடனே அது முடிவுக்கு வருதலைக் காண்பீர்கள்!

கோமாளி: மாராசா, புலவர் சண்டையை நிறுத்தாதிங்க, ஊருச் சண்டே கண்ணுக்குக் குளிர்ச்சி.



அரசன்: (நகைத்து) ஏடா துத்தி, புலவர் சண்டை கண்ணுக்கு மட்டுமன்று ; அஃது அறிவுக்கும் குளிர்ச்சிதான்

{
ஒட்டக்கூத்தர், கம்பர், அம்பிகாபதி, மற்றும் புலவர்கள் பிறரும் வருகின்றனர்}

அரசன்:(இருக்கையினின்றும் எழுந்து) புலவர் பெருமான்கட்கு வணக்கம். எல்லீரும் இருக்கையில் அமர்ந்தருள்க!
(
எல்லோரும் அமர்கின்றனர்)


அமைச்சர்:(உடனே எழுந்து நின்று) வேந்தர் பெருமானுக்கும், இப்பேரவையில் அமர்ந்திருக்கும் நல்லிசைப் புலவர்க்கும் பிறர்க்கும் எனது வணக்கம். அறிவான் ஆன்ற சான்றோர்களே! நம் மன்னர் பெருமான் நிறுவியிருக்கும் இப் புலவர் பேரவையிற் பெருந்தமிழ்ப் புலவரும் பாவலருமான உங்களாலும் மற்றவர்களாலும் மிகப்பாராட்டப்படுங் கம்பநாடர் "இராமாயணம்" என்னும் பெருங்காப்பியத்தைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடி இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்ததொன்றேயாம். அதனை, அவர் இங்கே அரங்கேற்றக் கொணர்ந்திருக்கின்றனர். முதுமையிலும், முதுதமிழ்ப் புலமையிலும் இப் புலவர் பேரவைக்குத் தலைமையாசிரியராய் அமர்ந்திருக்குங் கூத்த முதலியார் இதைப்பற்றித் தமது கருத்தைத் தெரிவிக்குமாறு நம் வேந்தர் பெருமான் விரும்புகின்றார்கள்.

கூத்தர்: அரசர் ஏறே! அமைச்சர் பெருந்தகையே! அருந்தமிழ் வல்ல பெருந்தமிழ்ப் புலவர்களே! கல்வியிற் சிறந்த கம்பர் இயற்றியிருக்கும் "இராமாவதாரம்" என்னும் பெருங்காப்பியத்தை நாம் எல்லாருங் கேட்டு மகிழவேண்டுவதே செயற்பாலது. இங்கமர்ந்திருக்குங் கலைவாணரின் கருத்து யாதோ?

மீதம் ...9

8 comments:

குமரன் (Kumaran) said...

அருந்தமிழ்ச்சொற்கள் பல இங்கு ஆளப்பட்டுள்ளன. அவற்றில் என் மனத்தை மிகவும் கவர்ந்தது மலையக் கால். ஆஹா. என்ன அருமையான சொல். எல்லோரும் மலையமாருதம் என்று தென்றலைச் சொல்லுவார்கள்; மலையமாகிய பொதிகை மலையிலிருந்து புறப்பட்டு வரும் காற்று என்று பொருள் படும் வடமொழிச் சொல் இந்த மலைய மாருதம். கால் என்றாலும் காற்று என்று தான் பொருள். அதனைப் பயன்படுத்தி மலையமாருதத்தை அழகாக மலையக்கால் ஆக்கிவிட்டாரே மறைமலையடிகள். அருமை. அருமையிலும் அருமை.

ENNAR said...

இளமரக்கா
என்றுதான் உள்ளது நண்பரே
இளமரக்கா என்றால் வயல் சூழ்ந்த சோலை என்று பொருள்

நன்றி

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஒரு அருமையான தமிழ் இலக்கியத்தை இங்கு வலைப்பதிவின் மூலம் கொடுத்து வருகிறீர்கள் என் போன்ற தமிழ் மாணாக்கனுக்கு இது ஒரு அறுசுவை படையல். நன்று வாழ்த்துக்கள்.

ENNAR said...

நன்றி நல்லது குமரன்

குமரன் (Kumaran) said...

//சண்பகம் சந்தனம் முல்லை மெளவல் முதலான மலர்களின் நறுமணத்தில் அளைந்து வருதுலால் இம் மலையக்கால் நம் உடம்புக்கும் உயிருகு:ம் எவ்வளவு ஆறுதலையும் கிளர்ச்சியையும் தறுகின்றது! பாருங்கள்
//

இச்சொற்றொடரில் வந்த மலையக் காலைச் சொன்னேன் என்னார் ஐயா.

இளமரக்கா என்றால் என்ன என்றும் புரிந்தது. இந்த நாடகத்தில் இருக்கும் அரிய தமிழ்ச்சொற்களுக்கு விளக்கமாகவே ஒரு தனிப்பதிவு போடலாம் என்று எண்ணியிருக்கிறேன். நீங்கள் நாடகம் முழுவதையும் வலையில் ஏற்றி முடித்தவுடன் அதனைச் செய்யலாம் என்று உள்ளேன். நாடக ஆசிரியர் அருமையாக எழுதியிருக்கிறார். நாடகப்பாத்திரங்கள் சொல்லும் செய்திகளில் எனக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்கள் புழங்கும் தனித் தமிழ்ச் சொற்கள் அருமை. நிறைய கற்றுக் கொள்ளலாம்.

ENNAR said...

//சண்பகம் சந்தனம் முல்லை மெளவல் முதலான மலர்களின் நறுமணத்தில் அளைந்து வருதுலால் இம் மலையக்கால் நம் உடம்புக்கும் உயிருகு:ம் எவ்வளவு ஆறுதலையும் கிளர்ச்சியையும் தறுகின்றது! பாருங்கள்
//
இதுவும் சரி சிலப்பதிகாரத்தில் வரும் பாருங்கள்
பொழில் தரு நறு மலரே, புது மணம் விரி மணலே,
பழுது அறு திரு மொழியே, பணை இள வன முலையே,
முழு மதி புரை முகமே, முரி புரு வில் இணையே,
எழுது-அரு மின் இடையே-எனை இடர் செய்தவையே.
இதுவும் எனக்குப் பிடிக்கும் இதை அந்த நிலையை அனுபவித்தவன்.இதற்கொரு பதிவு எழுதுகிறேன் பின்
நீங்கள் கூட நான் எழுத எழுத அதற்கான விளக்கம் கொடுக்கலாமே

ஜெயஸ்ரீ said...

அய்யா,

உங்கள் நாடகத்தின் எல்லா பாகங்களையும் படித்து வருகிறேன்.
அருமையாக உள்ளது.
உங்கள் இயற்கை வர்ணனையும் அதில் வரும் சொற்களும் மிக அழகாக இருக்கின்றன.

நீங்கள் சொல்லும் சிலப்பதிகாரக் கானல் வரிப் பாடலில்


"திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே"

என்ற வரிகள் தமிழ் இலக்கியத்தில் சேய்மை அண்மைக் காட்சிகளுக்கான மிகச் சிறந்த உதரணமாகச் சொல்லப்படுகிறது

ENNAR said...

ஜெயஸ்ரீ வாருங்கள்
திரை விரிதரு துறையே - அலைகள் பரந்த நீர்த் துறையும், திரு மணல் விரி இடமே - அழகிய மணல் பரந்த இடமும், விரை விரி நறுமலரே - மணம் விரிந்த நறிய மலரும், மிடைதரு பொழில் இடமே - தருக்கள் நெருங்கிய சோலையினிடமும், மரு விரி புரிகுழலே - மணம் பரந்த சுருண்ட கூந்தலும், மதி புரை திருமுகமே - மதியை யொக்கும் அழகிய முகமும், இரு கயல் இணைவிழியே - இரண்டு கயல்போலும் இருவிழியும், எனை இடர் செய்தவையே-என்னைத் துன்புறுத்தியவை யாகும்;


அதாவது மார்கழி மாதம் மலர்கள் பூத்த செடிகள் அதை என்னால் இன்று இப்பொழுது விளக்க நேரமில்லை தண்ணீர் ஓடி காய்ந்து போன அந்த ஒழுங்கை அதாவது வாரி அந்த இடத்தில் உட்கார்ந்து நண்பர்களுடன் (ஆண்) கதை (சினிமா) பேசிய நாட்களை என்ன வென்றுசொல்வேன் அப்பொழுது ஒரு காற்றடிக்கும் அந்த மலர்களின் வாசம் அப்படி ஒரு சுகம் பக்கத்துக் குளத்தில் இருகையாலும் தண்ணீரை அள்ளி குடித்தால் கையிலுள்ளது அசுத்தம் என மாடுகள் போலே வாயை வைத்து குடித்த அந்த காலத்தைச் சொல்லவா? பக்கத்து மாமரத்தில் மாங்காயைப் பறித்துத் தின்றதைச் சொல்லவா? இனி அப்படி பட்ட காலங்கள் யாருக்கும் கிடைக்காது. பரந்த மணலில் துண்டை விரித்து படுத்தால் அதன் சுகமே தனி
எதைச் சொல்ல நினைத்தாலே இணிக்கும் அந்த காலம்